ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு நாளை தொடக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள், கோடை கால சுற்றுலா, புண்ணிய தலங்கள் செல்லும் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில் வாரியம் பல்வேறு சிறப்பு ரயில்களை அடிக்கடி இயக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி சென்னை- நாகர்கோவில் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி நாகர்கோவில் - தாம்பரம் இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் (06042) டிச.26 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி 2 பெட்டி , இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி 11 பெட்டி, இரண்டாம் வகுப்பு 3 பொதுப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியுடன் 1 பெட்டி இணைக்கப்படுகிறது.

நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்தில் அதிவிரைவு ரயில் (06020) நாகர்கோவிலில் இருந்து ஜன.1 மாலை 4:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண அதிவிரைவு ரயில் (06019) தாம்பரத்தில் இருந்து ஜன. 2 மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

இந்த ரயில்களில் குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி 1 பெட்டி, குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி 5 பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி 11 பெட்டி, இரண்டாம் வகுப்பு 2 பொதுப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதியுடன் 1 பெட்டி இணைக்கப்படுகிறத இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை (டிச.23) காலை 8 மணிக்கு துவங்குகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in