`அனுமர் மந்திரம் ஒலித்தால் குர்ஆன் ஓதப்படும்'- உ.பி-யில் வெடித்தது புதிய சர்ச்சை

`அனுமர் மந்திரம் ஒலித்தால் குர்ஆன் ஓதப்படும்'- உ.பி-யில் வெடித்தது புதிய சர்ச்சை

முஸ்லிம்களின் தொழுகைக்கான ‘அஸான்’ எனப்படும் பாங்கு முழக்க விவகாரம் புதிய உருவம் எடுத்துள்ளது. உத்தர பிரதேசம் அலிகரின் மசூதிகள் முன்பாக அனுமர் மந்திரம் ஒலித்தால் பதிலுக்கு, கோயில்கள் முன் குர்ஆன் ஓதப்படும் என முழக்கமிடப்பட்டுள்ளது. இதன் மீது அம்மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் மகளிர் பிரிவின் தலைவர் ரூபினா கானும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சமாஜ்வாதியின் மூத்த தலைவருமான ரூபினா கானும் கூறுகையில், ``கோயில் மற்றும் மசூதிகளில் பல காலமாக ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், கோயிலின் பஜனைகளும், பக்திப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், மசூதிகளிலும் ஐந்துவேளைகளுக்கான பாங்கு முழக்கங்களும் இடப்படுகின்றன. தற்போது நடைபெறும் ரம்ஜான் மாதத்தில் எங்கள் நோன்புக் கடமையை முறையாக நிறைவேற்ற விடுங்கள். இதற்கு தடையை ஏற்படுத்த முயற்சிப்பது தவறானச் செயல் ஆகும். மசூதிகளில் பாங்கு முழக்கத்திற்கு எதிராக அனுமர் மந்திரங்கள் ஓதினால், இதற்கு எதிராக நாம் அலிகரின் கோயில்கள் முன் அமர்ந்து புனிதக் குர்ஆனை ஓதுவோம்.

எங்கள் நடவடிக்கை இந்துத்துவா அரசியல் செய்பவர்களை போல் தவறானது அல்ல. மற்ற மதங்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளூங்கள். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதங்களில் ஏதாவது ஒரு தடையை ஏற்படுத்துவது இந்துத்துவாவினரின் வேலையாகி விட்டது. இந்து மற்றும் முஸ்லிம்களுடன் மோதலை ஏற்படுத்த பாஜக முயல்கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்ட முயற்சித்தால் அதை எதிர்க்க பெண்கள் தலைமை ஏற்க வேண்டியிருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹிஜாப், ஹலால் இறைச்சியை தொடர்ந்து தற்போது மசூதிகளில் தொழுகைக்கானப் பாங்கு முழக்கங்கள் விவகாரமாகி விட்டது. மகாராஷ்டிரா, கர்நாடகாவை தொடர்ந்து முக்கிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் கிளம்பி உள்ளது. இங்கு மதக்கலவரங்கள் அதிகமாக சந்தித்த மாவட்டமான அலிகரிலும் இப்பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. இதை அலிகரில் பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மாணவர் கிளைகளான பாஜக யுவ மோர்ச்சா, அகில பாரதிய வித்ய பரிஷத்தினர் எழுப்பியிருந்தனர்.

இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் சமாஜ்வாதி தலைவரான ரூபினா கானுமின் அறிக்கை வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த உபி சட்டப்பேரவை தேர்தலிலும் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட ரூபினா தோல்வி அடைந்திருந்தார். இங்குள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் விவகாரத்திலும் ரூபினா கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதில் அவர், இந்து கடவுளை அவமதித்த உதவிப் பேராசிரியர் ஜிதேந்திராவின் நாக்கை துண்டிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசு அளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்த துண்டிப்பு, தனது இந்து சகோதரர்களின் மதத்தை புண்படுத்துவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் எனவும், எந்த ஒரு சமூகத்தினரையும் அவமதிப்பு தேசதுரோகச் செயல் என்றும் ரூபினா அப்போது தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.