கேரள மருத்துவ, இறைச்சிக் கழிவுகள் கொட்ட வந்த 7 லாரிகள் பறிமுதல்: தனிப்படை அதிரடி நடவடிக்கை

கேரளத்தில் இருந்து கழிவைக் கொண்டுவந்து கொட்டிக் கைது செய்யப்பட்டவர்கள்
கேரளத்தில் இருந்து கழிவைக் கொண்டுவந்து கொட்டிக் கைது செய்யப்பட்டவர்கள்

கேரளாவில் இருந்து மருத்துவ, இறைச்சிக் கழிவுகளை தென்மாவட்டங்களில் கொட்டுவதைத் தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் இறைச்சி, மருத்துவக்கழிவுகள், கட்டட இடிபாடுகளை திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நீர் நிலைகளும் அசுத்தமாகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில்,: கேரள கழிவுகள் கொட்டப்படுவதைத் தவிர்க்க தென் மாவட்ட கனரக வாகன உரிமையாளர்களிடம் விளக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் இரண்டு, ஆலங்குளத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுகளைக் கொண்டு வந்த 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கேரளாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. தென்காசி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வந்த புனலூர் கிருஷ்ணகுமார், திருநெல்வேலி புரோக்கர் கருப்பசாமியை கைது செய்துள்ளார்" என கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in