வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுழலில் சிக்கி சிஆர்பிஎஃப் வீரர் உள்பட இருவர் பலி: மேலும் நான்கு பேரின் கதி?

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுழலில் சிக்கி சிஆர்பிஎஃப் வீரர் உள்பட இருவர் பலி: மேலும் நான்கு பேரின் கதி?

மதுரை திருவேடகம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற ஆறு பேர் திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கினர். இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், மாயமான நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், மதுரை மாவட்டம் கரடிக்கல் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ஆறு பேர் திருவேடகம் சாய்பாபா கோயில் அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் இன்று குளிக்கச் சென்றனர். அங்குள்ள தடுப்பணையின் மீது ஏறி குதித்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் சுழலில் ஆறு பேரும் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக சுழலில் சிக்கிய வினோத்குமார், அன்பரசன் ஆகிய இருவரது உடல்களும் மீட்கப்பட்டது. இதில், வினோத்குமார் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வந்ததும், அவருக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆனதும் தெரிய வந்துள்ளது.

மேலும், மாயமான மற்ற நான்கு பேரையும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக தடுப்பணைக்கு அருகே சுழற்சி ஏற்பட்டுள்ளதால் நான்கு பேரும் அதில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்திருக்க கூடும் என்கின்றனர். அனுப்பானடி, அலங்காநல்லூர், சோழவந்தான் ஆகிய பகுதிகளைச் சேர்த்த தீயணைப்புத்துறையினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in