மாமனாரை தலையைத் துண்டித்துக் கொலை செய்த மருமகன்: சூனியம் வைத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

மாமனாரை தலையைத் துண்டித்துக் கொலை செய்த மருமகன்: சூனியம் வைத்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

சூனியம் வைத்ததாக சந்தேகப்பட்டு மாமனாரை வாலிபர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஊடாலா தொகுதிக்குட்பட்டது சர்ஜண்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துங்குருசிங்(60). இவரது மனைவி குருபாரி சிங்கும், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் கால்பந்து போட்டியைக் காண பக்கத்து கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தனர். அப்போது துங்குருசிங் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, துங்குருசிங் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலில் இறந்து கிடந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து குந்தா காவல் நிலையத்தில் குருபாரி சிங் புகார் அளித்தார்.

இப்புகார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, துங்குருசிங்கை அவரது மருமகன் பாபுன் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கும், தனது மாமனாருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக தெரிவித்தார். இதன் காரணமாக தனக்கு,மாமனார் சூனியம் வைத்தால் தான் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் துங்குருசிங்கை தலையைத் துண்டித்து கொலை செய்ததாகவும் பாபுன் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் ஒடிசாவில் சூனியம், மாந்தீரிகத்தால் அதிக அளவு குற்றம் நடந்து வருகிறது. இதனைத் தடுக்க அம்மாநில அரசு சிறப்புச்சட்டத்தை இயற்றியுள்ளது. ஆனாலும், இந்த ஆண்டு மட்டும் 60-க்கும் மேற்பட்ட சூனியம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கவலைத் தெரிவித்தனர். குறிப்பாக இந்த குற்றங்கள் துங்குகுருசிங் கொலை செய்யப்பட்ட மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தான் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் மேலும் இரண்டு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூனியம் வைத்ததாக தனது மாமனாரை மருமகனே கொலை செய்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in