
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக சபரிமலை செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி சில தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், டெல்டா மாவட்டங்கள் வழியாக சபரிமலைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையினை ஏற்று சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் ரயில் நிலையம் வழியாக முதன்முறையாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தாம்பரத்திலிருந்து எர்ணாகுளம் வரையிலும் இயக்கப்பட உள்ள இந்த ரயில் விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம்(கொச்சி) செல்கிறது.
இந்தச் சிறப்பு இரயிலில் செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வெகு அருகில் உள்ள புனலூர் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து நேரடியாக பம்பைக்கு கேரள அரசின் சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை ரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் ரயில் வழித்தடத்தை பயன்படுத்திஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்பழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி பக்தர்கள் யாத்திரை செல்லலாம்.
எதிர்வரும் 28-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதிவரை வாராந்திர ரயிலாக இயக்கப்பட உள்ளது. திங்கள் தோறும் எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் செவ்வாய் பகலில் தாம்பரத்தைச் சென்றடைகிறது. அங்கிருந்து அன்றைய தினம் மாலையில் புறப்படும் இந்த ரயில் புதன்கிழமை மாலை எர்ணாகுளம் சென்றடைகிறது. ஸ்லீப்பர், 3ஏ/சி, 2ஏசி, மற்றும் முன்பதிவில்லா இரண்டு பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகளோடு இயங்கும்.
டெல்டா மாவட்ட மக்கள் நேரடியாக சபரிமலைக்கும், கேரள பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயிலுக்கு டெல்டா மாவட்ட மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.