சிறகை விரி உலகை அறி - 92: சிக்மண்ட் பிராய்ட் எனும் புது வெளிச்சம்

சிக்மண்ட் பிராய்ட் குடும்பத்தினர்
சிக்மண்ட் பிராய்ட் குடும்பத்தினர்

மழைக் கவி நம் தலை நிமிர்த்துகிறாள்! விழி ஏகும் துளி, சன்ன வண்ண ஒளி, கதை எழுதும் மா முகில், காற்று வருடும் பூங்கொடி, முகங் கழுவும் சாரல், மரந் தழுவும் நீர் எல்லாம் அதிசயம்.

மழை மடிந்த பொழுதில் உலாவும் பூனை, ஊரும் எறும்பு, ஓடும் நாய், அசைந்து நடக்கும் மாடு, கொக்கொக் கோழி ஆகியவற்றின் கால் தடங்கள் தனித்தனியாகவும், ஒன்றோடொன்று கலந்தும் படைக்கின்ற பேரோவியம் கிராமத்து வீதிகளில் காணக் கிடைக்கும் பேரதிசயம்.

வாத்துகள் நடமாடும் ஏரி

பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில், செய்ன்ட் ஜேம்ஸ் பூங்காவில் முந்தைய நாள் மழையில் நனைந்த மரங்கள் களைத்திருந்தன. செந்நிற இறக்கை, தலை, கால்கள், மஞ்சள் நிற கழுத்து, வெண்ணிற உடல் கொண்ட வாத்துகள் எமதருகில் வந்தன. கம்பி வேலிக்கு உள்ளே நின்று உற்சாகம் கொடுத்தன. குடை விரித்த அதன் பாதங்கள் ஈர நிலத்தில் பதிந்தன. வாத்துகளின் பாத தடத்தை முதன் முறையாகப் பார்த்தேன். சிவப்பு பேருந்து, சிவப்பு தொலைபேசி கூண்டு, சிவப்பு அஞ்சல் பெட்டி, குளம் மற்றும் வாத்துகள் இல்லாமல் லண்டன் ஓவியம் முழுமையாகாது என்று எப்போதோ வாசித்ததை நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறு வனம்போல் காட்சி தருகிறது பூங்கா. நடுவில் நீர் நிறைந்த ஏரி இருக்கிறது. ஏரியில் 1749-ல், அரசர் 2-ம் ஜார்ஜ், பிரம்மாண்ட வாண வேடிக்கைக்கும், இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, வெடிகள் திசை மாறிச் சென்றதால் விபத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க நாலாபுறமும் மக்கள் ஓடியிருக்கிறார்கள். இப்போது, இயற்கை எழில் கொஞ்சும் ஏரியில் நீர் அலைகிறது.

செய்ன்ட் ஜேம்ஸ் வளாகம்
செய்ன்ட் ஜேம்ஸ் வளாகம்

பூங்காவுக்கு 1664-ல், பெலிக்கான் பறவைகளைப் பரிசாக வழங்கினார் ரஷ்ய தூதர். அதுமுதல், அரிதான காட்டுப் பறவைகளைச் சேகரிக்கும் பாரம்பரியம் தொடர்கிறது. தற்போதும், காட்டு வாத்து (mallard), முடிச்சான் வாத்து (Tufted Duck) உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காட்டுப் பறவை இனங்கள் பூங்காவில் இனப்பெருக்கம் செய்கின்றன. பயணிகளை மகிழ்விக்க, ஏரியில் நீரூற்று உள்ளது. 8 மீட்டர் உயரத்துக்கு நீர் எழும்பி, பார்ப்பவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

குளுகுளு காற்றில் நனைந்து தோட்டத்தில் நடந்தேன். எங்கெங்கோ இருந்த மேகங்கள் என்னைக் காண ஒன்று கூடின. அவை பேச தொடங்கினால், அதன் அன்பில் நனைந்துவிடுவேன். நனைவதற்கு இது நேரமில்லை என்பதால், தொடர்வண்டி நிலையம் விரைந்தேன். பாதாள தொடர்வண்டி என்பதால், பயணத்தின்போது திறன்பேசியில் உள்ள படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். நைட்டிங்கேல் அருங்காட்சியத்தில் எடுத்த ஒரு படத்தில், புளோரன்ஸ் எழுதிய புத்தகத்தைப் பார்த்தேன். அடுத்தடுத்த படங்களில் உள்ளவற்றை வாசித்தேன்.

எழுத்தாளர் புளோரன்ஸ்

புளோரன்ஸ், தன் வாழ்நாளில், ஏறக்குறைய 200 புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள், கட்டுரைகள், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியுள்ளார். மதம், தத்துவம், சுகாதாரம், செவிலியப் பணி, சுத்தம், மருத்துவமனை, மற்றும் புள்ளியியல் பற்றி எழுதியிருக்கிறார். வீட்டில் இருக்கும் பெண்கள், நோயுற்ற ஒருவரை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும், நோயின் அறிகுறிகளை எப்படி கண்டறிவது மற்றும் சுத்தம், தடையற்ற காற்று, வெளிச்சம், ஆரோக்கியமான உணவின் தேவை குறித்தும் எழுதியுள்ளார். அவை, Notes of Nursing எனும் புத்தகமாக வெளிவந்துள்ளது. ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Notes of Nursing
Notes of Nursing

பிறரை அறிதலும் புரிதலும்

தொடர்வண்டி நிறுத்தத்தில் இறங்கினேன். சிக்மண்ட் பிராய்ட் வீடு நோக்கி புறப்பட்டேன். ஆஸ்டிரியா-ஹங்கேரி பேரரசின் எல்லைக்குட்பட்ட மொராவியாவில் 1856, மே 06-ம் தேதி பிறந்தவர் பிராய்ட். தற்போதைய ஆஸ்டிரியாவின், வியன்னா நகரத்தில் வளர்ந்தார். வியன்னா பல்கலைக்கழக்தில் மருத்துவ பட்டம் பெற்றார். பேராசிரியராக பணியாற்றினார். மார்த்தா என்பவரை மணமுடித்தார். 6 குழந்தைகளின் தந்தையானார்.

சிறு வயதில் ஒருவர் அனுபவித்த அல்லது அனுபவிக்காத நன்மை, தீமை, அன்பு, இழப்பு, இறப்பு, பாலுணர்வு, சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றோரின் குணாதிசயங்களின் கலவையான உணர்வுகளே ஒவ்வொருவரின் குணநலன்களாக வெளிப்படுகிறது என்றார் பிராய்ட். ஒருவரின் ஆழ் மனதில் உறங்கும் நினைவுகளையும் நிறைவேறாத விருப்பங்களையும் ஆய்வு செய்து, நிகழ்கால குணநலனைப் புரிந்துகொள்ள வழி காட்டினார். அவரது வழிமுறை, உளப்பகுப்பாய்வு சார் கோட்பாடு (Psychoanalytic Theory) எனப்படுகிறது.

தந்தையுடன் சிக்மண்ட் பிராய்ட்
தந்தையுடன் சிக்மண்ட் பிராய்ட்

யூத மத பெற்றோருக்கு பிறந்தவர் பிராய்ட். மதத்தின் மீது பற்று இல்லாவிட்டாலும், யூதர் என்பதால் மற்றவர்கள் அனுபவித்த அனைத்து துயரங்களையும் பிராய்ட் எதிர்கொண்டார். 1933-ல் நாஜி கட்சியினர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்தனர். வலதுசாரி சித்தாந்தத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தினர். பிராய்ட் உள்ளிட்ட யூத அறிஞர்களின் எழுத்துகளையும் படைப்புகளையும் பொது வெளியில் தீயிட்டு எரித்தனர். இந்நிகழ்வு குறித்து, “நான் உருவாக்கிய அறிவியல் அமைப்பு (scientific society) கலைக்கபட்டதை, எங்களது நிறுவனம் அழிக்கப்பட்டதை, எங்களின் அச்சுக்கூடம் ஆக்கிரமிப்பாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டதை, நான் வெளியிட்ட புத்தகங்கள் கிழித்து தீயிட்டு எரிக்கப்பட்டதை, தாங்கள் பணியாற்றிய வேலைகளில் இருந்து என் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டதை நான் பார்த்தேன்” என பிராய்ட் எழுதுகிறார்.

அகதியான பிராய்ட்

அச்சத்துடன் பிராய்ட் பல வாரங்கள் தவித்தார். யாரையும் நம்பி உதவி பெற இயலாத நிலையில், நண்பர்களும் உயர் அதிகாரிகளும் உதவ முன் வந்தார்கள். வியன்னாவில் இருந்து 1938, ஜுன் 4-ம் தேதி அகதியாக புறப்பட்டார். தொடர்வண்டியில் பாரிஸ் வழியாக லண்டன் சென்றார். பிராய்ட் லண்டன் வருவதை அறிந்தவர்கள், அதை தங்களின் பெருமையாக நினைத்தார்கள். தான் புகழ் பெற்றிருந்ததை நினைத்து பிராய்ட் மனம் மகிழ்ந்தார்.

ஏறக்குறைய, தன்னுடைய எல்லா பொருட்களையும் எடுத்து வந்திருந்த பிராய்ட், புதிய வீட்டை, தன் ஆய்வுக்குரிய இடமாகவே மாற்றினார். ஒரே ஆண்டில், 1939 செப்டம்பர் 23-ம் தேதி 83 வயதில் இறந்தார். மானுட சமூகத்துக்கு பிராய்ட் வழங்கிய அறிவு சார் பங்களிப்பு மற்றும் அவருடைய வாழ்வின் சாட்சியாக அவ்வீடு திகழ்கிறது. அவ்வீட்டுக்குச் சென்றேன்.

சிக்மண்ட் பிராய்ட் வீடு
சிக்மண்ட் பிராய்ட் வீடு

ஒளிரும் வீடு

தொடர்வண்டி நிலையத்திலிருந்து, சாலையைக் கடந்தேன். மேட்டுப் பகுதியில் நடந்தேன். நேரே வெகுதூரம் சென்றுவிட்டதால், சிறிது தூரம் திரும்பி வந்து இடது புறம் சாலையைக் கடந்து குறுக்கு வீதியில் ஏறினேன். பெயர் பலகைகள் வழிகாட்டின. குடியிருப்புக்கு மத்தியில், மற்ற வீடுகளுள் ஒன்றாக உள்ள, பிராய்ட் வீட்டுக்கு முன்பாக மாலை 4.15க்கு நின்றேன்.

குளிர்கால இருள் கவியத் தொடங்கிவிட்டது. மின்னொளியில் வீடு தகதகத்தது. இயற்கை ஒளி முற்றிலும் மறைவதற்குள், என் முகம் தெரிய படம் எடுக்க விரும்பினேன். அடுத்தவரின் உதவியில், திறன்பேசிக்குள் அழகிய நினைவானேன்.

சுற்றுச்சுவர் தாண்டி, உள்ளே நுழையும்போதே, “இந்த அருங்காட்சியகம் அரசு நிதி உதவி ஏதுமின்றி, தாராள உள்ளம் கொண்ட நண்பர்களின் உதவியால் செயல்படுகிறது” என்று எழுதியிருந்ததை வாசித்தேன். உளவியல் துறை ஆய்வு மாணவன் என்பதால் சலுகையுடன் நுழைவுச் சீட்டு வழங்கினார்கள். உள்ளே சென்றேன். யார் யாரெல்லாம் இந்த வீட்டில் வாழ்ந்தார்கள் என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருந்ததை முதலில் வாசித்தேன்.

அன்னா பிராய்ட்
அன்னா பிராய்ட்

அன்னா பிராய்ட்

பிராய்டின் கடைசி குழந்தை, அன்னா பிராய்ட் (1895-1982). அன்னாவிடம், “உன் வயதும் உளப்பகுப்பாய்வு சார் கோட்பாட்டின் வயதும் ஒன்று. எனக்கு குறைவான தொல்லைகள் கொடுத்தவள் நீதான்” என்று சொல்லியிருக்கிறார் பிராய்ட். வியன்னாவில் ஆசிரியை பயிற்சி முடித்த அன்னா, தந்தையின் ஆய்வு ஏற்படுத்திய உந்துதலால் குழந்தைகளை மையப்படுத்திய உளப்பகுப்பாய்வு சார் கோட்பாட்டாளர் ஆனார். லண்டனுக்கு வந்தபோதே, நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.

பிராய்ட் இறந்த பிறகு, தந்தையின் எழுத்துக்களைப் பாதுகாப்பது, உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்களைச் சந்திப்பது என பரபரப்பாக வாழ்ந்தார். இரண்டாம் உலகப் போரில் மோசமாக பாதிக்கபட்ட குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் நடத்தினார். தன் வாழ்வின் கடைசிவரை இங்குதான் வாழ்ந்தார். இவ்வீடு அருங்காட்சியகமாக வேண்டும் என்பது அன்னாவின் விருப்பம். அவரது விருப்பப்படி 1986-ல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

அன்னா மற்றும் டோரத்தி
அன்னா மற்றும் டோரத்தி

டோரத்தி பர்லிங்ஹாம்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் டோரத்தி பர்லிங்ஹாம் (Dorothy Burlingham 1891-1979). 1925-ல், தன்னுடைய 4 குழந்தைகளுடன் வியன்னா சென்றார். பிராய்ட் வாழ்ந்த வீட்டின் மேல் தளத்தில் தங்கினார். இருவரின் குடும்பமும் நெருங்கிய நண்பர்களானார்கள். குழந்தைகள், உளப்பகுப்பாய்வு சார் கோட்பாட்டில் டோரத்தி தன்னை ஈடுபடுத்தினார். டோரத்தியை பிராய்டும், டோரத்தியின் குழந்தைகளை பிராய்டின் மகள் அன்னாவும் தங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினர். லண்டனுக்கு வந்த, டோரத்தி இந்த வீட்டில் தங்கி, அன்னாவுடன் சேர்ந்து பணியாற்றினார்.

பவுலா

பிராய்ட் வீட்டிலிருந்த பணிப்பெண் பவுலா (Paula Fichtl 1902 -1989). வியன்னாவில் பொருட்களை மூட்டை கட்டியதும், லண்டனில் அதை பிரித்து, வியன்னாவில் இருந்ததுபோலவே ஒழுங்கு செய்தவரும் இவர்தான். பவுலா, யூதராக இல்லாதிருந்தும் அன்பினால் உடனிருந்தார். பிராய்ட் குடும்பத்தின் பொருட்டு நிறையவே துன்புற்றார். பிராய்ட் இறந்த பிறகும், அன்னாவுக்குத் துணை நின்றார். அன்னா இறக்கும்வரை இருந்துவிட்டு, 1982-ல் ஆஸ்டிரியா சென்றார். 

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in