
கேரளத்தில் மது அருந்த தாய் பணம் தராததால் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், ஆழப்புழா மாவட்டத்தின், குறத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி ரமா(53). இந்தத் தம்பதிக்கு நிதின்(28) என்னும் இளைய மகன் உள்ளார். குடிக்கு அடிமையான நிதின் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு ஊரில் பார்ப்பவர்களிடம் தகராறும் செய்து வந்தார். வேலைக்கு செல்லாததால் நிதினிடம் கையில் பணம் இருக்காது. இதனால் அடிக்கடி தன் தாய் ரமாவிடம் பணம் கேட்டுத் தகராறு செய்வார்.
அப்படி, நேற்றும் வழக்கம்போல் பணம் கேட்டுத் தகராறு செய்தார் நிதின். ஆனால் அவரது தாய் ரமா பணம் கொடுக்கவே இல்லை. இதனால் வீட்டின் பின்னால் கிடந்த ஒரு கயிற்றை எடுத்து வந்து தன் தாயின் கழுத்தில் இறுக்கினார். இதில் தாய் மயங்கிச் சரியவே, இதைப் பார்த்த நிதின் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து ரமாவின் மூத்த மகன் வீட்டிற்கு வந்தார். அவர் தன் தாய் மயங்கிக் கிடப்பதைப் பார்த்துவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு ரமா கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரமாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸார் நிதினைக் கைது செய்தனர். மது அருந்த பணம் தராததால் தாயையே, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.