சிபிசிஐடியால் மன உளைச்சல்; கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் தீக்குளிக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

சிபிசிஐடியால் மன உளைச்சல்; கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் தீக்குளிக்க முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

பணி ஓய்வுபெற 5 நாட்களே உள்ள நிலையில் மனித உரிமை ஆணையத்தில் மனு அளிக்க வந்த உதவி ஆய்வாளர் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. லாக்கப் மரணத்தில் சிபிசிஐடி போலீஸார் சம்பந்தமே இல்லாமல் என் பெயரை சேர்த்து விசாரணை என்ற பெயரில் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (59). இவர் வடுகூர் காவல் நிலையத்தில் சட்ட, ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் சீருடையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் மனு அளிக்க வந்துள்ளார். அப்போது ஆணைய அலுவலக வளாகத்தில் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு நீதிபதி பாஸ்கரன் முன்பு ஆஜர் செய்து விட்டு பின்னர் அபிராமபுரம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முருகானந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பெருகவழந்தான் காவல் நிலையத்தில் தனிப்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் என்ற கைதி காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், இந்த வழக்கில் தேவையில்லாமல் சிபிசிஐடி போலீஸார் என் பெயரை இணைத்து விசாரணை என்ற பெயரில் மன உளைச்சல் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 நாட்களில் பணி ஓய்வுபெற உள்ள நிலையில் சிபிசிஐடி போலீஸார் இன்னும் இந்த வழக்கை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வந்தபோது தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. மனு அளிக்க வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம் வெள்ளை பேப்பரில் தனது புகைப்படத்தை ஒட்டி அதில் தன் கைப்பட எழுதிய கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் மனுவுடன் இணைத்து வைத்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in