சிறகை விரி உலகை அறி -102; அறிஞர்களும் கவிஞர்களும் உறங்கும் ஹைகேட் கல்லறை!

ஹைகேட் கல்லறை, மேற்கு நுழைவாயில்
ஹைகேட் கல்லறை, மேற்கு நுழைவாயில்

கல்லறைகளைக் கடந்து செல்லும்போதெல்லாம், நெஞ்சில் சிலுவை அடையாளம் வரையும் பழக்கம் சிறு வயதில் தொடங்கியது.

சாதித்த ஒருவர் 39 வயதுக்குள் இறந்ததை கட்டுரைகளில் வாசிக்க நேர்ந்தால், அடிக்கோடிட்டு, ‘இந்த வயதுக்குள் எப்படி இவ்வளவுதூரம் சாதிக்க முடிந்தது” எனும் வியப்பு கல்லூரி காலத்தில் எழுந்தது.

இப்போதெல்லாம், கல்லறைகளைப் பார்க்கும்போது, பிறப்பு – இறப்பு இரண்டையும் கண் தேடுகிறது. வயதை மனது கணக்கிடுகிறது. குறைந்த வயது மரணம் என்றால், ‘அடக் கொடுமையே’ என தோன்றுகிறது.

வாழ்ந்தவர்களைப் பற்றியும் அவர்களின் கல்லறைகளைப் பற்றியும் வேறொரு பரிணாமத்தைக் கொடுத்தது, ஹைகேட் கல்லறை (Highgate Cemetery).

ஹைகேட் கல்லறை கிழக்கு வரைபடம்
ஹைகேட் கல்லறை கிழக்கு வரைபடம்

இறந்தவர்கள் குடியிருப்பு

தொடர்வண்டியில் பயணித்து ஹைகேட் நிலையத்தில் இறங்கி, மேடான சாலையில் ஏறினேன். குறிப்பிட்ட தூரத்தில் மதிய உணவு சாப்பிட்டேன். கோவில், பள்ளிக்கூடம், மற்றும் கடைகளைக் கடந்து இடதுபுறம் திரும்பி வாட்டர்லோ பூங்காவுக்குள் நுழைந்தேன். மரங்களுக்கு மத்தியில் 5 நிமிடங்கள் நடந்து, பூங்காவைக் கடந்து, ஹைகேட் கல்லறை முன்பாக நின்றேன்.

மொத்தம் 36 ஏக்கர். சாலையை மையமாக வைத்து, கிழக்கு கல்லறை மற்றும் மேற்கு கல்லறை என பிரித்திருக்கிறார்கள். கிழக்கு கல்லறையை கட்டணமின்றி பார்க்கலாம். மேற்கு கல்லறையை வழிகாட்டி இன்றி பார்க்க முடியாது. பார்ப்பது பாதுகாப்பானதும் அல்ல.

கல்லறை குறித்த புத்தகத்துக்கும், வழிகாட்டிக்கும் முன்பதிவு செய்திருந்தேன். சாலையின் கிழக்கே உள்ள அலுவலகத்தில் புத்தகம் வாங்கினேன். நுழைவுச்சீட்டு வைத்திருந்தவர்களை சாலையைக் கடந்து மேற்கு கல்றைக்கு அழைத்துச் சென்றார் வழிகாட்டி.

எல்லோருக்குமான கல்லறை

கட்டிடத்தின் நடுவே நடந்து சென்றோம். “இக்கட்டிடத்தின் இடதுபுறம் ஆங்கிலிக்கன் மற்றும் வலதுபுறம் புராடெஸ்டான்ட் கோவில்கள் இருந்தன. தற்போது, ஆங்கிலிக்கன் கோயில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. புராடெஸ்டான்ட் கோவில், 1989-இல் மேற்கு கல்லறை அலுவலகமாக மாற்றப்பட்டது” என்றார் வழிகாட்டி.

உள்ளே சென்று சதுக்கத்தில் நின்றோம். அங்கே, மேலே மூடப்பட்ட, சம இடைவெளி கொண்ட தூண் வரிசையுடன், நடுவில் நடைபாதை உள்ள கட்டிடம் (Colonnade) இருக்கிறது. வரலாறு சொல்லத் தொடங்கினார் வழிகாட்டி. 

“இங்கிலாந்தில், 1800கள் வரை பெரும்பாலான அடக்க நிகழ்வுகள் கோவில் கல்லறைகளில் நடந்தன. ஆனால், அதிகமான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாலும், சரியான பராமரிப்பு இல்லை என்பதாலும், மாற்று வழியை மக்கள் யோசிக்கத் தொடங்கினர். இங்கிலாந்து திருச்சபையை பின்பற்றாதவர்களும் இறந்தவர்களை தங்கள் நம்பிக்கையின்படி அடக்கம் செய்ய வழி தேடினர். பாரிசில் உள்ள, பெரே லெசேய்ஸ் கல்லறை (Pere-Lachaise in Paris), இங்கிலாந்து மக்களுக்கு புதிய வழியைக் காட்டியது.

மத நம்பிக்கை உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் அடக்கம் செய்ய 1840களுக்குள் 8 கல்லறைகள் லண்டனைச் சுற்றி உருவாகின. அதில் மூன்றாவதாக, 17 ஏக்கரில், லண்டன் கல்லறை நிறுவனம் (London Cemetery Company) உருவாக்கியதுதான் ஹைகேட் கல்லறை. அழகும் கலை வேலைப்பாடும் மிக்க கல்லறைகள் இங்கே உருவாகின. மத்திய லண்டனுக்குள் இறந்தவர்களை அடக்கம் செய்ய 1850களில் தடை வந்தபோது இந்நிறுவனம் மேலும் வளர்ந்தது. கூடுதலாக, கிழக்கே 19 ஏக்கர் வாங்கினார்கள். அதிக இடம் தேவைப்படுவதால், கலைநுட்பமிக்க கட்டிடங்களுக்கு அங்கே அனுமதி மறுத்தார்கள். ஆயினும், 20-ஆம் நூற்றாண்டில், கல்லறையில் இடமில்லாமல் போனதாலும், புதைத்த பிறகு, யாரும் அந்தப் பக்கம் செல்லாததாலும் வருமானம் ஏதுமில்லை. பராமரிக்க இயலவில்லை. அழகான நினைவிடங்கள் சிதைந்தன.

சில ஆண்டுகள் கழித்து நண்பர்கள் ஒன்றிணைந்தார்கள். “ஹைகேட் கல்லறை நண்பர்கள், அறக்கட்டளை உருவாக்கினார்கள். சுற்றுலா பயணிகளின் வருகையை வைத்து, கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கிறார்கள்” என்றார்.

கல்லறைச் சின்னங்கள்

சதுக்கத்திலிருந்து நடக்கத் தொடங்கினோம். மழை பெய்திருந்ததால் மிகக் கவனமாக நடந்தோம். மதியம் 2 மணி என்றாலும், பெரிய பெரிய மரங்கள், செடிகள், புதர்களால் வெளிச்சம் குறைவாக தெரிந்தது. சற்று அச்சமாகவும் இருந்தது.

 “கல்லறை மீது உள்ள உருவங்களுக்கு பொருள் உண்டு. சிலவற்றைச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்த வழிகாட்டி, ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி விளக்கினார்.

“புறா: அமைதி மற்றும் கடவுளின் தூதர்.

திராட்சைக்கொடி: இயேசுவின் இரத்தம்.

பாதி முறிந்த தூண்: இளம் வயதில் இறந்தவர்கள்.

லில்லி மலர்: கற்பு, தூய்மை.

சிலுவையில் நங்கூரம்: கடல் சார் தொழில் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளம்.

விவிலியம்: பாதிரியார், பக்தியான மனிதர், மற்றும் விவிலியம் சொல்லும் நற்பண்புகளுடன் வாழ்ந்தவர்.

நாழிகை அளக்கும் கருவி (Hourglass): இறப்பு மற்றும் கடந்து செல்லும் காலம்.

எகிப்திய கல்லறை குடியிருப்பு
எகிப்திய கல்லறை குடியிருப்பு

எகிப்திய குடியிருப்பு

கலைநயத்தோடு இருந்த வளைவுக்கு முன்பாகச் சென்றோம். “இதன் பெயர், எகிப்திய குடியிருப்பு. நடுவில் செல்லும் பாதையின் நீளம் 100 அடி. தொடக்கத்தில் மேலே கூரை இருந்தது. பாதையின் இரண்டு பக்கமும், 8+8 அறைகள் உள்ளன. கதவுகள் இரும்பால் ஆனவை. அதில், தீபம் தலைகீழாக பொறிக்கப்பட்டுள்ளது” என்றார் வழிகாட்டி. கூரை சிதைந்துவிட்டதால், முழுவதும் கொடிகளாலும், கிளைகளாலும் மூடப்பட்டிருந்தது. “ஒவ்வோர் அறையிலும் 12 சவப்பெட்டிகளை வைக்கலாம். கலை நுட்பம் இருந்தாலும், இந்தக் குடியிருப்பு பலரையும் ஈர்க்கவிலை” என்றார். உண்மைதான், இப்போதே குகைக்குள் நடப்பதுபோல இருக்கிறது.

லெபனான் வளைவு
லெபனான் வளைவு

லெபனான் வட்டம்

100 ஆண்டுகள் பழமையான செடார் மரத்தை மையமாக வைத்து, பெரிய வட்டாக குழி வெட்டி அதில் 20 கல்லறை அறைகளைக் கட்டியுள்ளார்கள். அதற்கு, லெபனான் வட்டம் (Circle of Lebanon) என்று பெயர். பலரும் இந்த இடத்தை விரும்பி வாங்கியதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிச்சுற்றில் கூடுதலாக 16 அறைகள் கட்டினார்கள். ஒவ்வொன்றிலும் 15 பேர்களை அடக்கம் செய்யலாம். மரம் இப்போது இல்லை. வட்டத்தைச் சுற்றி நடந்து அறைகளைப் பார்த்தேன்.. பெயர்களை வாசித்தேன்.

லெபனான் வளைவு மேற்பகுதி
லெபனான் வளைவு மேற்பகுதி

பியர் நினைவிடம்

கல்லறையின் உயரமான இடமொன்றில், லெபனான் வட்டத்தைப் பார்த்தபடி இருக்கிறது, ஜுலியஸ் பியர் கட்டிய, நினைவிடம் (The Beer Mausoleum). ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் பிறந்த பியர், லண்டன் வந்து செல்வந்தரானார்.  ஹைகேட்டில் இடம் வாங்கி, 5000 பவுண்ட் செலவில் (இன்று 30 லட்சம் பவுண்ட்), பழங்காலத்தைய 7 உலக அதிசயங்களுள் ஒன்றான ஹலிகார்னாசஸ் (Halicarnassus) வடிவத்தில் நினைவிடம் எழுப்பினார். ஸ்கார்லட் காய்ச்சலுக்கு 8 வயதில் இறந்த மகள் அடா சோபியாவை, வானதூதர் இரக்கத்தோடு அரவணைத்து விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லும் சிலையை நடுவில் நிறுவினார். வெண்கல கதவின் ஓட்டை வழியாகப் பார்த்தேன். சாந்தமான அடாவின் முகத்தையும், தங்க நிற கூரையையும் ரசித்தேன்.

பியர் நினைவிடம்
பியர் நினைவிடம்

கல்லறை பொந்துகள்

கோதிக் கட்டிடக் கலையுடன் அமைந்துள்ள மாடி கல்லறைக்குச் (Terrace Catacombs) சென்றோம். தரைமுதல் கூரைவரை 825 பொந்துகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் அடக்கம். பொந்துகளை மூடிய பெயர் பலகைகள் பல உடைந்து கிடந்தன. எலும்புகளையும், மண்டை ஓடுகளையும் பார்த்தேன். பழங்கால முடை நாற்றம், குப்பை, இருள். எப்போது வெளியேறுவோம் என்று இருந்தது.

(பிலிப்பைன்ஸில், ரமோன் மகசேசே அடக்கம் செய்யப்பட்டுள்ள, மணிலா வடக்கு கல்லறை 130 ஏக்கர் பரப்பளவு உள்ளது. லண்டன் பயணம் முடித்து, 2 ஆண்டுகள் கழித்து வடக்கு கல்லறைக்குச் சென்றபோது, மாடி கல்லறையில் ஏற்பட்ட கலக்கம் நினைவுக்கு வந்தது, மனது படபடத்தது. உடனே வெளியேறினேன்).

மைக்கேல் ஃபாரடே கல்லறை
மைக்கேல் ஃபாரடே கல்லறை

வெளிச்சம் கொடுத்தவரின் கல்லறை

தொடர்ந்து நடந்தபோது, ‘மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும், மைக்கேல் ஃபாரடேவின் கல்லறையைப் பார்த்தேன் கேட்பாரற்று கிடந்தது. “ஃபாரடே தான் சார்ந்திருந்த திருச்சபையின் (Sandemanian Church) முறைப்படி அடக்கம் செய்யப்பட விரும்பினார். எனவே, ஜெபம், வழிபாடு, பாடல் ஏதுமின்றி எளிமையாக அடக்கம் செய்யப்பட்டார்” என்று குறிப்பிட்ட வழிகாட்டியுடன், மேற்கு கல்லறையில் இருந்து வெளியேறினேன். சுற்றுலா முடிந்தது.

எலியட் கல்லறை
எலியட் கல்லறை

கிழக்கு கல்லறை

கிழக்கு கல்லறையை இலவசமாக பார்க்கலாம் என்றாலும், மேடும் பள்ளமும் நிறைந்த 19 ஏக்கரில் தொலைந்து போய்விடக் கூடாதென வரைபடம் கொடுத்தார்கள். மழையினால் பாதையும் வழுக்கியது. வரைபடத்தைப் பின்பற்றி, குறுக்கும் மறுக்குமாக நடந்து முக்கியமானவர்களின் கல்லறைகளைத் தேடினேன்.

ஜியோமெட்ரிக் அல்ஜிப்ராவை அறிமுகப்படுத்திய வில்லியம் கிளிஃபோர்டு;  பிரிட்டிஷ் பப் தியேட்டரை உருவாக்கிய டேனியல் ஃபிராங் கிராஃபோர்டு; கடலுக்கடியில் தகவல் அனுப்பும் தந்தி முறையின் முன்னோடியான வில்லியம் ஸ்மித் உள்ளிட்டோரின் கல்லறைகளைப் பார்த்தேன். கண்டுகொள்வார் யாருமின்றி இருந்தன. நாவலாசிரியர், ஜார்ஜ் எலியட் கல்லறையில் பூக்களைப் பார்த்து மகிழ்ந்தேன்.

கார்ல் மார்க்ஸ் கல்லறை
கார்ல் மார்க்ஸ் கல்லறை

கார்ல் மார்க்ஸ்

ஹைகேட் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாமனிதர்களுள் முக்கியமானவர், கார்ல் மார்க்ஸ். மனைவியின் கல்லறையில், மார்ச் 17, 1883-இல் கார்ல் மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார். சிறிய பாதையின் ஓரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த இருவரின் உடல்களும் 1954-இல், முக்கியமான பாதையில் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து, பீடத்தின் மீது மார்க்ஸின் மார்பளவு வெண்கல சிலை நிறுவப்பட்டது.

கல்லறைச் சுவரில், “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” எனும் கம்யூனிச அறைகூவல் பொறிக்கப்பட்டுள்ளது. நடுவில் உள்ள கல்லில், மார்க்ஸின் பெயருடன், அவரது மனைவி ஜென்னி, மகள் எலினோர், பேரன் ஹாரி, மற்றும் நீண்ட நாள் குடும்ப பணியாளரும் நண்பருமான ஹெலேனா ஆகியோரின் பெயர்கள் இருக்கின்றன.

அதற்குக் கீழே, 11-வது ஃபியூர்பாக்கின் ஆய்வறிக்கையில் உள்ள, “தத்துவவாதிகள் உலகை பல்வேறு வழிகளில் மட்டுமே விளக்கியுள்ளனர். அதை மாற்றுவதே முக்கிய நிகழ்வு” என்னும் வாக்கியம் உள்ளது.

வர்க்க முரண்பாடுகளுக்கு எதிராக களமாடிய கார்ல் மார்க்ஸின் கல்லறை, அவரின் சித்தாந்த எதிர்ப்பாளரும் தாராளவாத அரசியல் கோட்பாட்டாளருமான ஹெர்பர்ட் ஸ்பென்சர் கல்லறைக்கு எதிரில் அமைந்திருப்பதை ரசித்தேன்.

ஹெர்பர்ட் ஸ்பென்சர் கல்லறை
ஹெர்பர்ட் ஸ்பென்சர் கல்லறை

வாழ்வின் மறுபக்கத்தைச் சொல்லும் கல்லறைகளைப் பார்த்துவிட்டு, விடுதிக்குச் சென்றேன். கணக்கை நேர் செய்தேன். யார் வந்தாலும், அறிவையும், ஆர்வத்தையும் திகட்டுமளவுக்குத் தந்து அனுப்பும் லண்டனுக்கு விடை கொடுத்தேன். விமானத்தில் ஏறினேன். என் அருகில் யாருமில்லை. கால் நீட்டி படுத்துக்கொண்டு,  உற்சாகமாக ஊர் திரும்பினேன்.

(நிறைவு)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in