சேவையை நிறுத்திய ஸ்பைஸ்ஜெட்: விமான வசதியை முற்றிலுமாக இழந்த சிக்கிம்!

சேவையை நிறுத்திய ஸ்பைஸ்ஜெட்: விமான வசதியை முற்றிலுமாக இழந்த சிக்கிம்!

சிக்கிம் மாநிலத்தின் பாக்யோங் விமான நிலையம், இந்திய - சீன எல்லை அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 605 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை, 2018-ல் பிரதமர் மோடி திறந்துவைத்தார். பாக்யோங் கிராமம் அருகே, 4,500 அடி உயரக் குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த விமான நிலையம், இந்தியாவின் உயரமான விமான நிலையங்களில் ஒன்று ஆகும். சிக்கிம் மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குப் பெரும் துணையாக இருந்துவருகிறது.

இந்தியாவின் 100-வது விமான நிலையம் எனும் பெருமையையும் பெற்றது. எனினும், வானிலை மோசமாக இருந்ததால் பல மாதங்களுக்கு எந்த விமானமும் செல்ல முடியாத நிலை உருவானது. பின்னர் 2019-ல் விமான சேவை அனுமதிக்கப்பட்டது. எனினும், 2019 ஜூனில் மீண்டும் நிறுத்தப்பட்டது. மோசமான வானிலை பிரச்சினையுடன், தரையிறங்கும்போது ஏற்பட்ட சிரமங்களும் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டன.

பின்னர், விமானம் தரையிறங்குவதில் புதிய முறைகள் பரிசீலிக்கப்பட்டதையடுத்து, விமான சேவையை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் சேவை மட்டுமே சிக்கிமுக்குக் கிடைத்துவந்தது. டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களிலிருந்து பாக்யோங் விமான நிலையத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் சென்றுவந்தன.

இந்நிலையில், பாக்யோங் விமான நிலையத்துக்கான விமான சேவையை நிறுத்திக்கொள்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால், சிக்கிம் மாநிலத்துக்குக் கிடைத்துவந்த ஒரே விமான சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதுதொடர்பாக, பாக்யோங் விமான நிலைய இயக்குநருக்குக் கடிதம் எழுதியிருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அக்டோபர் 30-க்குப் பின்னர் விமான சேவையை நிறுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறது. விமானம் செலுத்துவதில் எதிர்கொள்ளும் செயல்பாட்டுப் பிரச்சினைகளை இதற்குக் காரணமாகச் சொல்லியிருக்கிறது ஸ்பைஸ்ஜெட்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in