பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து எல்டிடிஈ இயக்கத்திற்கு போதைப்பொருள், துப்பாக்கிகள் கடத்தல்… சிக்கிய ஆவணங்கள்: என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து எல்டிடிஈ இயக்கத்திற்கு போதைப்பொருள், துப்பாக்கிகள் கடத்தல்… சிக்கிய ஆவணங்கள்:  என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து விடுதலை புலிகள் இயக்கத்திற்கு போதை பொருள், துப்பாக்கிகள் கடத்தியது என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் ஆகியவற்றை ரோந்துப் பணியில் இருந்த கடலோர பாதுகாப்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து விழிஞ்சம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி விழிஞ்சம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆயுதக் கடத்தல் விவகாரம் என்பதால் இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யபட்டு அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இவ்வழக்கில் சுரேஷ், சௌந்தர்ராஜன் ஆகிய இருவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சர்குணம் (எ)சபேசன் என்ற இலங்கைத் தமிழரை கைது செய்தனர். அவரிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

22 இடங்களில் சோதனை
இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று தமிழகத்தில் மீண்டும் டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில், சேலையூர் கேம்ப், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், மண்ணடி, ஈசிஆர் உட்பட 9 இடங்களிலும் திருச்சியில் 11 இடங்களிலும் செங்கல்பட்டில் 2 இடங்கள் என மொத்தம் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளான குணசேகரன்(எ) குணா, புஷ்பராஜ்(எ)பூக்குட்டி கண்ணா ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்கிற போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தல் கும்பல் தலைவனுடன் நெருங்கிப் பழகியுள்ளனர். அத்துடன் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்குப் போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆவணங்கள் பறிமுதல்
மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் பயங்கரவாத செயலில் ஈடுபட இந்த இரண்டு பேர் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய எலக்ட்ரானிக் ஆவணங்கள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ், 1 ஹார்ட் டிஸ்க், 2 லேப்டாப், 8 வைஃபை மோடம்கள், ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்தற்கான ஆவணங்கள், 1 இலங்கை பாஸ்போர்ட் மற்றும் தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஆவணங்களை ஆய்வு செய்து இந்த கடத்தலில் வேறு யார் யாருக்குக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டறியும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in