போதைப் பொருளுடன் சிக்கிய சாஃப்ட்வேர் நிறுவன ஓனர்: அச்சத்தில் போலீஸ் அலுவலகத்தில் தற்கொலை

போதைப் பொருளுடன் சிக்கிய சாஃப்ட்வேர் நிறுவன ஓனர்: அச்சத்தில் போலீஸ் அலுவலகத்தில் தற்கொலை

மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற கைதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்து சோழவரம் அருகே விலையுயர்ந்த போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 48 கிலோ போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் போதை பொருளை பறிமுதல் செய்ததுடன் போதை பொருள் கடத்தி வந்த நபரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட அந்த நபரை அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் போதை பொருள் கடத்தி வந்த நபர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ராஜி ஆண்டனி என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நள்ளிரவில் ராயப்பன் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மத்திய போதை பொருள் ஒழிப்பு அதிகாரிகள். உடனே கைதி ராயப்பனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் கைதி ராயப்பன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீஸார் காவல் விசாரணையில் மரணம் அடைந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். முதல் கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட கைதி ராயப்பன் தெலங்கானா மாநிலத்தில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதுடன் போதை பொருள் கடத்தலிலும் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ராயப்பன் மீது தெலங்கானாவில் ஏற்கெனவே ஒரு வழக்கு இருக்கும் நிலையில் சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காவல்துறை விசாரணையின் போது கைதி உயிரிழந்ததால் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கில் சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in