
சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா இன்று தஞ்சாவூரில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தஞ்சை மாநகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
சோழர்களின் சாம்ராஜ்யத்தை கடல் கடந்தும், வடநாடு வரையிலும் படையெடுத்துச் சென்று விரிவுபடுத்தியவரும், காலத்தால் அழியாத கலைப் பொக்கிஷமான தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டியவருமான மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த நாளை ராஜராஜசோழன் சதயவிழாவாக ஆண்டுதோறும் தஞ்சையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு சதய விழா நேற்று (நவ.02) விழா தொடங்கியது. சதயவிழாவின் முக்கிய நாளான இன்று காலை மங்கல இசையுடன் விழா தொடங்கியது. பின்னர், தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, ராஜராஜசோழன் மீட்டெடுத்த, தேவார நூல்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தேவார நூல்களை யானை மீது ஏற்றி, மங்கல வாத்தியங்கள், சிவ பூத இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 48 ஓதுவார்கள், தேவாரம் பாடியபடி, கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலை ஊர்வலமாக சென்றடைந்தது.
அங்கு, மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
குஜராத்திலிருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன், உலகமாதேவி உலோகசிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். அப்போது, ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைக்கு ராஜா, ராணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு தேவார நூல்களை மீட்க சென்ற போது அங்கு ஓதுவார்களால் இசைக்கப்பட்ட ஷகோட யாழ் என்ற அழிந்து போன பழமையான இசைக்கருவி, தற்போது மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு அது ராஜராஜசோழன் முன்பாக இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இன்று இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் சதய விழா நிறைவு பெறுகிறது.
சதய விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில், ராஜராஜ சோழன் சிலை, மணிமண்டபம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அனைத்தும் பலவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மின்னலங்காரத்தால் தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது
படங்கள்: ஆர்.வெங்கடேஷ்