
திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு மயிலாடுதுறையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகை விழாவுக்காக மயிலாடுதுறையிலிருந்து சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று திருக்கார்த்திகைக்கு மயிலாடுதுறையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.6 மற்றும் டிச.7( செவ்வாய் மற்றும் புதன்கிழமை) ஆகிய இரு தினங்களுக்கு மட்டும் காலையில் மயிலாடுதுறையில் புறப்படும் 06990 என்ற பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த ரயில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு காலை 9.15 மணிக்குச் செல்லும். அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு காலை 10.55 மணிக்குச் செல்கிறது.
திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் 2.15 மணிக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேர்கிறது மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்பவர்கள் இந்த ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில் அறிவித்த ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.