கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பொய் செய்தி பரப்பியதாக பத்திரிகையாளர் திடீர் கைது

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் அவரது கடிதம் குறித்து பொய் செய்தி வெளியிட்டதாக இணைய தள ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் எழுந்துள்ளது.

அறம் இணைய தளம் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார். வழக்கு நடைபெற்று வரும் வேளையில் மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என்பதை தடயவியல் கோர்ட்டில் தெரியப்படுத்தியிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

சக்தி தனியார் பள்ளியில் நடந்த கலவர வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பல்வேறு நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் நிறுவனர் பொன்னுசாமி கூறுகையில், மூத்த பத்திரிகையாளரும், அறம் இணையதள ஊடக ஆசிரியருமான சாவித்திரி கண்ணனை சைபர் கிரைம் போலீஸார் எனக் கூறி கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் தனிப்படை போலீசார் இன்று (11.09.2022) வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்து சுதந்திரத்தைப் பறித்து, ஊடகவியலாளர்களின் குரல் வளையை நெரித்து விட்டால் நீதி கேட்டு குரல் கொடுப்பவர்களை எளிதில் பின் வாங்கச் செய்து விடலாம் என நினைக்கும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனங்கள். மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in