`இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது'- தமிழக மீனவர்கள் கைதால் கொந்தளிக்கும் ராமதாஸ்

கைதான ஆறு மீனவர்கள்
கைதான ஆறு மீனவர்கள்

கோடியக்கரை, தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்த விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று இரவு 300-க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளன. அதில், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகும் சென்றுள்ளது. அதில், பாலமுருகன், அந்தோணி, அர்ஜுனன், மடுகு பிச்சை, தங்கப்பாண்டி, ராஜா உள்ளிட்ட ஆறு பேர் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் தலைமன்னாருக்கும், கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் ஆறு பேரையும் இலங்கை மன்னர் பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்‌. மேலும், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் அங்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் போதும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், 'வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in