'என் மகன் தீக்குளித்து தற்கொலை செய்ததற்கு 6 பேர் காரணம்': சுங்கச்சாவடி ஊழியரின் தந்தை பரபரப்பு புகார்

'என் மகன் தீக்குளித்து தற்கொலை செய்ததற்கு 6 பேர் காரணம்': சுங்கச்சாவடி ஊழியரின் தந்தை பரபரப்பு புகார்

அனுமதியின்றி விடுமுறை எடுத்ததாக கூறி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் சுங்கச்சாவடி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு சுங்கச்சாவடி நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 6 பேர் தான் காரணம் என அவரது தந்தை போலீஸில் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிக்காடு அருகே உள்ளது சு. ஆடுதுறை. இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால், திருமாந்துறை சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவில் ரோந்து வாகனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக அன்றைய தினம் கோபால் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், நிர்வாகம் தரமறுத்துள்ளது. ஆனால், அனுமதியின்றி கோபால் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய கோபாலிடம் மேற்பார்வை பணியிலிருந்த அலுவலர் செந்தில் குமார், ஒரு வார காலத்திற்கு கோபாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறி பணி வழங்க மறுத்துள்ளார்.

தனது நடவடிக்கை காலம் முடிந்து கோபால் பணிக்கு நேற்று சென்றுள்ளார். ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகம் கோபால் மீது விசாரணை நடத்த உள்ளதாக கூறி, நிர்வாகம் அனுமதித்தால் பணிக்கு வரலாம் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த கோபால் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மங்களமேடு போலீஸார், கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு, சுங்கச்சாவடி நிர்வாக பிரிவில் பணியாற்றும் மனோஜ், சிவசங்கர், கருணாகரன், ராஜ்கிரண், செந்தில்குமார் மற்றும் சபியுல்லா ஆகியோர் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபாலின் தந்தை முருகேசன் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in