`ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட நீ யார்?'- முறைகேட்டை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் மீது கும்பல் கொடூரத் தாக்குதல்

தாக்குதலில் காயமடைந்த கருங்காலக்குடி வீரக்குமார்
தாக்குதலில் காயமடைந்த கருங்காலக்குடி வீரக்குமார்

மதுரை அருகே ஊராட்சி முறைகேடுகள் குறித்து குரல் எழுப்பிய சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் லதா. இவரது கணவர் வீரக்குமார். சமூக ஆர்வலரான, இவர் தனது மனைவி லதா மூலம் கருங்காலக்குடி பொது பிரச்சினைகளுக்கு நிர்வாகம் மூலம் தீர்வு கண்டு வருகிறார். 

இந்த நிலையில் கருங்காலக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே உள்ள நல்லகுளம் வடக்கு புறத்தில் பாலம் கட்டும் பணி நடந்தது. இங்குள்ள ராஜாஜி நகருக்கு புதிய பாலம் கட்ட கோரி வந்த நிலையில்,  மக்கள் வசிக்காத பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி குறித்து ராஜாஜி நகர் மக்கள், வார்டு உறுப்பினர் லதாவிடம் முறையிட்டனர்.

இதனடிப்படையில் ஊராட்சி தலைவர் பீர் முஹமதுவின் சித்தப்பா ராஜா முஹமதிடம் இப்பாலம் குறித்து வீரக்குமார் விசாரித்தார். இதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி ஊராட்சி அலுவலகம் அருகே வந்த வீரக்குமாரை ராஜா முஹமது உள்பட இருவர் வழிமறித்தனர். ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட நீ யார்? உனது மனைவி லதா வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வாக நாங்கள் தான் உதவி செய்தோம், எங்களை நீ கேள்வி கேட்கிறாயா? என கூறி ஆபாச வார்த்தைகளால் பேசினர்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் வீரக்குமாரை கற்களால் தாக்கியதில் அவர் காயமடைந்தார். தகராறை விலக்கச் சென்ற வீரக்குமாரின் தாயார், தங்கை மகனும் காயமடைந்தனர். மேலூர் அரசு மருத்துவமனையில் வீரக்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீரக்குமார் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கம்பூர் ஊராட்சி இளைஞர்கள், கொட்டாம்பட்டி ஒன்றிய ஊராட்சி இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in