
இரண்டு கால்களும் அழுகிய நிலையில் உள்ள மாணவி அபிநயாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவி வைத்த கண்ணீர் கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் கனிமொழி. இவர் கணவர் இறந்து விட்டார். இவருக்கு அபிநயா 14 வயது என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். 9-ம் வகுப்பு படித்து வரும் அபிநயாவுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரது தாயார் கனிமொழி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் மகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி அபிநயாவுக்கு திடீரென இரண்டு கால்களும் கருப்பாக மாறி இருக்கிறது. இதையடுத்து மாணவியின் கால்களில் வலி ஏற்பட்டு படுத்த படுக்கையானார். மாணவியின் தண்டுவடத்தில் ரத்தக்கட்டு உருவாகி, அதனால் கால் விரல்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு கால் அழுகல் நோய் ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மகள் அபிநயாவை ஜிப்மர் மருத்துவமனையில் தாயார் கனிமொழி சேர்த்திருக்கிறார். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள், கால்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று கூறி இருக்கின்றனர். இதனிடையே மாணவி அபிநயா பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் பேசிய மாணவி, "ஜிப்மர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கே காலை எடுக்கணும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். காலை எடுத்து விட்டால் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது. எனது கால்களை சரி செய்து தரும்படி முதல்வர் ஐயாவை கெஞ்சி கேட்கிறேன்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மாணவி நிலை குறித்து மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து மாணவியை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவி அபிநயா ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நேற்றிரவு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மாணவி அபிநயா அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் மருத்துவமனையில் இருக்கின்ற மருத்துவர்கள் அனைவரும் மாணவியை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். மாணவிக்கு உடனடியாக தேவை தோல் நோய்க்கான சிகிச்சை. மருத்துவமனையில் தோல் நோய்க்கான பிரத்தியேக மருத்துவர்கள் இருக்கிறார்கள். அங்கு மாணவி அபிநயா அனுமதிக்கப்பட்டு காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உயிரை காப்பாற்றுவதற்கு முதல்வர் மனிதநேய நடவடிக்கைகள் உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்றார்.