என்னைக் கடத்தி வைச்சு 15 லட்சம் கேட்டு மிரட்டுறாங்க: அப்பாவிடம் கதறி நாடகம் போட்ட மகன் சிக்கியது எப்படி?

கடத்தல்
கடத்தல்

திருநெல்வேலியில் தன்னை கடத்தியதாக நாடகம் போட்டு தன் தந்தையிடம் இருந்து 15 லட்ச ரூபாயை பறிக்க முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேல்ராஜ்(29). தச்சுத்தொழிலாளியாக உள்ளார். வேல்ராஜின் மனைவி பிரசவத்திற்காக தன் தாய் வீடான தூத்துக்குடிக்குச் சென்றிருந்தார். அவருக்கு குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றார் வேல்ராஜ். இருநாள்களுக்குப் பின்பு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு பேருந்து ஏறினார். நேற்று இரவு தன் தந்தையிடம் சமாதானபுரம் சந்திப்பில் இறங்குகிறேன். அருகில் வந்துவிட்டேன். இறங்கியதும் என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

அவரது தந்தையும் பைக்கை எடுத்துக்கொண்டு சமாதானபுரத்தில் சென்று நின்றார். ஆனால் வெகுநேரமாகியும் வேல்ராஜ் வரவில்லை. அவரது தந்தை போன் செய்து பார்த்தபோது வேல்ராஜின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. சிறிது நேரத்திற்கு பின்பு வேல்ராஜூன் எண்ணில் இருந்து போன் வந்தது. தன்னை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் சொன்னார். அதனைத் தொடர்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து வேல்ராஜின் தந்தை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தகவலைச் சொன்னார்.

செல்போன் எண்ணைக் கொண்டு போலீஸார் ஆய்வு செய்த போது தச்சநல்லூர் பகுதியில் வேல்ராஜின் செல்போன் இணைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அங்கு சென்றனர். அங்கே வேல்ராஜ், இரு வாலிபர்களோடு இருந்தார். வேல்ராஜிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவலைைச் சொன்னார். அதன் அடிப்படையிலேயே வேல்ராஜ் பொய் சொன்னது தெரியவந்தது.

வேல்ராஜ் ஒரு கிலோ தங்கநகையை ஒருவர் 25 லட்ச ரூபாய்க்கு கொடுப்பதாகச் சொல்லி இரு நண்பர்களிடம் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுள்ளார். ஆனால் அதற்குப் பதிலாக தங்கமும் கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை. இந்நிலையில், அந்தப் பணத்தைத் திருப்பிக்கேட்டு அவர்கள் அழுத்தம் கொடுக்கவே, தன் அப்பாவிடம் தன்னைக் கடத்தியதாக நாடகம் போட்டு 15 லட்ச ரூபாய் கேட்டுள்ளார் வேல்ராஜ். இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in