
சமையல் எரிவாயு சிலிண்டருக்குப் பணம் கேட்ட மாமனாரை, மருமகன் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டாம்பாறைப் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ்(61), இவர் ஜவுளிக்கடை ஒன்றில் காவலாளியாக இருந்தார். இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் கிறிஸ்துதாஸ் தன் மூன்றாவது மகள் ஜான்சி என்பவரது வீட்டில் வசித்துவந்தார். ஜான்சி வீட்டில் திடீரென கிறிஸ்துதாஸ் மயங்கி விழுந்ததாக ஜான்சியும், அவரது கணவர் பாக்கியராஜும் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கீழே விழுந்து இறந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே திருவட்டாறு போலீஸாருக்கு இதுதொடர்பாகப் புகார் கொடுத்த பாக்கியராஜ், “என் மாமனாருக்கு வலிப்பு நோய் இருந்தது. அதில் கீழே விழுந்துவிட்டார். தலையில் காயம்பட்டு உயிர் இழந்துவிட்டார்” என தெரிவித்து இருந்தார். இதனிடையே ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில், கிறிஸ்துதாஸ் தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது. அப்போது பாக்கியராஜ் முன்னுக்குப் பின் முரணானத் தகவலைச் சொன்னார்.
போலீஸார் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், “நான் கேரளத்தில் தங்கி கட்டிட வேலைசெய்து வருகின்றேன். வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவேன். அப்படி வரும்போது, நானும், என் மாமனாரும் சேர்ந்து மது அருந்துவோம். அதேபோல் நேற்றும் குடித்தோம். அப்போது என் மாமனார் கியாஸ் சிலிண்டருக்கு வீட்டுக்கு 1000 ரூபாய் கேட்டார். நான் என்னிடம் இல்லை எனச் சொன்னேன். நான் அதன்பின்பு வெளியில் சென்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தேன். அப்போதும் என்னிடம் சிலிண்டருக்குப் பணம் கேட்டார். இதனால் இரும்புக் கம்பியால் மதுபோதையில் இருந்த நான், போதையில் இருந்த அவரை அடித்தேன். இதில் உயிர் இழந்துவிட்டார். அதன் பின்பு என் மனைவியோடு சேர்ந்து அவர் வலிப்பு நோயால் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டதாகச் சொல்லிவிட்டேன்”என்றார்.