சிறகை விரி உலகை அறி - 101; 'இத்தனை சித்திரவதைகளா?' கிளிங் சிறையின் கதை!

கிளிங் சிறையில் ஒரு ’க்ளிக்’
கிளிங் சிறையில் ஒரு ’க்ளிக்’

உயர்ந்த சுவரை, அதன் மேல் குத்தி நிற்கும் முள் வேலியை, நுழைவாயிலில் மத்திய சிறை எனும் பெயர் பலகையை சிலமுறை கடந்து சென்றிருக்கிறேன். பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.

“அவனப் பிடிச்சு சிறையில போடுங்க சார்”;

“குற்றம் இழைத்தவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” – எனும் தடித்த குரல்களை அவ்வப்போது கேட்டிருக்கிறேன்.

குற்றம் செய்தவர்கள் அல்லது குற்றம் சுமந்தப்பட்டவர்களை மனிதர்களாகவே நினையாத மனநிலை உருவாகியிருப்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

ஆனால், சிறையின் அறைகள் எப்படி இருக்கின்றன? பொழுதுபோக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உரிமைகளும் போதுமான அளவு கிடைக்கின்றனவா? மனித மாண்பு பாதுகாக்கப்படுகிறதா? குற்றம் செய்தவர்களை சீர்திருத்தும் வழிமுறைகள் சீர்திருத்த சிறைகளில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது? போன்ற அக்கறையான உரையாடல்களை நோக்கி வழிநடத்துகிறது, கிளிங் சிறைச்சாலை.

சிறை நுழைவாயில்
சிறை நுழைவாயில்

கத்தோலிக்க ஆயர் கட்டிய சிறைச்சாலை

இங்கிலாந்து பயணத்தின் கடைசிநாள். அதிகாலை எழுந்தேன். மறுபடியும் டவர் பாலத்தைக் கடந்து, தென்கரையில் உள்ள கிளிங் சிறைக்கு முன்பாக நின்றேன் (The Clink Prison).

வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் லண்டன் நகரங்கள் உருவாகும் முன்பே சவுத்வாக் குடியிருப்புப் பகுதி தென்கரையில் உருவானது. ரோமானியர்கள் இங்கு முகாம் அமைத்து கி.பி.43-இல் தேம்ஸ் நதியில் முதல் பாலம் கட்டினார்கள். அப்போது, வீரர்கள், பொறியாளர்கள், கட்டிட பணியாளர்கள் என எண்ணற்றோர்  இங்கே தங்கியிருந்தார்கள். 4-ஆம் நூற்றாண்டில் ரோமானியர் வெளியேறிய பிறகு, இப்பகுதியின் முக்கியத்துவம் குறைந்தது. காலப்போக்கில், திருடர்கள், நம்பகத்தன்மையற்றோர், இருப்பிடம் இல்லாதோர், பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்ந்த குற்றக் குடியிருப்பாக மாறியது.

மத்தியகாலத்தில், கத்தோலிக்கத் திருச்சபையும், அரசர்களின் அரசாட்சியும் இரண்டற கலந்திருந்தன. 21-ஆம் நூற்றாண்டின் பின்னணியில் இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்வது கடினம். 1129-இல், வின்செஸ்டர் (Bishop of Winchester) பகுதியின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட ஹென்றி, 1134-இல், தனது சகோதரரும் அரசருமான ஸ்டீபனுக்கு அடுத்த இடத்தில் அதிகாரம் மிக்கவராகவும் திகழ்ந்தார். இருவருமே அரசர் வில்லியமின் (William the Conqueror) பேரன்களாவர்.

தென்கரையில், பிளாக்பிரையர்ஸ் பாலம் முதல் லண்டன் பாலம் வரை 80 ஏக்கர், ஆயர் ஹென்றியின் கட்டுப்பாட்டில் இருந்தது. லிபர்ட்டி ஆஃப் தி பிஷப் ஆஃப் வின்செஸ்டர் (The Liberty of the Bishop of Winchester) என அழைக்கப்பட்டது. லிபர்ட்டி என்பது, நிர்வாக எல்லையை (Jurisdiction) குறிப்பதாகும். அங்கே, 1144-இல், தனக்கொரு அரண்மனையும் (Winchester Palace), ஆண்களுக்கும் பெண்களுக்கும் மர உத்திரங்களுடன் தனித்தனியாக சிறைச்சாலையும் எழுப்பினார் ஆயர் ஹென்றி. கால மாற்றத்தில் சிறையின் கட்டமைப்பு மாறியது. 1144 முதல் 1780வரை கைதிகள் இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

900 ஆண்டு சிறை

10 மணியானதும், படிகளில் இறங்கி கீழே சென்றேன். வலதுபுறம், “சிறை கண்காணிப்பாளரை அழைக்க மணி அடியுங்கள்” என எழுதியிருந்தது. அடித்தேன். பணியாளர் வந்தார். நுழைவுச்சீட்டு வாங்கினேன். நிலைக்கதவின் மேலே, ’உண்மையான சிறைக்கூடத்துக்குள் செல்கிறீர்கள்’ என எழுதியிருப்பதை வாசித்துவிட்டு, இரும்புக் கதவைத் திறந்தேன்.

900 ஆண்டுகால சிறையை, குழந்தைகளும் பார்த்து அறிய, எலி வரலாறு சொல்வது போன்று அமைத்திருக்கிறார்கள். “வில்லியம் லே எலி என்பது என் பெயர். சிறையை சுத்தம் செய்ய வந்த என்னுடைய உரிமையாளர் வில்லியம் தே ராக்யர்  (William de Rakyer) உடன் நானும் வந்தேன். சிறை கண்காணிப்பாளரின் ரொட்டியை நான் திருடியதால், இங்கேயே அடைத்துவிட்டார்கள். வாருங்கள்! எனக்குத் தெரிந்த பல கதைகளையும் தகவல்களையும் உங்களுக்குச் சொல்கிறேன்” என எழுதியிருப்பதை வாசித்துவிட்டு குழந்தைபோல பின்தொடர்ந்தேன்.

கதை சொல்லும் எலி
கதை சொல்லும் எலி

விசித்திர விசாரணை

குற்றம் சாட்டப்பட்டவரே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வழக்கம் 12-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நிலவியது. அதற்கான விசாரணை முறைகளை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. உதாரணமாக; குற்றம் சாட்டப்பட்டவர், கொதிக்கும் நீருக்குள் கையை விட்டு, பாத்திரத்தின் அடியில் கிடக்கும் பொருளை எடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு கட்டுக்களை அவிழக்கும்போது, காயம் ஆறத் தொடங்கியிருந்தால் அவர் குற்றமற்றவர். இல்லையென்றால், குற்றவாளி.

14-ஆம் நூற்றாண்டில், பாதாள அறைபோல மாறிய கிளிங் சிறையில், திருடர்கள், தெருக்கொள்ளையர்கள், விபச்சார விடுதி நடத்தியவர்கள், கடனாளிகள் என எண்ணற்றோர் அடைக்கப்பட்டார்கள். அறையின் மூலையில் கழிப்பிடம் இருந்தது.

அடைக்கப்பட்டிருந்த கைதிகள்
அடைக்கப்பட்டிருந்த கைதிகள்

வின்செஸ்டர் வாத்து

15-ஆம் நூற்றாண்டில், அங்கிகாரம் பெற்ற 18 விபச்சார விடுதிகள் தென்கரையில் இருந்தன. இதன் வாடகை ஆயருக்கு சொந்தமானது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருந்த விடுதிக்கு, வணிகர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தூதரக அதிகாரிகள் படகில் இரவில் வந்து சென்றனர். தென்கரையின் பெண் பாலியல் தொழிலாளியை, வின்செஸ்டர் வாத்து (The Winchester Geese) என செல்லமாக அழைத்தார்கள். பாலியல் நோய் வந்தவர்களை,  ‘வின்செஸ்டர் வாத்து கடித்தவர்’ என கேலி செய்தனர். வாடிக்கையாளரை ஏமாற்றியது அல்லது, மற்ற பெண்களுடன் சண்டையிட்டது போன்ற காரணங்களால் இப்பெண்கள் சிறையிலடைக்கப்பட்டார்கள். இறந்ததும், கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட இவர்களுக்கு உரிமையில்லை.

கடவுளின் பெயரால் சாகட்டும்!

இது அரசு சிறை இல்லை என்பதால், ஆயர் கொடுத்த குறைந்த பணத்தாலும், எப்போதாவது கிடைக்கும் நன்கொடையாலுமே சிறை பராமரிக்கப்பட்டது. போதிய உணவும், சுகாதாரமும் இல்லை, எலிகள் தொல்லை, நதியின் வெள்ளம் அவ்வப்போது சிறைக்குள் புகுந்தது. இதனால், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சிறை காய்ச்சல் என 15-ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட, உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றும் நச்சுக் காய்ச்சலால் (Typhus) பலர் இறந்தார்கள். 

உணவு வேண்டல்
உணவு வேண்டல்

19-ஆம் நூற்றாண்டின் பாதி வரை, பிரிட்டிஷ் சிறைகளில் உணவுக்கூடங்கள் இல்லை. குடும்பத்தினரும், நண்பர்களும் வந்து கொடுத்தால்தான் உயிர் வாழ முடியும். யாருமற்றவர்கள், கையில் சங்கியிலியுடன் ஜன்னல் வழியாக பிச்சை எடுத்தார்கள். ஏழைகளுக்குக் கொடுத்தால் சொர்க்கம் நிச்சயம் என நினைத்த சிலர், கைதிகளுக்கு எப்போதாவது உணவளித்தார்கள். “சிறைவாசிகள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்களிடம் ஏதும் இல்லையென்றால் அடுத்தவர்களின் இரக்கத்தில் வாழலாம். மற்றவர்கள் ஏதும் கொடுக்கவில்லையென்றால், கடவுளின் பெயரால் அக்கைதிகள் சாகட்டும்” என தலைமை நீதிபதி மான்டேகு (1550) எழுதிய குறிப்பை வாசித்தேன்.

ஊழலோ ஊழல்!

கை விலங்குகளும், சங்கிலிகளும் செய்வதற்கு சிறையில் கொல்லர் இருந்தார். பட்டறைச் சத்தமே, ’கிளிங்’ எனும் பெயரை சிறைக்கு வழங்கியது. சிறைக் கண்காணிப்பாளருக்கு போலவே, கொல்லருக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. எனவே, எடை குறைவாக, நீளமாக, இடைவெளியுடன் விலங்குகளையும் சங்கிலிகளையும் செய்து கொடுத்து, கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சம் வாங்கினார் கொல்லர். கண்காணிப்பாளரோ, கொல்லரிடம் கமிஷன் வாங்கியதுடன், ஒவ்வொரு சலுகைக்கும் கைதிகளின் உறவினர்களிடம் லஞ்சம் வாங்கினார். அப்படி என்ன சலுகை?

கொல்லர்
கொல்லர்

சிறையில் நுழைய, சிறைக்குள் தங்கும் அறை, படுக்கை, படுக்கை விரிப்பு, மெழுகுதிரி, உணவு, தண்ணீர் (சுத்தமாகவெல்லாம் இருக்காது), சாராயம் (இரண்டு மடங்கு விலை), விலங்கு மற்றும் சங்கிலி உள்ளிட்டவைகளைப் பெற மற்றும் விலங்கையும் சங்கிலியையும் கழற்ற, சிறையிலிருந்து வெளியேறும்போது, கணக்கு நேர் செய்கையில்... என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை!

சிறையில் திருப்பலி

·       கத்தோலிக்கரான அரசர் 8-ஆம் ஹென்றி (1509-1547), மனைவி கேத்தரினை விவாகரத்து செய்ய விரும்பினார். திருத்தந்தை அனுமதிக்காததால், கத்தோலிக்க சமயத்தை மறுத்து, ஆங்கிலிக்கன் சமயத்தை தொடங்கினார்.

·       கேத்தரினுக்கு பிறந்த மேரி, அரசியானதும் (1553-1558), ஆங்கிலிக்கன் சமயத்தைப் புறந்தள்ளினார். முன்புபோலவே, கத்தோலிக்க சமயத்தை முன்னிறுத்தினார்.

·       அடுத்ததாக அரசியான முதலாம் எலிசபெத் (1558-1603) ஆங்கிலிக்கன் சமயத்தை முன்னிலைப்படுத்தினார்.

எனவே, கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள், ஆங்கிலிக்கன் ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுமக்கள் அடுத்தடுத்து சித்திரவதை அனுபவித்தார்கள். கொல்லப்பட்டார்கள். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கத்தோலிக்க அருள்தந்தையர்களுள், வில்லியம் வெஸ்டன் (1586-1588) மற்றும் ஜான் ஜெரார்டு (1594-1597) இருவரும் ரகசியமாக சிறையில் திருப்பலி நிறைவேற்றி, பாவமன்னிப்பு அருள்சாதனம் வழங்கியதை வாசித்தபோது அவர்களின் ஆன்மிக துணிச்சலை வியந்தேன்.

தண்டனையுடன் கைதி
தண்டனையுடன் கைதி

சித்திரவதைகளின் வகைகள்

கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டது தத்ரூபமாகவும், படங்களாகவும், காணொளியாகவும் உள்ளன. பார்த்தபோது மனதில் அச்சம் சூழ்ந்தது.

·       நாற்காலி தண்டனை: கைதியை உட்கார வைத்து, கைகள், கால்கள், கழுத்து அனைத்தைம் சங்கிலியால் கட்டுதல். காவலர் அடித்தாலும், பூச்சிகள் கடித்தாலும் சொறியக்கூட இயலாது. மற்றொன்று; கூர்மையான ஏறக்குறைய 500 ஆணிகள் உள்ள நாற்காலியில் உட்கார வைப்பது.

பலகை துவார தண்டனையின் வகை
பலகை துவார தண்டனையின் வகை

·       பலகை துவாரம்: பலகையின் ஓட்டைகள் உண்டு. தலைகளில் மாட்டி, கைகளைச் சொருகி நிற்க வைப்பது (Pillory).

அதிகாலை விண்மீன், சாட்டை
அதிகாலை விண்மீன், சாட்டை

·       அதிகாலை நட்சத்திரம்: கம்பில் கட்டப்பட்டுள்ள சங்கிலியின் முனையில், நட்சத்திர வடிவ உலோகம் தொங்குகிறது. சாட்டையாக பயன்படுத்தினர்.

தலைக்கவச தண்டனை
தலைக்கவச தண்டனை

·       தலையணி: தலைக்கவசம்போல இருக்கும் உலோகத்தை கழுத்துவரை அணிவித்து இறுக்குதல்.

சக்கர நாற்காலியில் தண்டனை
சக்கர நாற்காலியில் தண்டனை

·       சக்கர தண்டனை: சக்கரத்தில் கைதியின் கால்களையும் கைகளையும் பரப்பி கட்டுவர். சக்கரத்தைச் சுற்றிவிட்டு, அடித்து எலும்புகளை நொறுக்குவர்.

·       கொதிநீர் தண்டனை: கொதிக்கும் நீருக்குள் அமிழ்த்தி கொல்லுவது.

கடைசியில், நான் சிறையில் நிற்பதுபோல நிழற்படம் எடுக்கும் இடத்திற்கு வந்தேன். எத்தனை வேண்டுமானாலும் எடுக்கலாம். இலவசம். மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பார்கள். எடுத்தேன். சிறையின் வேதனை என்னில் வெளிப்பட்டிருப்பதை பிறகுதான் கவனித்தேன்.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in