அசாம் - மேகாலயா மாநிலத்தவரிடையே மோதல்: 6 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

அசாம் - மேகாலயா மாநிலத்தவரிடையே மோதல்: 6 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!

அசாம் - மேகாலயா மாநில எல்லைப் பகுதியில் இரு மாநிலத்தவரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அசாமின் மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்டத்தில், மேகாலயா எல்லைக்கு அருகே மரக் கடத்தலில் ஈடுபட்ட மேகாலயா லாரியை வழிமறித்ததால் வெடித்த விவகாரம் இது.

முக்ரு வனப் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை ஏற்றிக்கொண்டு, மேகாலயாவின் மேற்கு ஜயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தை நோக்கிச் சென்ற லாரி ஒன்றை இன்று அதிகாலை 3 மணி அசாம் வனத் துறை அதிகாரிகள் வழிமறித்தனர். அப்போது அங்கிருந்து மேகாலயா மாநிலத்தவர் தப்பிச் செல்ல முயன்றபோது வனக் காவலர்கள் அந்த லாரியின் டயர் மீது சுட்டு அதை பங்க்ச்சர் செய்தனர். லாரி ஓட்டுநரும், உதவியாளர் ஒருவரும் பிடிபட்ட நிலையில் மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக அருகில் உள்ள ஜிரிகெண்டிங் காவல் நிலையத்துக்கு வனக் காவலர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்த நிலையில், காலை 5 மணி அளவில் மேகாலயாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்தது. கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி அவர்களுடன் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்தனர்.

இதையடுத்து அசாம் காவலர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக அவர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் கோன்ராட் சங்மா ட்வீட் செய்திருக்கிறார். அசாம் தரப்பில் வனக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேகாலயா எல்லை அருகில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

884.9 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இரு மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது எல்லைத் தகராறு ஏற்படுவது உண்டு. 1972-ல் அசாம் மாநிலத்திலிருந்து மேகாலயா தனிமாநிலமாக உருவானது முதல் இருந்துவரும் பிரச்சினை இது. குறிப்பாக, எல்லையில் உள்ள 12 பகுதிகளில் பிரச்சினை அதிகம். இவற்றில் 6 பகுதிகள் தொடர்பான பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் கடந்த மார்ச் மாதம், உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் டெல்லியில் இரு மாநிலங்களும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. மீதம் உள்ள 6 பகுதிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இந்தச் சூழலில் இப்படி ஒரு மோதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசியுங்கள்:

அசாம் - மேகாலயா மாநிலத்தவரிடையே மோதல்: 6 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு!
மல்லுக்கு நிற்கும் மாநிலங்கள்: அதிரவைக்கும் அசாம் – மிசோரம் மோதல்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in