சிறகை விரி உலகை அறி - 87: நைட்டிங்கேலின் துருக்கிய விளக்கு!

புளோரன்ஸ் காலத்து விளக்கு மற்றும் கெண்டி
புளோரன்ஸ் காலத்து விளக்கு மற்றும் கெண்டி

மர நிழலில் தழைக்கும் செடியும், இன்னோர் உயிருக்காக சுரக்கும் மடியும், தேங்கிய கண்ணீரை வடிக்கும் ஆறுதல் மொழியும், இது அன்பு சூழ் உலகம் என்பதை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

புளோரன்ஸ், அன்பின் அடையாளம். அன்பை அறிய அருங்காட்சியகத்துக்குள் குழந்தைகள் வந்தார்கள். இறுகிய பொழுதை இசை மயமாக்கும் மழைபோல, குழந்தைகளின் வருகை பேருவகை தந்தது. அறையின் மத்தியில் அமர்ந்தார்கள். புன்னகையோடு விரிந்த அவர்களின் கன்னங்களில் எதிர்பார்ப்பின் ஆர்வம் தெரிந்தன. என் விழிகளும் ஆர்வத்தில் மிளிர்ந்தன. ஆகா! புளோரன்ஸ் நைட்டிங்கேல் வேடமணிந்து பெண் ஒருவர் வந்தார். கையில் லாந்தர் இருந்தது. குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளினார்கள். இந்த லாந்தர்தான், ‘கை விளக்கு ஏந்திய காரிகை’, ‘வீரர்களின் காவல் தேவதை’ எனும் காலத்தால் அழியாத பெயர்களை புளோரன்சுக்கு கொடுத்தது.

போரில் காயமடைந்த வீரர்களைப் பார்க்கவும், மருத்துவமனையைச் சுற்றி வந்து வீரர்களைப் பராமரிக்கவும் இரவு நேரங்களில் துருக்கிய லாந்தரின் (Turkish lantern or Fanoos) துணையில் நடந்தார் புளோரன்ஸ். ஆனால், துருக்கிய லாந்தருக்குப் பதிலாக, கிரேக்க லாந்தரை (Greek or Genie lamp)  ஓவியர்கள் தவறுதலாக வரைந்துவிட்டார்கள். அதுவே, வரலாற்றில் நிலைத்துவிட்டது.

துருக்கிய விளக்கு
துருக்கிய விளக்கு

நைட்டிங்கேலின் வாழ்க்கையை, ‘புளோரன்ஸ்’ கதைபோல குழந்தைகளுக்குச் சொன்னார். “புளோரன்சின் எண்ணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. வீரர்கள், அவர்களின் குடும்பங்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரம் மிகுந்த எதிர்காலத்துக்காக  சிந்தித்தார்” என்றார்.

சுயமரியாதை காத்தவர்

வீரர்களும் அதிகாரிகளும் செவிலியர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என புளோரன்ஸ் விரும்பினார். தங்களுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே இச்சேவையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்பினார். கீழ்படிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மற்றவர்களிடமிருந்து தாங்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக செவிலியர்கள் சீருடை அணிய வலியுறுத்தினார். இராணுவ கட்டுப்பாடு மிக்க பயிற்சிகளை வழங்கினார். காதல் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல வீரர்களிடம் எந்த வகையிலும் பேச கூடாது, கீழ்படியாமை கூடாது, மது அருந்தக் கூடாது என்றார்.

பாலியல் புகார் எழுந்தால் தங்கள் சேவையை அது முற்றிலும் பாதிக்கும் என்று எண்ணினார். இறக்கும் தருவாயில் உள்ள வீரர்களை புராட்டஸ்டான்ட் சபைக்கு அல்லது கத்தோலிக்க மதத்திற்கு மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று உறுதியாகச் சொன்னார். இதனால், ஐரிஸ் அருள்சகோதரிகளுக்கும் புளோரன்சுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிட்னி ஹெர்பர்ட், கூடுதலாக ஐரிஸ் அருள்சகோதரிகளை அனுப்பியபோது அவர் மீதும் கோபப்பட்டார். அனைத்தையும் சமாளித்தார்.

சிகிச்சை முறைகள்
சிகிச்சை முறைகள்

வீரர்களை நேசித்தவர்

குடும்பங்களைப் பிரிந்த கவலையிலும், போரின் களைப்பிலும் இருந்த வீரர்களுக்காக வாசிப்பறை அமைத்தார். ஆர்வமாக வாசித்தார்கள். வீரர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த அதிகாரிகள் வியந்தார்கள். வீரர்களுக்காக போதையற்ற மதுபானம் ஏற்பாடு செய்தார். குடியிலும் சூதாட்டத்திலும் வீரர்கள் பணத்தை வீணாக்காமல், வீட்டுக்கு அனுப்புவதற்காக வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.

இராணுவத்தில் எந்த பதவியில் இருந்தாலும், அனைவருக்கும் சமமான மருத்துவம் வழங்கினார். அவர்களின் குடும்ப நலனிலும் அக்கறை கொண்டார். இறந்த வீரர்களின் வீடுகளுக்கு ஆறுதல் சொல்லி கடிதம் எழுதினார். கணவரை இழந்தவர்களுக்கு பண உதவி செய்தார். காணாமல்போன மற்றும் நோயுற்றவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினர் விசாரித்தபோது பொறுமையாக பதில் அனுப்பினார். போர்க்களத்தில் நடப்பதை செய்தித்தாள் வழியாகவும், கடிதங்கள் வழியாகவும் அறிந்த வீரர்களின் குடும்பத்தினர் புளோரன்சின் அர்ப்பணிப்பை வியந்தனர். 

தாழ்ச்சி மிகுந்தவர்

தான் மட்டுமே மருத்துவமனையின் தரத்தை உயர்த்தியதாக புளோரன்ஸ் ஒருபோதும் சொன்னதில்லை. இது ஒரு கூட்டுச் செயல்பாடு என்றார். குறிப்பாக, தொற்றுநோய் பரவியதன் காரணம் பலருக்கும் புரியாமல் இருந்தபோது, மருத்துவமனைக்கு வந்த ஸ்காட்லாந்து மருத்துவர் ஜான் சதர்லாந்த்,  குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே கழிவுகள் கலப்பதைக் கண்டார். தம் குழுவினருடன் சேர்ந்து, அடைப்புகளைச் சரிசெய்தார். சுத்தமான தண்ணீர் கிடைக்கத் தொடங்கிய பிறகு, இறப்பு விகிதம் குறைய ஆரம்பித்தது. இதைக் குறித்து, “சதர்லாந்தின் சுகாதாரக் குழு, பிரிட்டன் இராணுவத்தைக் காப்பாற்றியது” என்று எழுதினார் புளோரன்ஸ்.

தொடரும் கனவு

1856, மார்ச் 30-ஆம் தேதி போர் முடிவுற்றது. நோயுற்றும், காயமுற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகம். அதில் செவிலியர்களும் உண்டு. போர் முடிந்த பிறகு அரசி விக்டோரியாவைச் சந்தித்தார் புளோரன்ஸ். போர்க்களத் தவறுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப் பரிந்துரைத்தார். தனது தனிப்பட்ட அறிக்கையையும் சமர்ப்பித்தார். மற்ற இடங்களில் இருந்த பிரிட்டன் இராணுவ மருத்துவமனைகளுடன் ஒப்பிடுகையில், ஸ்குடாரி மருத்துவமனையில் அதிகம் இறப்பு நேர்ந்ததை மறைக்காமல் வெளிப்படுத்தினார். குடிநீர் குழாயை சரி செய்யும்வரை, அதிகம் பேர் இறந்ததைச் சுட்டிக்காட்டி, சுகாதாரமற்ற சூழலே இறப்புக்கு முக்கிய காரணம் என்றார்.

இஸ்திரி ஜாடி
இஸ்திரி ஜாடி

அருங்காட்சியகத்தில் நடந்தபோது, புளோரன்சுடன் பயணிப்பதுபோலவே உணர்ந்தேன். அவருக்கு வழிகாட்டிய மற்றொரு விளக்கு, கடிதங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டி, அரசி விக்டோரியா அனுப்பிய பரிசு பொருட்கள், சுடு நீர் ஊற்றி இஸ்திரி பெட்டியாக அருள்சகோதரிகள் பயன்படுத்திய ஜாடி, நன்றியின் அடையாளமாக இளவரசர் ஆல்பர்ட் வடிவமைக்க, அரசி விக்டோரியா வழங்கிய மார்பு ஊசி (Brooch) ஆகியவற்றைப் பார்த்தேன். அந்த காலகட்டத்தில் மதிப்புமிகுந்த பொருளாக விளங்கிய ஓக் (Bog Oak) மரத்தால் மார்பு ஊசி செய்யப்பட்டிருந்தது.

மார்பு ஊசி
மார்பு ஊசி

ஸ்பானிய காய்சல்

அருங்காட்சியகத்தில் காணொளி அரங்கம் இருந்தது. அதன் முகப்பில், “புளோரன்ஸ் நைட்டிங்கேல், கிரிமியன் போரின்போது ஆற்றிய செவிலிய பணி சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில், 1914-இல் முதல் உலகப் போர் தொடங்கியது. புளோரன்சைப் பின்பற்றி, பெண்கள் பலர் தன்னார்வத்துடன் இராணுவ செவிலியப் பணிக்கு வந்தார்கள். போர்க் காலம் முழுவதும் துணிச்சலாகப் பணியாற்றினார்கள். ஆனால், 1918-ஆம் ஆண்டு போர் முடியும் தருவாயில், அதை விட அதிகமாக உயிர்ப்பலி வாங்கிய ஸ்பானிய காய்ச்சல்  பரவத் தொடங்கியது.”

ஸ்பானிஸ் காய்ச்சல் அறிகுறி
ஸ்பானிஸ் காய்ச்சல் அறிகுறி

அரங்கில் இருந்த தொலைக்காட்சியில் காய்ச்சல் குறித்த புள்ளிவிபரங்களைப் பார்த்தேன். பிரிட்டனில் மட்டும், மூன்றில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரங்கின் மத்தியில் கட்டில்கள் உள்ளன. சுவரின் மேலிருந்து வரும் ஒளி, கட்டிலில் படக் காட்சியாக விரிகிறது. ’காய்ச்சலுடன் ஒருவர் படுத்திருக்கிறார். நோயின் அறிகுறிகள் அதிகரிக்கின்றன. வேதனையில் துடிக்கிறார். இருமுகிறார். இரத்தம் தெறிக்கிறது. மருந்துகளின்றி நோயாளி இறக்கிறார். கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார்’ அனைத்தையும் காட்சிகளாகப் பார்த்தபோதே மனம் கனத்தது.

காணொளி அறை
காணொளி அறை

பிரிட்டனில் மூடப்பழக்கங்கள்

சுவரில் இருந்த குறிப்புகளை வாசித்தேன். அக்காலத்தில் தடுப்பு மருந்துகள் இல்லாததால், கழுத்தில் கற்பூரம் தொங்கவிட்டால் குணமாகும் என சிலர் நம்பினார்கள்; மண்ணெண்ணையில் வெள்ளக்கட்டியை ஊற வைத்து சாப்பிட்டார்கள்; ஸ்ட்ரைக்னைன் (Strychnine) எனும் நச்சுப் பொருளை நரம்பில் செலுத்தினார்கள்; விஸ்கி குடித்தால் குணமாகும் என நினைத்து விஸ்கிக்கு இருந்த தடையை நீக்கப் போராடினார்கள்; பாரம்பரிய மருத்துவம் குறித்து விளம்பரம் கொடுத்தார்கள்.

கழுத்தில் கற்பூரம்
கழுத்தில் கற்பூரம்

மேசையில் இருந்த பொருட்களைப் பார்த்தேன். மூலிகை பொருட்களைப் பயன்படுத்தி நாம் ஆவி பிடிப்பதுபோல, நிலக்கரி தாரை சூடுபடுத்தி அதன் புகையை சுவாசித்திருக்கிறார்கள். சூடுபடுத்த பயன்படுத்திய விளக்கு இருந்தது (இப்புகை புற்றுநோய் வரவழைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது); நரம்பில் குளுக்கோஸ் ஏற்றும் வழக்கம் பெரிய அளவில் அப்போது நடைமுறையில் இல்லை. எனவே, நீர்ச் சத்து குறையாமல் இருப்பதற்காக திரவ உணவு ஊட்டினார்கள். அதற்குப் பயன்படுத்திய கெண்டி இருந்தது.

சுவரில் இருந்த உலக வரைபடத்தைப் பார்த்தேன். உலகம் முழுவதும் ஸ்பானிஸ் காய்ச்சல் பரவிய தகவல் அறிந்தேன். அமெரிக்காவின் சமோயா, தெற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள செயிண்ட் ஹெலினா மற்றும் வெகுதூரத்தில் உள்ள தீவுகள் மட்டுமே தொற்றுநோயில் இருந்து தப்பியிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. உதாரணமாக, கனடாவில் 50 ஆயிரம், அமெரிக்காவில் 6 லட்சத்து 75 ஆயிரம், பிரான்ஸில் 4 லட்சம், சீனாவில் ஒரு லட்சம், இந்தியாவில் ஒரு கோடியே 80 லட்சம்!

ஸ்பானிஸ் காய்ச்சலின் பரவல்
ஸ்பானிஸ் காய்ச்சலின் பரவல்

உலகத் தொற்று

அருகிலேயே, “இதுபோன்ற உலகத் தொற்று இனி வரவே வராதா?” என்ற கேள்வியைப் பார்த்தேன். “உலகம் முழுமைக்குமான தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் உலகத் தொற்று ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது, நோயுற்றவர்களையும், இறப்பவர்களையும் பராமரிப்பதில் செவிலியர்கள் முன் நிற்பார்கள்” என்று வாசித்தேன்.

அன்று, 2020, ஜனவரி 17. முந்தைய நாள்தான், ஹாங்காங் பெண்மணி, “சீனாவில் ஏதோ வைரஸ் பரவுகிறதாம். ஊரடங்கு அறிவித்துள்ளார்களாம்” என்று சொல்லியிருந்தார். உலகத் தொற்று தொடங்கிவிட்டது தெரியாமலேயே வாசித்திருக்கிறேன்.

Book of Honor
Book of Honor

The book of Honor

அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தேன். வரவேற்பறையில் The Book of Honor எனும் புத்தகத்தைப் பார்த்தேன். செவிலியராக பணியாற்றும் ஒருவர், தன்னைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியக ஆவணத்தில் இடம் பெறலாம். அல்லது, தனக்குத் தெரிந்த சிறந்த செவிலியர் குறித்த தகவல்களை அனுப்பியும் பதிவு செய்யலாம். நாம் வழங்கும் மிகக் குறைந்த கட்டணம், அருங்காட்சியக பராமரிப்புக்கு பயன்படுகிறது. உடனே, காரைக்குடியில் செவிலியராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற மார்த்தா அக்கா அவர்களை அழைத்தேன். இத்தகவலைச் சொன்னேன். புன்னகையோடு வெளியேறினேன்.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in