சமூக ஊடக வானவில்-77: வேலை தேட உதவும் வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்-77: வேலை தேட உதவும் வலைப்பின்னல்

வழக்கமான சமூக வலைப்பின்னல் தளங்களை வேலை தேடவும் பயன்படுத்திக்கொள்ளலாம். சரி, இதற்காகவே ஒரு சமூக வலைப்பின்னல் இருந்தால் எப்படி இருக்கும்? குட்வால்.இயோ (https://www.goodwall.io/) இத்தகைய சமூக வலைப்பின்னல் தளமாக இருக்கிறது.

ஒருவிதத்தில், குட்வால் சேவையை மாணவர்களுக்கான லிங்க்டுஇன் என வர்ணிக்கலாம். அதே நேரத்தில் மாணவர்கள் விரும்பிப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகவும் இந்தச் சேவை அமைந்துள்ளது. அத்துடன் முக்கியமாக வேலைவாய்ப்புத் தேடல் தளத்திலிருந்து மாறுபட்டு எதிர்கால வாய்ப்பை உருவாக்கும் சமூக வலைப்பின்னல் சேவையாக இந்தத் தளம் இயங்குகிறது.

வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வர்த்தக நிறுவனங்களுடன் மாணவர்களை இணைப்பதோடு, மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக்கொள்வதற்கான மேடையாகவும் இந்தத் தளம் திகழ்கிறது. ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்களுக்கான அறிமுகப் பக்கத்தை உருவாக்கிக்கொள்ளவும் இதில் வசதிகள் உண்டு.

உறுப்பினர்கள், சுருக்கமான சுய அறிமுகத்துடன், தங்கள் திறமைகளையும் குறிப்பிடலாம். வழக்கமான சுயவிவரத் தொகுப்புகளைவிட, இந்த வகை அறிமுகம் சுவாரசியமாகவும், துடிப்பானதாகவும் இருக்கும். உறுப்பினர்கள் சக மாணவர்கள் பின்தொடர்வதோடு, கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபடலாம். முக்கியமாக வர்த்தக நிறுவனங்கள் உறுப்பினர்களின் பக்கங்களைப் பார்வையிட்டு, தங்களுக்குப் பொருத்தமான திறமையாளர்கள் என அறிந்தால் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

ஃபேஸ்புக் போல வெறும் நிலைத்தகவல்களை மட்டும் பிரதானமாகக் கொண்டிராமல், கேள்வி - பதில், அரட்டை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது. மாணவர்கள், தங்கள் மனதில் உள்ள சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்கலாம். இதே போல கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளலாம். மற்றவர்களுடன் அரட்டையிலும் ஈடுபடலாம். இதன் மூலம், வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் பெறலாம்.

படித்துக்கொண்டே இருக்கும்போது அல்லது படித்து முடித்தவுடன் பயிற்சிப் பணி வாய்ப்பு தேவை என்றாலும் இந்தத் தளத்தில் கேட்கலாம். எதிர்கால விருப்பங்களை அல்லது மனதில் உள்ள எண்ணங்களைப் பகிர்வதன் வாயிலாகவும் மாணவர்கள் தங்களுக்குப் பொருத்தமான வாய்ப்புகளைப் பெறலாம். மேற்படிப்பு வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். தன்னார்வப் பணி வாய்ப்புகளையும் அறியலாம்.

தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில் இணைய நட்பையும் வளர்த்துக்கொள்ள வழி செய்வது இந்தத் தளத்தின் முக்கிய அம்சமாக அமைகிறது. எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், வீடியோ பதிவு உள்ளிட்ட பலவிதமாக மாணவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

இந்தத் தளம் வாயிலாகவே மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்புகளைப் பின்தொடர்வதோடு, வேலைவாய்ப்பு சார்ந்த உரையாடலையும் மேற்கொள்ளலாம். இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சாட் போன்ற தளங்களில் மேற்கொள்ளும் உரையாடலைவிட, இந்தத் தளத்தில் மேற்கொள்ளும் உரையாடல் பயனுள்ளதாக அமையும்.

மாணவர்களுக்கான இந்தச் சமூக வலைப்பின்னல் சேவை, பவா சகோதரர்களால் (Taha, Omar Bawa) ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையைச்சேர்ந்த இருவரும் ஸ்விட்சர்லாந்தில் வசித்துவருகின்றனர். மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள உதவுவதோடு, நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தவும் வழி செய்யும் நோக்கத்துடன் இந்தச் சேவையை ஆரம்பித்ததாக இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தளம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. எனவே மாணவர்கள் இதன் மூலம் வையம் தழுவிய வாய்ப்புகளைப் பெறலாம். வாய்ப்புகளை அடையாளம் காட்டுவதோடு மாற்றத்துக்கான செயல்பாடுகளிலும் இந்தத் தளம் கவனம் செலுத்தி வருகிறது. தலைமைப் பண்பு கொண்டவர்களை ஊக்குவிப்பதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது. இதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது பொருத்தமான மாணவர்களைப் பரிந்துரைக்கலாம். இத்தகைய மாற்றத்துக்கான மனிதர்களுக்கான பிரத்யேகமான கருத்துப் பரிமாற்றப் பகுதியும் இருக்கிறது. ஆக, மாணவர்கள் தங்களுக்கான இணைய சமூகமாக இந்தத் தளத்தை உணரலாம். இந்தத் தளத்தின் வெற்றிக்கதைகளையும் அறியலாம். ‘குட்வால் தூதர்கள்’ எனும் அம்சமும் இருக்கிறது.

இந்தத் தளத்தின் வலைப்பதிவு பகுதி மாணவர்களுக்கான தகவல் சுரங்கமாக இருக்கிறது. இந்தப் பதிவுகளில் மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அறியலாம். பருவநிலை மாற்றத்துக்கான பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பதிவுகள் இதற்கான உதாரணமாக அமைகின்றன.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in