இவர்களின் குறி விலை உயர்ந்த `பைக்'... திருட்டு பணத்தில் உல்லாச சுற்றுலா: போலீஸை அதிர வைத்த சிறுவர்கள்

இவர்களின் குறி விலை உயர்ந்த `பைக்'... திருட்டு பணத்தில் உல்லாச சுற்றுலா: போலீஸை அதிர வைத்த சிறுவர்கள்

மதுரையைச் சேர்ந்த ஆறு சிறுவர்கள் தொடர் வழிப்பறி மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு அதில் வரக்கூடிய பணத்தைக் கொண்டு ஊர் ஊராக உல்லாசமாக சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் அடைத்தனர்.

மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருட்டு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், திருட்டைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை மதுரை செல்லூர் பகுதியில் சிலர் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். அங்கு, ரகளையில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அச்சிறுவனின் செல்போனில் விலை உயர்ந்த பைக்குகளுடன் புகைப்படம் எடுத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, புகைப்படத்தில் இருந்த வண்டி எண்களை ஆய்வு செய்ததில், அவை அனைத்தும் திருட்டு வண்டி என்பது தெரிய வந்தது. கூடுதல் விசாரணையில் அச்சிறுவனுடன் தொடர்புடைய நண்பர்கள் ஐந்து பேர் என மொத்தம் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுவரை எட்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அதே போன்று ஒன்பது விலை உயர்ந்த பைக்குகளை திருடி விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். திருடி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கு ஊர் ஊராக உல்லாசமாக சுற்றுலா சென்று வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுவர்கள் திருடிய ஒன்பது இருசக்கர வாகனங்களையும், ஐந்து செல்போன்களையும் மீட்ட காவல்துறையினர் சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in