
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் நேற்று ஒரே நாளில் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் சிலர் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவது அண்மைக் காலங்களில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் தனது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த 27 லட்சத்து 42 ஆயிரத்து 688 மதிப்புள்ள 494 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
அதேபோல் விமான நிலைய கழிவறையில் தங்கச் சங்கிலி உள்ளிட்ட பொருட்கள் கேட்பாரற்று கிடப்பதாக பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு கிடந்த 3 தங்க சங்கிலி, ஒரு தங்க கட்டி என 70 லட்சத்து 28 ஆயிரத்து 832 மதிப்புள்ள 1 கிலோ 266 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 97 லட்சத்து 71 ஆயிரத்து 520 மதிப்புள்ள 1 கிலோ 760 கிராம் தங்கம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.