நடுவானில் காற்றுக் கொந்தளிப்பு: ஸ்பைஸ்ஜெட் செய்த தவறுகளால் பயணி மரணமடைந்தாரா?

நடுவானில் காற்றுக் கொந்தளிப்பு: ஸ்பைஸ்ஜெட் செய்த தவறுகளால் பயணி மரணமடைந்தாரா?

மகாராஷ்டிரத்திலிருந்து மேற்கு வங்கம் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில் காயமடைந்த பயணி ஒருவர் கடந்த மாதம் மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்திருக்கிறது.

கடந்த மே 1-ம் தேதி, மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையிலிருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகருக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி-945 விமானம் சென்றுகொண்டிருந்தது. போயிங் பி737 ரக விமானமான இதில் 100-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

துர்காபூரில் தரையிறங்குவதற்கு முன்னதாகக் காற்றில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக விமானம் குலுங்கியது. இதில் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது. எனினும், துர்காபூர் விமான நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், காயமடைந்தவர்களுக்கு எல்லா விதமான மருத்துவ உதவிகளும் அளித்துவருவதாகத் தெரிவித்திருந்தது.

இந்தச் சம்பவத்தில் முதுகுத் தண்டில் பலத்த காயமடைந்த அக்பர் அன்சாரி(48) எனும் பயணிக்கு துர்காபூர் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும், சிகிச்சை பலனின்று செப்டம்பர் 29-ல் அவர் மரணமடைந்தார். இந்தத் தகவலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, அக்பர் அன்சாரி மரணமடைந்ததற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும், விமான ஊழியர்களும் செய்த தவறுதான் காரணம் என அவரது சகோதரர் அக்தர் அன்சாரி கூறியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 1-ம் தேதி நாங்கள் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் காற்றுக்கொந்தளிப்பில் சிக்கியபோது, நான் என் சகோதரர் அருகில் அமர்ந்திருந்தேன். திடீரென புயலில் சிக்கியதுபோல விமானம் பல முறை குலுங்கியது. முதல் முறை விமானம் குலுங்கியபோதே என் சகோதரர் அமர்ந்திருந்த இருக்கையின் சீட்பெல்ட் உடைந்துவிட்டது. அவர் விழுந்துவிடாமல் இருக்க அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள முயன்றோம். எனினும் அவர் இருக்கையிலிருந்து தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார்” எனக் கூறியிருக்கிறார்.

காற்றுக் கொந்தளிப்பு ஏற்படுவது குறித்து விமான ஊழியர்கள் பயணிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், காயமடைந்த அக்பர் அன்சாரிக்கு உரிய முதலுதவி அளிக்கப்படவில்லை என்றும் அக்தர் அன்சாரி குற்றம்சாட்டியிருக்கிறார். எனினும், காற்றுக் கொந்தளிப்பு தொடர்பாகப் பயணிகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், சீட் பெல்ட் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியிருக்கிறது. ஒரு சிலர் சீட் பெல்ட் அணியாததால் காயமடைந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன், இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் நடந்துவருவதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தியாவில் காற்றுக் கொந்தளிப்பின் காரணமாக நிகழ்ந்த மரணம் ஏற்படுவது இரண்டாவது முறை ஆகும். 1980-ல், மேற்கு வங்கத்தின் ராம்பூர்ஹட் அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது. இதில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றுக் கொந்தளிப்பு என்றால் என்ன?

விமானப் பயணங்களின்போது காற்று கொந்தளிப்பு ஏற்படுவது உண்டு. காற்றின் திசையில் ஏற்படும் மாறுபாடு, வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம், உயரமான மலைகள் அல்லது கட்டிடங்கள் இருக்கும் பகுதிகளின் மீது பறக்கும்போது ஏற்படும் இயந்திரக் கொந்தளிப்பு உள்ளிட்ட காரணிகளால் இதுபோன்ற கொந்தளிப்புகள் ஏற்படும். பெரும்பாலும் இவற்றால் பெரிய அளவில் ஆபத்துகள் ஏற்படுவதில்லை. கொந்தளிப்புகள் ஏற்படும்போது விமானம் குலுங்கும் என்பதால் பயணிகளுக்கு அது பீதியூட்டும் அனுபவமாக அமையும். விதிவிலக்காக, சில சமயம் பயணிகள் காயமடைவது உண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in