சளி, இருமல் இருக்கிறதா?- நாளை ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்!

சளி, இருமல் இருக்கிறதா?- நாளை ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்!

"தமிழகத்தில் நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்" என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் இன்ஃபுளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1166 ஆக அதிகரித்துள்ளது. நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவில் நேற்று 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு இருக்கும்போது அந்நாட்டு அதிபர் ஜோப் பைடன் கரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அங்கு ஐந்து அலைகள் வந்ததிற்கு பிறகு முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லி அஜாக்கிரதையாக இருக்க விரும்பவில்லை. கரோனா வைரஸின் உருமாற்றம் வேறு வேறு உருவத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஓமைக்ரான் வைரஸ் 7 வடிவத்தில் இருப்பதாக சொன்னோம். தற்போது அது பல வடிவங்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது.

கேரளாவில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே நான்கைந்து மாநிலங்களில் கரோனா பதிப்பு கூடுதலாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 500க்கு குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னை மற்றும் கோவையில் கரோனா பாதிப்பு கூடுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. அங்கு கரோனா காட்டுக்குள் இருக்கிறது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in