ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கை விரைந்து முடியுங்கள்: விசாகா கமிட்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கை விரைந்து முடியுங்கள்: விசாகா கமிட்டிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய ஐஜி முருகன், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்பி கடந்த 2018-ம் ஆண்டில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் பெண் எஸ்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, 2019-ம் ஆண்டு ஐ.ஜி. முருகன் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முருகன் மீதான புகாரை விசாரிக்க ஏற்கெனவே அமைக்கப்பட்ட விசாகா குழு தற்போது மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே அமைக்கப்பட்ட விசாகா கமிட்டிக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தற்போது அந்த கமிட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் தன் மீதான புகாரை தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டுமென சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in