பஞ்சாபின் புதிய முதல்வர் யார்?

இன்று மாலைக்குள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு
பஞ்சாபின் புதிய முதல்வர் யார்?
கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங், நேற்று (செப்.18) விலகியிருக்கும் நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருக்கிறது. புதிய முதல்வரின் பெயரைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவ்ஜோத் சிங் சித்து, சுனில் ஜாகர், சுக்ஜிந்தர் ரந்தாவா, பிரதாப் பாஜ்வா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

கேப்டன் ராஜினாமாவின் பின்னணி

போதைமருந்து கடத்தல், சட்டவிரோத சுரங்கங்கள் என்பன உள்ளிட்ட பிரச்சினைகளைக் கையாள்வதில் அமரீந்தர் சிங் சுணக்கம் காட்டியதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சமீபகாலமாக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என யாரும் அமரீந்தர் சிங்கை எளிதில் அணுக முடியவில்லை என்றும், தலைநகர் சண்டிகரில் உள்ள அரசு இல்லத்தில் தங்கியதைவிடவும் தனது பண்ணை வீட்டில்தான் அவர் அதிகம் தங்கியிருந்ததாகவும் கட்சிக்குள் அதிருப்தி நிலவியது. முதல்வருக்குப் பிடிக்காதவர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் புகார்கள் எழுந்தன.

எல்லாவற்றையும் விட, தேர்தல் வாக்குறுதிகளை அமரீந்தர் சிங் நிறைவேற்றவில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பொதுவெளியில் வைத்து கடுமையாக விமர்சித்துவந்தார் சித்து. தொடர்ந்து ட்விட்டரில் அமரீந்தர் அரசைப் பற்றிய விமர்சனங்களை எழுதிவந்தார்.

இருவருக்கும் இடையில் மோதல் உச்சமடைந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி சித்துவுக்கு வழங்கப்பட்டது. எனினும், பஞ்சாபில் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கட்சியின் தலைமை கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமரீந்தர் சிங் நேற்று ராஜினாமா செய்தார்.

நவ்ஜோத் சிங் சித்து
நவ்ஜோத் சிங் சித்து

சித்து ஒரு தேசத் துரோகி’

சித்துவை முதல்வராக ஏற்க முடியாது எனும் முடிவில் தீவிரமாக இருக்கும் அமரீந்தர் சிங், அதற்கான முயற்சிகள் நடந்தால் அதைக் கடுமையாக எதிர்க்கப்போவதாக எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. “சித்து ஒரு தேசவிரோதி, ஆபத்தானவர், ஸ்திரத்தன்மை அற்றவர். தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பொறுப்பைக் கூட ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியாதவர் எப்படி முழு பஞ்சாபையும் நிர்வகிக்க முடியும்?” என்றெல்லாம் அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இன்று மாலைக்குள் பஞ்சாபின் புதிய முதல்வர் யார் எனத் தெரிந்துவிடும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.