
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா, தங்கை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கையில் பையுடன் 2 பெண்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். நுழைவு வாயில் அருகே வந்ததும் தாங்கள் வைத்திருந்த பையில் இருந்த விஷபாட்டிலை எடுத்து குடிக்க முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், ஓடிச்சென்று பெண்கள் விஷத்தை குடிப்பதற்கு முன்பு பாட்டிலைத் தட்டிவிட்டனர். பின்னர் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பழநி சண்முகபுரத்தை சேர்ந்த நாகரத்தினம் ( 42), ஆர்.எப்.ரோட்டைச் சேர்ந்த முத்துமாணிக்கம் (40) என்பதும், இருவரும் சகோதரிகள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களுக்கு சேர வேண்டிய சொத்தை சகோதரர் கடந்த 10 ஆண்டுகளாக பிரித்து கொடுக்காமல் இருக்கிறார். எனவே சகோதரரிடம் இருந்து சொத்தை மீட்டு தரவேண்டும். அது கிடைக்கவில்லையென்றால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. இதனால் தான், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தற்கொலைக்கு முயன்றோம் என்றனர்.
இதையடுத்து அந்த பெண்களை எச்சரித்த போலீஸார், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா-தங்கை விஷம் குடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.