சிறகை விரி உலகை அறி -85: புளோரன்ஸ் நைட்டிங்கேல் எனும் போராளி!

சிறகை விரி உலகை அறி -85: புளோரன்ஸ் நைட்டிங்கேல் எனும் போராளி!

அலையோ அருவியோ தடங்களின்றி தாவி வந்து நம்மை நனைப்பதில்லை. காற்றோ கவிதையோ துளைகள் மறுத்து நம் செவிகளை மகிழ்விப்பதில்லை. மழையோ இலையோ காற்றின் மோதலின்றி ஸ்வரம் இசைப்பதில்லை.

படைப்பு அனைத்தையும் இயற்கையான சவால்களும் தடைகளும் இயக்குகின்றன, அழகாக்குகின்றன. எனினும், கலாச்சாரம், கருத்தியல், கதையாடல் எனும் சமூகத் தடைகள் பெண்களை இறுக்குகின்றன. சிலர் மட்டுமே உடைத்துப் பாயும் நதியென ஓடினார்கள், ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். அவருக்கான அருங்காட்சியகம் ஒன்று லண்டனில் உள்ளது. மற்றொன்று இஸ்தான்புல் நகரத்தில் உள்ளது.

ஆனந்த அனுபவம்

வெப்பம் சூழ்ந்த அறையில் கதகதப்பாக தூங்கிய நான் காலையில் அருங்காட்சியம் பார்க்க கிளம்பினேன். காற்றில் கலந்திருந்த பனி வாசனையை குடலெல்லாம் உறிஞ்சியபடி சாலையைக் கடந்தேன். தொடர்வண்டியில் சிறிது தூரம் பயணித்து, தேம்ஸ் கரையோரம் நடந்தேன். காற்றில் பல் துலக்கிய நதி கரைகளில் நுரைகளை ஒதுக்கியிருந்தது. காற்றில் ஊஞ்சலாடும் நதியைப் பார்த்துக்கொண்டே வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை அருகில் சென்றேன். பாலத்தில் சாய்ந்து, மறுகரையில் நின்ற மிகப்பெரிய பொழுதுபோக்கு சக்கரத்தை பின்னணியாகக் கொண்டு நிழற்படம் எடுத்தேன். அச்சக்கரத்துக்கு, ‘லண்டன் கண்’ என்பது பெயர்.

லண்டன் கண்
லண்டன் கண்

இடது புறம் பாலத்தில் நடந்தேன். தூண்களைத் தழுவுவதும் வழுக்கி விழுவதுமாக விளையாடிக் கொண்டிருந்த நதியில் மனம் வழுக்கினேன். சூரியன் சுடாத காலையில் நீர்ச் சுழலில் மனம் சுழன்றது. எனக்கான உலகில் நான் மட்டுமாக கழுத்துச் சதை பின்னால் மடிய வானை ரசித்தேன். இமை மூடி பலமுறை குளிர்காற்றால் குடல் நனைத்தேன்.

கடவுளுக்காக காலையில்!

பாலம் கடந்ததும், அந்நேரத்தில் சாலையோரம் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தவர்களிடம் சென்றேன். முகவரி கேட்டேன். முகவரி சொல்லிவிட்டு எனக்கொரு பத்திரிகை கொடுத்தார்கள். ‘இயேசு வழிகாட்டுகிறார்’ போன்ற பத்திரிகை அது. கிறிஸ்தவ மதத்தில் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உள்ளன. அவைகளில் கத்தோலிக்கம், லூத்தரன், ஆங்கிலிக்கன், சி.எஸ்.ஐ. போன்றவைகள் நிறுவனமயமாக்கப்பட்ட திருச்சபைகள். இதுபோக, ஊர் அளவிலும், மாவட்ட, மாநில அளவிலுமான சிறுகுறு சபைகளும், ஜெபக்கூட்ட குழுக்களும் உலகம் முழுவதும் இருக்கின்றன. சில சபையினர், சாலையோரம் நின்று மதம் தொடர்பான பத்திரிகைகள் வழங்குவதை ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் பார்த்திருக்கிறேன்.

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!

பத்திரிகையை வாங்கிக்கொண்டு அவர்கள் காட்டிய வழியில் நடந்தேன். நதியின் அக்கரையில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, இக்கரையில் அருங்காட்சியகம். யாரையும் எளிதில் ஈர்க்கும் ஆடம்பரமின்றி எளிமையாக அமைந்திருக்கிறது அருங்காட்சியக முகப்பு. நுழைவுச்சீட்டு வாங்கினேன். கற்பனை செய்யுங்கள்! “சுவரில் செயற்கை புல்வெளி, அதன் நடுவே மஞ்சள் நிற பலகை, அதில் கருப்பு நிற எழுத்துகள்”. விளக்கின் வெளிச்சத்தில் மஞ்சள் நிற பலகைகள் கண்களை உறுத்தாமல் நைட்டிங்கேலின் வரலாறு ஊட்டியன. கை விளக்கு ஏந்திய காரிகை என சிறு வயதில் நான் படித்த ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்களை நேரடியாக வாசித்தேன். அவர் தொடர்பான பொருட்களைப் பார்த்து அறிந்தேன்.

யாரிவரோ யாரோ?

முதல் தகவல் பலகையில், “விளக்கு ஏந்தியுள்ள இந்த பெண் யார்?” எனும் கேள்வியை தலைப்பாக வைத்து, “கிரீமியன் போர் நடந்தபோது, மருந்துகள் இல்லாமல் துன்புற்ற ஆயிரக்கணக்கான பிரிட்டன் வீரர்களைப் பராமரித்தவர். செவிலியர்களை வழிநடத்தியவர். மருத்துவ சுகாதாரத்தில் புதுமை புகுத்தியவர். வெற்றிகரமாக மருத்துவ முகாம்கள் நடத்தியவர். பேரரசி விக்டோரியாவின் காலத்தில், அரசிக்கு அடுத்த இடத்தில், பெரும் மதிப்புக்குரிய இடத்தில் இருந்தவர். இவை, அவரின் சாதனைகளில் சில, அவ்வளவுதான்” என்று எழுதியிருந்தார்கள்.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்

அதன் அருகில், “பல்வேறு திறமைகள் பெற்றிருந்த - குறைகளும் - பெண்ணை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். 1820-இல் பிறந்து 1910-இல் இறந்த நைட்டிங்கேல், மிகுந்த சமயப் பற்றாளர், சமூக வழக்கங்களைத் தகர்த்தவர், அனைவருக்கும் மருத்துவ சுகாதாரம் கிடைக்க வேண்டும் என்கிற கொள்கை உறுதியினால் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியவர். தாராளமும் குணமும், வேடிக்கையும், பிடிவாதமும் மிகுந்தவர். 90 வயது வாழ்ந்து, உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்” என்றிருந்தது.

அருங்காட்சியகத்தின் உள்ளே
அருங்காட்சியகத்தின் உள்ளே

பெண்கள் படித்தால் பாவமா?

புளோரன்சும் அவரது அக்காவும் படிக்க பள்ளிக்கூடம் செல்லவில்லை. ஓரளவு வசதி இருந்ததால் வீட்டுக்கே வந்து ஆசிரியை கற்பித்தார். படிப்பில் மிகுந்த ஆர்வம் மிக்க இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் மொழிகளில் தேர்ந்தார்கள். கடின உழைப்பும் சுறுசுறுப்பும் மிக்க சகோதரிகள், தினமும் நடை பயிற்சி மேற்கொண்டார்கள், அருகில் உள்ள எளியவர்களைச் சந்திக்கச் சென்றார்கள், விவிலியம் வாசித்தார்கள், பியானோ இசைத்தார்கள், பாடினார்கள், வரைந்தார்கள்.

பேரரசி விக்டோரியா ஆட்சி செய்த காலத்தில் ஓர் இளம் பெண்ணின் கடமை, நல்ல மகளாகவும், பிறகு மனைவியாகவும் கீழ்படிந்திருப்பது மட்டுமே. பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது, வழக்கு தொடுக்கும் உரிமையும், திருமணம் ஆகியிருந்தால் சொத்துரிமையும் கிடையாது. பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்னும் கருத்தியல் ஊறிப்போயிருந்தது. ஆனாலும், புளோரன்சுக்கு 11 வயதானபோது கணிதம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார் தந்தை. வாழ்நாள் முழுவதும் புள்ளிவிவரங்களைப் பராமரிக்கும் பேரார்வம் இப்படித்தான் புளோரன்சுக்கு வந்தது.

அக்காவுடன் புளோரன்ஸ்
அக்காவுடன் புளோரன்ஸ்

மனித சேவையில் கடவுள்

கடவுள் பக்தி மிகுந்த புளோரன்ஸ், பணி செய்ய கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்தார். என்ன வகையான அழைத்தல் என்பதை உறுதி செய்ய இயலாது தடுமாறினார். அதே வேளையில், கிறிஸ்தவ விசுவாசத்தை தன் வாழ்நாள் முழுவதும் உந்து சக்தியாக வைத்திருந்தார். “வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் வழியாக கடவுளின் சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்” என்று நம்பினார். புளூ காய்ச்சல் வந்த தம் குடும்பத்தினரைப் பராமரித்தபோது, செவிலியராக பணியாற்ற கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்தார்.

இதைக் கேட்டதும் முதலில் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அன்றாட வாழ்வுக்கு போராடும் ஏழைகளும் எளியவர்களும் மட்டுமே செய்ய வேண்டிய வேலையை, அழகும், அறிவும், செல்வாக்கும் மிகுந்த தன் மகள் தேர்ந்தெடுப்பதை குடும்பத்தினர் விரும்பவில்லை. மேலும், ‘செவிலியர்கள் குடிகாரிகள்’ என்னும் புரிதல் அக்காலகட்டத்தில் நிலவியது. மருத்துவமனைகளில் அழுக்கும் ஆபத்தும் மிகுந்திருந்தது.

புளோரன்ஸின் திருமணம்

புளோரன்சின் திருமணத்துக்கு பெற்றோர் ஏற்பாடு செய்தார்கள். திருமண வரன்கள் அனைத்தையும் புளோரன்ஸ் நிராகரித்தார். “திருமணம் என்பது, அதுவரை தன் தந்தையை சார்ந்திருந்த ஒருவர், அடுத்து கணவரை சார்ந்திருப்பதாகும். ஒரு குகையில் இருந்து மற்றொரு குகைக்கு மாறும் பண்டமாற்று முறையாகும்” என்றார். “தங்கள் அறிவை சிறந்த முறையில் பயன்படுத்த நடுத்தர வர்க்க பெண்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையே” என வருந்தினார். எழுதுவது, வரைவது மட்டுமே முழுநேர வேலையானது. வீட்டிலேயே முடங்கிக்கிடந்து வாழ்நாள் கழிந்தது.

செவிலியராக தன்னை அனுமதிக்குமாறு அடம்பிடித்தார். திருமணத்துக்கும் சம்மதிக்காமல், தங்கள் எதிர்ப்பை மீறி செவிலியராக விரும்பும் மகளின் பிடிவாதத்தை நினைத்து பெற்றோர் வருந்தினர்.  சில மாதங்கள் சாலிஸ்பரி மருத்துவமனைக்கு பயிற்சிக்குச் செல்வதற்கும் தடை விதித்தனர். போராட்டத்துக்கு மத்தியில், வீட்டில் இருந்தபடியே யாருக்கும் தெரியாமல் செவிலிய அறிவை வளர்க்கத் தொடங்கினார்.

ரிச்சர்ட் மாங்டன்
ரிச்சர்ட் மாங்டன்

தொடர் வற்புறுத்தலின் பேரில், அரசியல்வாதியும், கவிஞருமான ரிச்சர்ட் மாங்டன் என்பவரை திருமணம் செய்ய புளோரன்ஸ் சம்மதித்தார். 1842-இல் இருவரும் முதல் முறையாக சந்தித்தார்கள். ஆனாலும், ஏனோ கடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுத்துவிட்டார் புளோரன்ஸ். இந்த தகவலுடன், “அதற்காக, வாழ்நாள் முழுவதும் புளோரன்ஸ் தனியாகவே வாழ்ந்தார் என்பதற்கான சான்று ஏதும் இல்லை” என்கிற குறிப்பையும் வாசித்தேன். மாங்டனின் அழகான ஓவியத்தை அருங்காட்சியகத்தில் பார்த்தேன்.

புளோரன்ஸ் பயன்படுத்திய பொருட்கள்_
புளோரன்ஸ் பயன்படுத்திய பொருட்கள்_

புளோரன்ஸ் உலகப் பயணி

புளோரன்ஸ், இளம் வயதிலேயே பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். அருங்காட்சியகங்களையும், இசை அரங்கங்களையும் பார்த்தார். 1848-இல் பிரேஸ்பிரிட்ஜஸ் உள்ளிட்ட தம் குடும்ப நண்பர்களுடன் இத்தாலி சென்றபோது, அரசியலில் ஈடுபாடு மிக்க சிட்னி ஹெர்பர்ட் மற்றும் அவரது மனைவி எலிசபெத்தைச் சந்தித்தார். கத்தோலிக்க அருட்சகோதரிகள் நடத்திய மருத்துவமனைகள் பலவற்றுக்கும் எலிசபெத்துடன் சென்று பார்வையிட்டார். அங்குள்ள நடைமுறைகளை அறிந்தார். இத்தாலியில் இருந்து புளோரன்ஸ் கொண்டுவந்த பாம்பு தோல் மற்றும் பாறை மாதிரிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன.

புளோரன்ஸ் பயன்படுத்திய பொருட்கள்
புளோரன்ஸ் பயன்படுத்திய பொருட்கள்

ஓர் ஆண்டுக்குப் பிறகு, பிரேஸ்பிரிட்ஜஸ் உடன் எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் சென்றார். பண்டைய நகரங்களையும், பல்வேறு மருத்துவமனைகளையும் தேடிப் பார்த்தார். நைல் நதியோரம் பயணித்த காலங்களில் குடும்பத்துக்கு புளோரன்ஸ் எழுதிய கடிதங்கள் மற்றும் பார்த்த இடங்களையும் அதன் சிறப்புகளையும், எவ்வளவு கிலோமீட்டர் பயணித்தார் என்பதையும் எழுதி வைத்த குறிப்பேடுகளை அருங்காட்சியகத்தில் பார்த்தேன்.

கிரேக்கத்தில் அவர் சேகரித்த விதைகள் மற்றும் செடிகள் உள்ள பெட்டியும், அவைகளை எங்கே எப்போது சேகரித்தார் என்கிற குறிப்பும் இருக்கிறது. ஓவிய ஆர்வலரான பிரேஸ்பிரிட்ஜஸ், 1839, மே மாதம் வரைந்த ஏதென்னா ஓவியம், வில்லியம் ஒயிட் வரைந்த, தன் அக்காவுடன் புளோரன்ஸ் இருக்கும் ஓவியம் இங்கே இருக்கின்றன.

நீண்ட பயணம், புளோரன்சின் மனதை மாற்றும், செவிலியப் பணியை கை விடுவாள், சமூகம் விரும்புவதுபோலவே வாழ்வாள் என்று பெற்றோர் நம்பினர். ஆனால், செவிலியராகும் ஆர்வத்தை பயணங்கள் அவர் ஆழ்மனதில் பதியமிட்டன.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in