மனைவியை அறைந்த கணவனுக்கு ஓராண்டு சிறை; 3 ஆண்டு பேசவும் தடை!

குடும்ப வன்முறை -சித்தரிப்புக்கானது
குடும்ப வன்முறை -சித்தரிப்புக்கானது

ஸ்பெயின் தேசத்தில் மனைவியை அறைந்த கணவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மனைவியிடமிருந்து குறிப்பிட்ட தொலைவில் தள்ளியிருக்கவும், 3 ஆண்டுகளுக்கு தகவல்தொடர்புக்கு தடை விதித்தும் தீர்ப்பளித்திருக்கிறது.

ஸ்பெயினின் வடக்கு நகரமான சொரியாவில் வசிக்கும் ஒரு தம்பதி இடையே, டிக்டாக் வீடியோ லைவ் ஸ்ட்ரீம் பதிவின்போது திடீர் சண்டை மூண்டது. அப்போது மனைவி மீதான கோபத்தில் அவரை கணவர் அறைந்திருக்கிறார். லைவ் டிக்டாக் மூலமாக ஆயிரக்கணக்கானோர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வீடியோவினை காவல்துறைக்கு அனுப்பினார்கள்.

ஸ்பெயின் நாட்டில் குடும்ப வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உண்டு. பாலின சமத்துவத்தை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் அங்கே செயல்படுகின்றன. மனைவிக்கு பொருளாதார வசதி இல்லை என்றாலும், அதனை முறையிட்டு இலவச வழக்கறிஞர் உதவியை நாடலாம். குடும்ப வன்முறை புகார்களைத் தெரிவிக்க ஹாட்லைன் வசதியும் அங்கே உண்டு.

தற்போதைய சம்பவத்திலும், கன்னத்தில் அறைவாங்கிய மனைவி முன்வந்து புகார் அளிக்காதபோதும், வீடியோ பதிவினை ஆதாரமாக்கி நீதிமன்றமே முன்வந்து வழக்கினை விசாரிக்க ஆரம்பித்தது. வழக்கு விசாரணையின்போதும், கணவருக்கு எதிராக மனைவி குற்றம்சாட்ட மறுத்து விட்டார். ஆனபோதும், வழக்கை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம் கணவருக்கான தண்டனையை உறுதியை செய்தது.

ஒரு மாத காலத்தில் விரைந்து முடிந்த வழக்கு விசாரணையின் நிறைவாக, மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 3 ஆண்டுகளுக்கு மனைவியை எந்த வகையிலும் தொடர்புகொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மனைவி புழங்கும் இடத்திலிருந்து 1000 அடி தள்ளியே கணவன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. ஸ்பெயின் மக்களிடையே இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in