துணிக்கடையில் ஷுட்டிங்: சின்னத்திரை நடிகரின் செல்போன் திருட்டு: 2 பெண்களுக்கு வலைவீச்சு

துணிக்கடையில் ஷுட்டிங்: சின்னத்திரை நடிகரின் செல்போன் திருட்டு: 2 பெண்களுக்கு வலைவீச்சு

கடைக்கு துணி வாங்க வந்த இரு பெண்கள் வாடிக்கையாளர் போல் நடித்து சின்னத்திரை நடிகரின் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. செல்போதனை திருடிச்சென்ற பெண்ணைகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அழகப்பன்(33). சின்னத்திரை நடிகரான இவர், வந்தாள் ஸ்ரீதேவி, ஒரு ஊருல ராஜகுமாரி, ஆனந்தராகம் உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஆனந்தராகம் சீரியலின் படப்பிடிப்பானது நேற்று பெரம்பூரில் உள்ள ரேவதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையில் நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட அழகப்பன் தனது செல்போனை கடையில் உள்ள டேபிளில் வைத்து ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். பின்னர் ஷுட்டிங் முடிந்து வந்து பார்த்தபோது அவரது செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் செல்போன் கிடைக்காததால் துணிக்கடை நிர்வாகத்தினரிடம் அழகப்பன் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் அழகப்பன்
சின்னத்திரை நடிகர் அழகப்பன்

இதையடுத்து நிர்வாகத்தினர் கடையினுள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் துணி வாங்குவதற்காக வாடிக்கையாளர் போல வந்த இரு பெண்கள், ஊழியர்களிடம் துணி வாங்குவதுபோல பேச்சு கொடுத்து அழகப்பனின் செல்போனை திருடி சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் 60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடுப்போனது தொடர்பாக நடிகர் அழகப்பன் திருவிக நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து செல்போனை திருடிச்சென்ற இரு பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சின்னத்திரை நடிகரின் செல்போன் திருடுப்போனதால் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது நடிகரின் செல்போனை திருடி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in