‘வெல்லும் தமிழ்!’ -சொற்குவையில் குவிந்தன 10 லட்சம் சொற்கள்!

சொற்குவை தளம்
சொற்குவை தளம்
Updated on
1 min read

சொற்குவை என்பது தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கம் உருவாக்கியது ஆகும். இந்த சொற்குவை இணையதளத்தில் தொகுக்கப்பட்டு வரும் தமிழ் சொற்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழ் மொழி உலக மொழிகளில் தொன்மைமிக்கது. இலக்கணச் செறிவுடையது. இலக்கிய வளம் கொண்டதோடு மிக விரைவாக வளர்ந்து வரும் அனைத்து அறிவியல் துறைகளுக்குமான கலைச்சொற்களைத் தன் சொல்வளத்திலிருந்தே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை வாய்ந்தது. இத்தகைய தமிழ்மொழியில், சொல்லின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கு உரிய வழிகாட்டுதல் தேவையாகிறது. இதற்கு சொற்பிறப்பியல் அகராதி அவசியம்.

தமிழ்மொழியின் அனைத்துச் சொற்களையும் தொகுத்து, அச்சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் பொருள்விளக்கம் அளித்து, அச்சொற்கள் தோன்றி வளர்ந்த வேர்ச்சொல் விளக்கத்தையும் வழங்கி, அரிய சொற்களுக்குப் படவிளக்கத்துடன் கூடிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிகளை உருவாக்கி இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கல்விப்புலத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட துறைகளில் புழங்கும் கலைச்சொற்களை யெல்லாம் திரட்டி அவற்றிற்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை வடிவமைத்து, இணைய தளத்தின் பொதுவெளியில் வெளியிடுவதும் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சொற்களையும் ஒன்றுதிரட்டி; தமிழின் சொல்வளத்தை உலகறியச் செய்வதுமே ‘சொற்குவைத்’ திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. இதற்கான Sorkuvai.com இணையதளத்தின் வாயிலாக தமிழ்க் கலைச்சொல் தொடர்பான ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உருவாக்கித்தரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய தமிழ்க் கலைச்சொற்களை இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அச்சொற்கள் பரிசீலனைக்குப் பின்னர் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொதுவெளி பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யபடும் சொற்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in