
மாமல்லபுரம் சுற்றுலாத் தளத்தில் இயங்கும் கலங்கரை விளக்கம் சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் பகுதியில் உள்ள பாறைக்குன்றில் 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. 1887-ம் ஆண்டு இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் கலங்கரை விளக்கம் விளக்கு எரிக்கப்பட்டது. அதன் பின்பு மின் விளக்கு மூலம் ஒளி பாய்ச்சும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது நவீன தொழில் நுட்பத்தில் 250 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி. விளக்கு கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் போது கலங்கரை விளக்கம் செயல்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் நிரந்தர மின் தேவையைக் கருத்தில் கொண்டு கலங்கரை விளக்க அலுவலகத்தில் சூரிய ஔி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. கலங்கரை விளக்க அலுவலகத்தின் மேல் தளத்தில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேவையை விடக் கூடுதல் மின்சாரம் கிடைப்பதாகக் கலங்கரை விளக்க நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.