சைக்கிளில் ரிப்பன் விற்றவரின் மகன் கரக்பூர் ஐஐடி-யில் சேர்ந்த கதை!

கரக்பூர் ஐஐடி வளாகம்
கரக்பூர் ஐஐடி வளாகம்

வறுமை வாட்டினாலும் வைராக்கியம் இருந்தால், வரலாற்றில் இடம்பெறலாம் என்பதைத் தங்கள் வெற்றிக் கதைகள் மூலம் நிரூபித்தவர்கள் பலர். அந்தப் பட்டியலில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் சோட்டோன் கமார்கரின் கதை சாதிக்கத் துடிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

மேற்கு வங்க மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சல்டோரா கிராமத்தைச் சேர்ந்தவர் கனாய் கமார்கர். சைக்கிளில் வீதிவீதியாகச் சென்று ரிப்பன், மலிவுவிலை ஆபரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்பவர். இவரது மகன் சோட்டோன் கமார்கர், கரக்பூரில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்து இந்தச் சாதனையைச் செய்திருக்கும் அந்த இளைஞருக்கு ஆதரவும் அன்பு வாழ்த்துகளும் குவிந்துவருகின்றன.

படிப்பில் படுசுட்டியான சோட்டோன், தான் படித்த பள்ளியிலும் சரி, அக்கம்பக்கத்திலும் சரி நல்ல பெயர் எடுத்தவர். எட்டாம் வகுப்பு படித்தபோது தன் தந்தையுடன் சேர்ந்து அவரும் சைக்கிளில் சென்று வியாபாரம் செய்துவந்தார். ஒன்பதாவது படிக்கும்போதுதான் தான் ஒரு பொறியாளராக வர வேண்டும் எனும் எண்ணம் அவருக்கு வந்தது. எனினும் அப்போது ஐஐடி கல்வி நிறுவனங்கள் குறித்து அவர் அறிந்திருக்கவில்லை. 11-வது வகுப்பில் படித்தபோதுதான் ஐஐடி குறித்து தெரிந்துகொண்டார். 12-ம் வகுப்பில் 500-க்கு 479 மதிப்பெண்கள் எடுத்தார். ஜேஈஈ முதன்மைத் தேர்விலும், அட்வான்ஸ் தேர்விலும் வெற்றி பெற்றார்.

அவரது அண்ணன் செளரவ், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். தன் தம்பி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும் என செளரவ் நினைத்தார். அவருக்கும் ஐஐடி குறித்து சரியான புரிதல் இல்லை. அவரது நண்பர்கள்தான் ஐஐடி குறித்து அவருக்கு விளக்கினர். ஆனால், ஏழை வியாபாரியான கனாய் கமார்கருக்கு எதுவும் புரியவில்லை. எனினும், தனது மகன் நிச்சயம் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்வான் என்று மட்டும் உறுதியாக நம்பினார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. கரக்பூர் ஐஐடி-யில் சோட்டோனுக்கு இடம் கிடைத்தது. நேற்றுதான் அதில் அவர் சேர்ந்தார். அது முதல் வெற்றி.

ஆனால், முதல் செமஸ்டருக்கே 1.7 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அவரது ஆசிரியர்களும் நண்பர்களும் அவருக்கு உதவ முன்வந்தனர். எனினும், மொத்தமாகவே 35,000 ரூபாய்தான் தேறியது. சாதிக்கத் துடிக்கும் அந்த மாணவருக்கு ஐஐடி நிர்வாகம் கைகொடுத்தது. இருக்கும் பணத்தைக் கட்டினால் போதும், மிச்சத்தை கல்வி உதவித் தொகை மூலம் சரிசெய்துகொள்ளலாம் என அனுமதி வழங்கிவிட்டது. ஐஐடி நிர்வாகம் மட்டுமல்ல, பாங்குரா மாவட்ட ஆட்சியர் ராதிகா ஐயரும், அவருக்கு உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.

தனது மகனுக்குக் கிடைத்திருக்கும் இந்த முதல்கட்ட வெற்றியால் உவகை அடைந்திருக்கும் கனாய் கமார்கர், எதிர்காலத்தில் தனது மகனும் இதேபோல் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என விரும்புகிறார். சோட்டோனும் ஐஐடி-யில் நன்கு படித்து பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்றும், தன் தந்தையின் வறுமை நிலையைப் போக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். லட்சியம் கொண்டவர்களின் கனவு நனவாகாமல் போவதில்லை. வாழ்த்துவோம் அந்த மாணவரை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in