சிறகை விரி உலகை அறி - 100; லண்டன் கோபுரம்: கோஹினூர் வைரமும் சித்திரவதைக் கூடமும்!

லண்டன் கோபுரம்
லண்டன் கோபுரம்

குளிரில் தேநீர் பிடிக்கும், சுடுநீரில் குளிக்கப் பிடிக்கும், சூடான உணவுக்கு உள்ளங்கைகள் பரபரக்கும்! இவை அனைத்துடனும் ஐஸ் கிரீமும் பிடிக்கும் என சொல்ல வைத்தது லண்டன் பயணம்.

காலை 11 மணிக்கு, தேம்ஸ் கரையோரம் நடந்தேன். எல்லாரின் முகங்களிலும் நதி முகம் பிரகாசித்தது. நதியைப் பார்த்தேன், அலைகள் கழுவிய மனிதக் கவலைகள் மடிந்து ஓடிக்கொண்டிருந்தன. நதியைக் குடித்த கண்களை பாதைக்குத் திருப்பினேன். பிங்க் நிற குச்சி ஐஸ் சாப்பிட்டபடி சிறுவர்களும் பெரியவர்களும் என்னை கடந்து சென்றார்கள். ‘இந்தக் குளிரிலும் ஐஸா!’ வியப்பில் புன்னகைத்து முன்னகர்ந்தேன். தங்களின் புதிய ஐஸ் வகையை ஒரு நிறுவனம் இலவசமாக கொடுத்துக்கொண்டிருந்தது. வாங்கினேன். சுவைத்தேன். மெய் மறந்தேன். குளிரில் ஐஸ் கடை தேடும் பழக்கம் அன்றிலிருந்து உருவாகிவிட்டது.

தேம்ஸ் நதி பயணம்
தேம்ஸ் நதி பயணம்

தேம்ஸ் நதி பயணம்

சாப்பிட்டு முடிக்கும்போது, சக்கர வடிவ ‘லண்டன் கண்’ முன்னால் நின்றேன். அதில் ஏறி 360 டிகிரி கோணத்தில் நகரத்தைப் பார்க்க முடியும். நான் சென்றிருந்த நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், அதன் பிரமாண்டத்தை ரசித்துவிட்டு நடந்தேன். வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தைக் கடந்து வடகரைக்குச் சென்றேன்.

வெஸ்ட்மின்ஸ்டர் படகுத் துறையில் இருந்து, கிரீன்விச் வரை தேம்ஸ் நதியில் பயணிக்க, பயணச் சீட்டு வாங்கினேன். 5 மொழிகள் உள்ளடங்கிய கையேடு கொடுத்தார்கள். பயண வழியில் நதிக்கரையில் உள்ள 49 முக்கிய இடங்களைப் பற்றிய குறிப்புகளும் வரைபடமும் அதில் இருந்தன. படகு புறப்பட்டது.

படகில் மோதிய அலைகள் என்னை மேல் தளத்துக்கு அழைத்தன. சென்றேன். நாடி நரம்பெல்லாம் குளிர் குடிக்கத் தொடங்கியது. காய்ந்த உதடுகளைப் பிய்த்துப் பார்த்தது காற்று. எச்சில் பட்ட நேரங்களில் காற்றின் குரூரம் மூளைக்கு உரைத்தது. எதைக் கண்டும் கலங்காது, கண்களும் மனதும் தேம்ஸில் விளையாடிக் களித்தன. படகு கிழித்த அலையுடல் அலைந்த சில விநாடிகளில் அலைகளால் தைக்கப்பட்டன. பொங்கி பிரவாகம் எடுத்த நதி அதை கொண்டாடியது.

‘தள்ளாடும் பாலம்’

ஹங்கர்போர்ட்டு நடை பாலம், வாட்டர்லூ பாலம் மற்றும், பிளாக்ஃபயர்ஸ் பாலத்துக்குப் பிறகு மில்லேனியம் பாலத்தைக் கடந்தோம். இப்பாலம் 2000–ஆம் ஆண்டு ஜுன் மாதம் திறக்கப்பட்டது. மக்கள் நடக்கத் தொடங்கியதும் பாலம் பயங்கரமாக ஆடியது. மக்கள் பயந்தார்கள். பாலத்தில் நடக்கத் தடை விதித்து, சீரமைத்தது அரசு. 2002-இல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மக்கள் மத்தியில் மில்லேனியம் பாலம், ‘தள்ளாடும் பாலம்’ ஆனது.

லண்டர் டவர் பாலம்
லண்டர் டவர் பாலம்

பாலத்தைத் தாண்டிய பேருந்து

சவுத்வார்க் பாலத்தைத் கடந்தோம். கண்ணுக்கு முன்னே மிகப் பிரமாண்டமாக டவர் பாலம் (கட்டுரை 80) இருந்தது. பாலத்தை கடந்த போது, 70 ஆண்டுக்கு முந்தைய நிகழ்வு நினைவுக்கு வந்தது. 1952, டிசம்பர் 30 அன்று, 78-ஆம் எண் பேருந்து பாலத்தில் சென்று கொண்டிருந்தது. பாதி தூரம் சென்றிருந்த நேரம், திடீரென பாலம் தூக்க ஆரம்பித்தது. என்ன செய்வது? நொடிப்பொழுதில் யோசித்த ஓட்டுநர் ஆல்பர்ட், ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார். முதல் பாலத்தின் முனை பகுதியிலிருந்து தாவிய பேருந்து, மறுபகுதியின் முனையில் இறங்கியது. எல்லோரும் காயமின்றி தப்பினார்கள்.

குதியாட்டம் போடலாம்!

பாலத்தைக் கடந்ததும் கையுறையையும், குளிர் ஆடையையும் களைந்தேன். அருகிலிருந்த காதல் ஜோடியிடம் என்னை படமெடுக்கச் சொன்னேன். துள்ளிக் குதித்தேன். “தயவு செய்து விரைவில் குளிராடையை அணியுங்கள்” என கெஞ்சினார்கள். செல்பி வீடியோ எடுத்தேன். துடிக்கும் உதடுகளை நிறுத்தி வார்த்தைகளை பெரும்பாடுபட்டு உச்சரித்தேன். ஆனந்தம் கூத்தாடும் பொழுதில் குளிரை பெரிதுபடுத்தவில்லை மனது.

70 நிமிடங்கள் பயணித்து கிரீன்விச் படகுத் துறை சென்றோம். 1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கிலாந்தின் நுழைவாயிலாக இருந்த இடம் இது. லண்டனை ஆக்கிரமிக்க வந்த வெளிநாட்டு கப்பல்கள் இவ்வழியாகத்தான் நுழைந்தன. பூங்காவைச் சுற்றிப் பார்த்தேன். படகில் திரும்பி செல்லாமல், தொடர்வண்டியில் லண்டன் கோபுரம் சென்றேன்.

தேம்ஸ் நதிக் கரையில் லண்டன் கோபுரம்
தேம்ஸ் நதிக் கரையில் லண்டன் கோபுரம்

லண்டன் கோபுரம்

லண்டன் கோபுரம் என்றதும், கோவில் கோபுரம், கலங்கரை விளக்கம், ஈபிள் கோபுரம் போல இருக்கும் என நினைக்க வேண்டாம். இது அதுக்கும் மேலே! கோட்டை, அரண்மனை, சிறை மூன்றும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இடத்துக்கு, லண்டன் கோபுரம் என்று பெயர்.

பிரான்ஸ் நாட்டு முதலாம் வில்லியம் (William the Conqueror) 1070களில் இங்கிலாந்தின் மீது படையெடுத்து வெற்றிகொண்டார். தனக்கு எதிராக கலவரங்கள் வெடிக்கலாம் என பதறி, தன் அதிகாரத்தை பாதுகாக்கவும் பிற அரசுகளுக்கு அறிவிக்கவும், லண்டன் மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கவும் கற்களால் மிகப்பெரிய கோட்டை கட்டினார். 20 ஆண்டுகள் வேலை நடந்தது. அப்போது கட்டப்பட்ட செயிண்ட் ஜான் கோவிலில் இப்போதும் வழிபாடுகள் நடக்கின்றன.

செயிண்ட் ஜான் கோவில்
செயிண்ட் ஜான் கோவில்

ரகசியங்கள் நிறைந்த கோபுரம்

அசர்கள் மூன்றாம் ஹென்றி (1216-72) மற்றும் முதலாம் எட்வர்ட் (1272-1307) சிறு சிறு கோபுரங்களுடன் கோட்டைச் சுவர்களை பெரிதாக்கினர். குறிப்பாக, முதலாம் எட்வர்ட் காலத்தில், தேம்ஸ் நதி நீரில் மர அடுக்குகளையும் மண்ணையும் போட்டு அடித்தளம் அமைத்ததை, 1959-இல் தாமஸ் கோபுரத்துக்கு வெளியில் நடந்த அகழாய்வு நிரூபிக்கிறது.

லண்டன் கோபுர வரைபடம்
லண்டன் கோபுர வரைபடம்

லண்டன் கோபுரத்தில் அரசர்களும் அரசிகளும் ஏகபோக வாழ்வு வாழ்ந்தனர்; ஆட்சி அதிகாரத்தால் நாட்டிலும், உலகிலும் முத்திரை பதித்தனர். அதேவேளையில், ரோஸ் போரின்போது (The Wars of Roses) ஆறாம் ஹென்றி இங்குதான் 1471-இல் கொலை செய்யப்பட்டார். நான்காம் எட்வர்டின் குழந்தைகளான இளவரசர்கள் இருவரும் இங்குதான் காணாமல் போயினர். 1674-இல் கிடைத்த இரண்டு எலும்பு கூடுகளை 1933-இல் மறுபரிசோதனை செய்தபோது அவை 12 மற்றும் 10 வயது சிறுவர்களின் எலும்புக்கூடுகள் என கண்டறியப்பட்டது. இளவரசர்கள் காணாமல் போனது அந்த வயதில்தான்.

தன் மனைவி ஆன் பொலீன் முடிசூட்டு விழாவுக்கென இங்கே தனி அறை தயார் செய்தார் எட்டாம் ஹென்றி. விருந்து கொண்டாட்டம் முடிந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெற்றிப் பவனி சென்றார் ஆன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, விபச்சாரம் மற்றும் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் இதே கோபுரத்துக்கு அழைத்து வரப்பட்டார். வாளுக்கு இரையானார்.

கீழே இருப்பது துரோகியின் வாயில்
கீழே இருப்பது துரோகியின் வாயில்

துரோகியின் வாயில்

அகழியைக் கடந்து, லண்டன் கோபுரத்துக்குள் சென்றேன். சுவர்கள் அனைத்தும், மஞ்சள் வெயிலில் தகதகத்தன. வளாகத்தைச் சுற்றினேன். ஆன் உள்ளிட்டோரின் கல்லறைகளைப் பார்த்தேன். நதி வழியாக கோபுரத்துக்குச் செல்லும் நுழைவாயில், துரோகியின் வாயில் எழுதப்பட்டிருந்தது. இந்த நதி வாயில் வழியாக முக்கிய கைதிகள் கோபுரத்துக்கு உள்ளேயும், நதி வழியாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

தொங்கவிட்டு சித்திரவதை செய்தல்
தொங்கவிட்டு சித்திரவதை செய்தல்

கொடூர சித்திரவதைகள்

‘சித்திரவதை கோபுரம்’ பகுதிக்குள் நுழைந்தேன். இங்கிலாந்தின் கொடூர முகத்தை நாம் அறியக் கூடாது என்பதற்காக நுழைவாயிலிலேயே, ’இங்கிலாந்தில், சித்திரவதை செய்வதற்கு சட்ட அனுமதி கிடையாது. புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலும், 81 கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தரவுகளே கிடைத்துள்ளன. அதில், 48 இந்த கோபுரத்தில் நடந்தது. ஆவணப்படுத்தப்பட்ட இந்த வழக்குகள், 1540-1640 காலகட்டத்தில் நிகழ்ந்ததாகும். சித்திரவதை, அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து சட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததேயில்லை. பெரும்பாலும், கொலை, கொள்ளை உள்ளிட்ட கடுமையான குற்றங்களை விசாரிக்கும்போதுதான் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 17-ஆம் நூற்றாண்டில் அரசியல் கைதிகள் மற்றும் தேச துரோக குற்றவாளிகள் மீது சித்திரவதை நிகழ்த்தப்பட்டது’ என எழுதப்பட்டுள்ளது.

மரச்சட்டத்தில் படுக்க வைத்து, சித்திரவதை செய்தல்
மரச்சட்டத்தில் படுக்க வைத்து, சித்திரவதை செய்தல்

சித்திரவதைகளின் வகைகளைப் பார்த்தேன்;

·       தலைக்கு மேலே கைகள் இரண்டையும் அகலமாக விரித்து வளையத்துடன் கட்டி, 5 முதல் 6 மணி நேரம் அந்தரத்தில் நிற்க வைத்துள்ளனர்.

·       மரச்சட்ட சித்திரவதை (The Rack): பலகையில் கைதியை படுக்க வைத்து, கால்களை கட்டுவர். கைகளை பின்னால் இழுத்து கட்டுவர். கருவியின் உதவியால், ஒரே நேரத்தில் கால்களையும் கைகளையும் எதிரெதிர் திசையில் இழுப்பர். கைதியின் உடல் மேலெழுந்து அந்தரத்தில் தொங்கும்.

·       தோட்டியின் மகள் (Scavenger’s Daughter): கைதி தன் கால்களை மடக்கி வயிற்றுடன் வைத்து, தலையை முழங்காலுக்கு மேல் வைக்க வேண்டும். மூன்றாக மடங்கிய உடலை, ஓர் இடுக்கிக்குள் வைத்து நெறிப்பர்.

கவச மற்றும் ஆயுத அறை
கவச மற்றும் ஆயுத அறை

அரசர்களின் ஆயுதங்களும் கவசங்களும்

இங்கிலாந்தின் பல்வேறு அரசர்களும் பயன்படுத்திய ஆயுதங்கள், கவசங்கள், குதிரைகளின் மாதிரிகள் காலவரிசைப்படி பிரமாண்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆயுதங்களை சிறுவர்கள் அறிந்துகொள்ள புதுமையான விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளார்கள். உதாரணமாக, எதிரில் உள்ள அரசரின் உருவத்துக்கு சரியான கவச உடைகளைத் தேர்வு செய்து அணிவிப்பது; பீரங்கியை இயக்குவது; சிறந்த வில்லாளியாக இருக்கிறோமா என அறிவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. அறை முழுவதும் குழந்தைகள். அவர்களின் உற்சாகம் என்னிலும் பரவியது.

உங்களது இடது புற கட்டிடத்தில் இருக்கிறது கோஹினூர் வைரம்
உங்களது இடது புற கட்டிடத்தில் இருக்கிறது கோஹினூர் வைரம்

அரச கிரீடங்களின் அணிவகுப்பு

கடைசியாக, அரச கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்குள் சென்றேன். தீவிர பரிசோதனை செய்து அனுப்பினர். படமெடுக்க அனுமதியில்லை. 1660 முதல், அரசர்களும் அரசிகளும் சூடிய அரச கிரீடங்களும்,  கோஹினூர் வைரமும் இங்குதான் உள்ளது. இருள் சூழ்ந்த அறையில், கிரீடங்களில் மட்டும் வெளிச்சம் படுகிறது. மின்னி ஜொலிக்கும் ஒவ்வொரு கிரீடத்தையும் பார்த்துவிட்டு வெளியில் வந்தேன்.

 (பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in