சென்னை பெருநகர காவல்துறையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் திட்டம் 2022-ம் ஆண்டிற்கான ஸ்காச் தங்க விருது பெற்று சாதனை படைத்துள்ளது. சிற்பி மற்றும் மகிழ்ச்சி ஆகிய திட்டங்களுக்கும் விருது வென்றுள்ளது காவல்துறை.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``2022-ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக ஸ்காச் குரூப் (SKOCH group) நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டங்களான காவல் கரங்கள் , சிற்பி, ஆனந்தமம், மகிழ்ச்சி,காவலர் விடுப்பு செயலி ஆகிய திட்டங்கள் முன்மொழியப்பட்டு விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஸ்காச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள். அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் ஓட்டளித்தனர். இதில் கடந்த அரை இறுதி சுற்றுக்கு காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றது.
இறுதிசுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் ஆர்டர் ஆஃப் மெரிட் -2022 விருது கிடைக்கப் பெற்றது. மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் “காவல் கரங்கள்” தகுதி பெற்று போலீஸ் & சேஃப்டி -2022-க்கான ஸ்காச் தங்க விருது – 2022 பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது" என கூறப்பட்டுள்ளது