கடந்த 7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளில் தீர்வு: முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி

கடந்த 7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளில் தீர்வு: முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி

கொரோனா காலக்கட்டத்தை உள்ளடக்கிய கடந்த 7 ஆண்டுகளில் 9 கோடி வழக்குகளில் இந்திய நீதித்துறை தீர்வு கண்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிற்சி மையத்தில் தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி சார்பில் சமகால நீதித்துறையின் வளர்ச்சிகள், சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீதியை வலுப்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதி அபேய் ஶ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தேசிய நீதித்துறை அகாடமியின் தற்போதைய இயக்குநரான நீதிபதி ஏ.பி.சாஹி, "உலகத்திலேயே சிறந்த நீதித்துறையாக இந்திய நீதித்துறை செயல்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தை உள்ளடக்கிய 2016 முதல் 2022-ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட 10 கோடி வழக்குகளில் 9 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பேசுகையில்,

"தேசிய நீதித்துறை பயிலகம், கொரோனா காலக்கட்டத்தில் காணொலி காட்சி மூலம் 64 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டதில், சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமே 40 லட்சம் வழக்குகளை விசாரித்து உள்ளது. மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிப்பதில் தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகம் உலகத்திற்கு முன் மாதிரியாக திகழ்கிறது" என்று பாராட்டு தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in