ஆபரேஷன் கங்கா: இந்தியர்களை மீட்டுவரும் 6 விமானங்கள்!

உக்ரைனுக்கு உதவ நிவாரணப் பொருட்களுடன் ருமேனியா செல்லும் விமானப் படை விமானம்
ஆபரேஷன் கங்கா: இந்தியர்களை மீட்டுவரும் 6 விமானங்கள்!
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர தொடங்கப்பட்டிருக்கும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின்கீழ், கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துக்கொண்டு கிளம்பியிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதும், வான்வெளி மூடப்படுவதாக உக்ரைன் அறிவித்துவிட்டது. இதனால் விமானங்கள் மூலம் யாரும் தப்பிச் செல்லும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து, உக்ரைன் அருகில் உள்ள ஹங்கேரி, ருமேனியா, போலந்து, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு சாலை மார்க்கமாகச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தத்தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் வெளிநாட்டினர். உக்ரைனில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களும் அப்படித்தான் தப்பிக்க வேண்டியிருக்கிறது. கூட்ட நெரிசல், உக்ரைன் காவலர்களின் தாக்குதல்கள் என அதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால், பல மாணவர்கள் வெளியேற முடியாமல் பரிதவித்துவருகின்றனர். இதற்கிடையே, நேற்று கார்கிவ் நகரில் கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் குமார் போரில் பலியானது இந்தியர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து கிளம்பியிருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பது நம்பிக்கை தரும் தகவலாகப் பார்க்கப்படுகிறது. முதல் விமானம் போலந்திலிருந்து கிளம்பியிருக்கிறது.

மேலும் இந்திய விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் இன்று அதிகாலை ருமேனியாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. அதே விமானம் திரும்பிவரும்போது ருமேனியாவிலிருந்து இந்தியர்களை அழைத்துவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவ நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் முதல் விமானம் போலந்துக்குப் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.