ரயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பலி: சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பலி: சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

குமரிமாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார். அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

குமரிமாவட்டம், திருநந்திக்கரை அருகில் உள்ள வியாலிவிளையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு விஷ்ணு, விஜய் என இருமகன்கள் உள்ளனர். இருவருமே ராணுவத்தில்தான் பணியாற்றினர். இளைய மகன் விஜய்(24) பஞ்சாப் ரெஜிமெண்ட்டில் பணிசெய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இவர் ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கடந்த 4-ம் தேதி சொந்த ஊருக்கு வர வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு ரயிலில் கிளம்பினார் விஜய். இந்நிலையில் 5-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம், சந்திரப்பூர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் இவர் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ராணுவ வீரர் விஜய், ஓடும் ரயிலில் இருந்து தவறிவிழுந்து இறந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினருக்கு ராணுவத்தில் இருந்து தகவல்வர மூத்த மகன் விஷ்ணு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றார். அங்கிருந்து இன்று காலையில் திருவனந்தபுரம் வழியாக ராணுவ வீரர் விஜய்யின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. சொந்த ஊரான திருநந்திக்கரை, வியாலிவிளையில் அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 24 வயதே ஆன ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in