காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் அசோக் கெலாட்டா?

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் அசோக் கெலாட்டா?

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர், வரும் செப்டம்பர் 21-ல் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டை சோனியா காந்தி சந்தித்திருக்கிறார். தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரிடம் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து அடுத்த தலைவர் அசோக் கெலாட்டா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது. உறுதியான தலைவர் இல்லாததாலும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்படாததாலும் கட்சி தொடர்ந்து பின்னடவைச் சந்திப்பதாக ஜி-23 தலைவர்கள் விமர்சித்துவருகிறார்கள்.

கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சோனியா காந்தியோ முதுமை காரணமாகவும், உடல்நிலை சரியில்லாததாலும் முன்பைப் போல் செயல்பட முடியவில்லை. பிரியங்கா காந்தியும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. எனவே, சோனியா குடும்பத்துக்கு வெளியே வேறு மூத்த தலைவர்கள் யாரையேனும் தலைவர் பதவிக்குக் கொண்டுவரலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

மூத்த தலைவர்களின் வரிசையில் இப்போது அசோக் கெலாட்டின் பெயர் அடிபடுகிறது. குறிப்பாக, நேற்று சோனியா காந்தியின் அழைப்பின்பேரில் டெல்லி சென்று அவரைச் சந்தித்தார் அசோக் கெலாட்.

எனினும், தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் தயாராக இல்லை என்றே தெரிகிறது.

கட்சிக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க அகமதாபாத் செல்வதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்த அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, “ராகுல் காந்தி தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டால்தான் காங்கிரஸ் கட்சி புத்தாக்கம் பெறும் என நான் மீண்டும் மீண்டும் கூறிவருகிறேன். அவர் தலைவர் பொறுப்பை ஏற்காவிட்டால், கட்சியினர் ஏமாற்றமடைந்துவிடுவார்கள். கட்சியும் பலவீனமடைந்துவிடும். எனவே, கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் தொடர்ந்து பேசி சம்மதிக்கவைக்க முயற்சிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

ஆனால், தலைவர் பதவியை ஏற்கப்போவதில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் திக்விஜய் சிங் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார். எனவே, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை யார் ஏற்கப்போகிறார் எனும் கேள்வி இன்னும் தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in