அச்சுறுத்தும் தோல் கட்டி நோய்; மடிந்து போகும் பசுக்கள்: கவலையில் தமிழக விவசாயிகள்

அச்சுறுத்தும் தோல் கட்டி நோய்; மடிந்து போகும் பசுக்கள்: கவலையில் தமிழக விவசாயிகள்

வட மாநிலங்களில் பசுக்களுக்கு பரவிவரும் LSD எனப்படும் தோல் கட்டி நோயால் கால்நடைகள் இழப்பு அதிகரித்து வருவதால் அந்த நோய் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை என பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் பலவற்றிலும் கடந்த 2019-ம் ஆண்டு பசுக்களுக்கு "LSD" எனப்படும் "தோல் கட்டி நோய்" (Lumpy Skin Disease) பரவி கால்நடைகள் ஏராளமாக இறந்தன. அதனை அடுத்து வேகமான தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதன் அடிப்படையில் அது கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டின் கோடைகாலத்தில் அம் மாநிலங்களில் மீண்டும் அந்த நோய் அதிகமாக பரவியது. பல லட்சம் பசுக்களுக்கு அந்நோய் தொற்று பரவியதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து போயுள்ளன. அதன் காரணமாக வடமாநிலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொன்னுசாமி
பொன்னுசாமி

தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ. பொன்னுசாமி இதுகுறித்து அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், "உலகளவில் நாளொன்றுக்கு சுமார் 209 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து 23% பங்களிப்போடு பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில் தற்போது கால்நடைகளுக்கு பரவி வரும் இந்த LSD நோய் தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான பசுக்கள் உயிரிழந்து வருவது பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வடமாநிலங்களில் மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பால் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எனவே மத்திய அரசு உடனடியாக விழித்துக் கொண்டு கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கட்டி (LSD) நோயை மேலும் பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவைப்படும் கால்நடை மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இருப்பதையும் தீவிரமாக கண்காணித்து அதனை உறுதி செய்வதோடு மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தாமதமின்றி செய்து தர வேண்டும்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு கடந்த காலங்களிலோ அல்லது நடப்பாண்டிலோ அந்நோய் தொற்று பரவியிருக்கிறதா?, அந்நோய் தாக்கி எவ்வளவு பசு மாடுகள் உயிரிழந்துள்ளன? என்பது குறித்த முழுமையான விவரங்களை சுகாதாரத்துறையோ, கால்நடை பராமரிப்பு துறையோ இன்னும் வெளியிடவில்லை.

மேலும் தமிழகத்தில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் குழுவை அமைத்து அவர்கள் கிராமங்கள் தோறும் நேரில் சென்று கால்நடைகளை ஆய்வுகள் செய்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு அந்நோய் பரவாமல் தடுப்பதை உறுதி செய்யவும், அதனை தீவிரமாக கண்காணிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தமிழக அரசை என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in