ரயில்களில் கடத்திச் சென்ற ரூ. 80 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 1,081 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே சொத்துக்களை பாதுகாக்க, ரயில் சேவை பணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்க ரயில்வே ரயில்வே பாதுகாப்பு படையை இந்திய அரசு உருவாக்கியது. இப்படையினர் ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில்களில் குற்றங்களை தடுக்க, பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க, மகளிர் மற்றும் குழந்தை கடத்தலை தடுக்க பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``நாடு முழுவதும் ரயில் பயணச் சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்களில் 80 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய 1,081 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் உதவி மையங்கள் மூலம் ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றி திரிந்த 17 ஆயிரத்து 756 சிறார் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே சொத்துக்களை அபகரித்த 11 ஆயிர்து 268 பேர் கைது செய்யப்பட்டு 7.37 கோடி மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. 194 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 559 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஓடும் ரயில்களில் ஏற முயன்று நடைமேடையில் விழுந்த 852 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.
ரயிலில் தவறவிட்ட 46.5 கோடி மதிப்புள்ள 25 ஆயிரத்து 500 உடமைகள் மீட்கப்பட்டு உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரயிலில் தனியாக பயணித்த பெண்கள் பாதுகாப்பிற்காக 640 ரயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் கொண்ட என் தோழி என்ற பெயரில் குழுக்கள் பயணித்து வருகிறது.
ஓடும் ரயில்களில் 209 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த தாய்மார்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனைகள் உதவியுள்ளனர். 37 ஆயிரம் முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பயணத்தில் காயமடைந்தோர் ஆகியோருக்கு ரயில்வே பாதுகாப்பு படை உதவிக்கரம் நீட்டி உள்ளது.
மதுரை கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் கைது செய்யப்பட்டு, 15.44 லட்சம் மதிப்பிலான பயணச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரயிலில் எடுத்துச் சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு, 2.56 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேரை கைது செய்யப்பட்டு ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. ரயிலில் கடத்திய 122.85 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெற்றோரிடம் கோபித்து கொண்டு ரயில்வே ஸ்டேஷனில் சுற்றி திரிந்தபோது மீட்கப்பட்ட 195 சிறுவர்கள், 35 சிறுமிகள், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேரை கைது செய்து, ரூ. 4.82 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
ரயில்வே சட்ட விதிகளை மீறிய 2,701 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 15.94 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களை அசுத்தப்படுத்திய 4 ஆயிரத்து 684 பயணிகளிடம் இருந்து 9.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிகள் தவறவிட்ட 42.45 லட்சம் மதிப்புள்ள உடமைகள் மீட்கப்பட்டு உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயில்களில் பயணித்த 120 பேருக்கு அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.