சிறகை விரி உலகை அறி - 86: மருத்துவப் பணியாளர்களின் துயரக் கனவு

அருங்காட்சியக வரவேற்பு பகுதி
அருங்காட்சியக வரவேற்பு பகுதி

மருத்துவமனையில் நடந்திருக்கிறேன்; பிணக்கிடங்கைப் பார்த்திருக்கிறேன்; ஆடையில் தங்கிய மருத்துவமனை வாசத்தைத் தாங்க இயலாது தவித்திருக்கிறேன்; மின்சாரம் தாக்கி மடிந்த நண்பனுக்கு அருகிலும், தலை சிதைந்து உறவினர் இறந்த விநாடியிலும் உடன் நின்றிருக்கிறேன். கால் கை உடைந்தவரையும் சதை கிழிந்த உடல்களையும் கண்டிருக்கிறேன்; மனம் கசிந்துருகிய வேதனையைக் கேட்டிருக்கிறேன். அனுபவத்தில் இது ஒரு வகை! மறந்துவிட்டதாக மனம் நடிக்கும். ஆழ்ந்து உறங்குகையில் கனவில் உயிர் பிழைக்கும். அரண்டு நம்மை எழ வைத்து நிம்மதி தொலைக்கும்.

சராசரி மனிதருக்கே இந்நிலையென்றால், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் கனவுகளில் எண்ணிலடங்கா துயர நினைவுகள் உயிர்த்தெழும்தானே! சொந்த நினைவுகளைக்கூட கனவுகளாகப் பெற இயலாதல்லவா! உணர்வுகளைத் தொலைத்துவிட்டு யதார்த்தத்தைச் சந்திக்க வேண்டிய கொடுமையல்லவா! இத்தகைய பணியைத் தேர்ந்தெடுக்கத்தான் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பெற்றோருடனும், சமூகத்துடனும் போராடினார். 

பயிற்சியின் தொடக்கம்

புராட்டெஸ்டான்ட் போதகர் தியோடர் ஃபிளின்டரும் அவரது மனைவியும் ஜெர்மனியில் கெய்சர்வெர்த் என்னும் இடத்தில் மருத்துவமனையும், கல்லூரியும், ஆதரவற்றோர் இல்லமும் நடத்தினார்கள். புளோரன்ஸ் அங்கே சென்றார். தங்கினார். மருந்துகள் பற்றியும், காயங்களுக்குக் கட்டுப்போடுதல் குறித்தும் கற்றார்.

கிழிந்த சதைகளுக்கு தையல் போடுவதையும், உடைந்த கால்களையும், விரல்களையும் அறுவை சிகிச்சையில் இணைப்பதையும் கற்றறிந்தார். நோயுற்றோரையும், மரணநிலையில் இருந்தோரையும் கனிவுடன் பார்த்துக்கொண்டார். ஒருபோதும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. ஆனாலும், “அன்பான வாழ்க்கை என்றால் என்ன என்பதை இப்போது கற்றுக்கொண்டேன்” என்று எழுதினார்.

செவிலியர்களின் மேலாடை
செவிலியர்களின் மேலாடை

பணியின் தொடக்கம்

படிப்பு முடித்து இங்கிலாந்து திரும்பினார் புளோரன்ஸ். மகளின் உறுதியை அறிந்து செவிலியராகப் பணியாற்ற பெற்றோர் அனுமதித்தார்கள். லண்டன் ஹார்லி வீதியில், நோயுற்ற பெண்கள் தற்காலிகமாகத் தங்கி சிகிச்சை பெற்ற இல்லத்தில் (Establishment for gentlewomen during temporary illness) 1853-இல் புளோரன்ஸ் வேலையில் சேர்ந்தார். செலவுக்காக தந்தை கொடுத்த பணத்திலிருந்து நோயுற்றோருக்காக எண்ணற்ற பொருட்களை வாங்கினார்.

புளோரன்ஸ் வாங்கிய அறைகலன்கள், ஆடைகள், கட்டில் விரிப்புகள், மற்றும் சுவர் அலங்கார பொருட்களை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். ரோமையிலும் லண்டனிலும் மருத்துவமனை தொடங்கியதுடன், சமய பேராசிரியராகவும் விளங்கியவர் கிறிஸ்டியன் வன் புன்சென். புளோரன்ஸ் செவிலியராவதற்கு பல வகைகளில் உதவியவர். 1852-இல் புளோரன்சுக்கு இவர் கொடுத்த ஜெர்மன் மொழியில் வெளியான கிறிஸ்தவ பாடல் மற்றும் ஜெப புத்தகங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளன.

புளோரன்ஸ் அணிந்த ஆடை
புளோரன்ஸ் அணிந்த ஆடை

மருத்துவமனைகள் ஏழைகளுக்கு அல்ல!

புளோரன்சின் காலத்தில், நலம் தரும் இடமாக இருப்பதைவிட ஏழைகளின் மரண வீடாகவே மருத்துவமனைகள் இருந்தன. நோயுற்றவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. போதுமான மருந்துகள், கட்டில்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. சுத்தம் என்பது சுத்தமாக இல்லை. பொது சுகாதாரம் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை. மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பணம் செலவழிக்க வசதிபடைத்தவர்கள் வீட்டிலேயே மருத்துவம் பார்த்தார்கள்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட இரத்தப் போக்கினாலும், சுகாதாரம் குறித்த புரிதல் இல்லாததாலும் பாதிக்கும் மேற்பட்டார் இறக்கும் சூழல் நிலவியது. பிரசவத்தின்போது குழந்தை மரணம் தவிர்க்க இயலாதது என்பது பொது புத்தியில் ஆழ பதிந்திருந்தது. ஜோசப் லிஸ்டர், கார்போலிக் அமிலத்தை நோய் நுண்ணுயிர்த் தடையாகப் (antiseptic) பயன்படுத்தத் தொடங்கிய பிறகே 1860-களில் குழந்தை இறப்பு விகிதம் குறையத் தொடங்கியது. அதேபோல, 1853-இல் பேரரசி விக்டோரியா 4-ஆவது குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அவருக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள். அதன்பிறகு, பிரசவ நேரத்தில் மற்ற பெண்களும் மயக்க மருந்து பெறுவது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வளர்ச்சியின் எதிர் விளைவுகள்

புளோரன்ஸ் வாழ்ந்த காலத்தில் தொழிற்புரட்சியும் ஏற்பட்டது. நீராவி கப்பல்கள், தொடர்வண்டி பாதைகள், தந்தி மற்றும் நிழற்படக் கலை உள்ளிட்டவைகள் உருவாகின. கிராம மக்கள் நகரங்களுக்கு வரத் தொடங்கினார்கள். நகரத்தின் பரப்பளவு அதிகரித்தது. சமூகச் சிக்கல்கள் பெருகின. புளோரன்சின் குடும்பம் ஓரளவு வசதியாக இருந்தாலும், நகரத்துக்கு வெளியே வாழ்ந்த வாழ்க்கை மற்றும் ஐரோப்பிய பயணங்களால் புளோரன்சின் இதயம் எளியவர்களின் துரத்தை அறிந்திருந்தது

நகரத்துக்குப் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவும் சுகாதாரமாக வாழவும் வழியில்லை. சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால், அவ்வப்போது காலரா தொற்றுநோய் பரவியது. தொடர் வயிற்றுப்போக்கால் ஆயிரக்கணக்கானோர் மடிந்தார்கள். 1854-இல் லண்டனில் காலரா தொற்று ஏற்பட்டபோது மிடில்செக்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற புளோரன்ஸ் பல நாட்கள் சிகிச்சை அளித்தார்.

போர்க்களம் புகும் நேரம்

இதே காலகட்டத்தில், 1853-ல் கிரீமியன் பகுதியில் போர் (Crimean War) தொடங்கியது. ரஷ்யா ஒரு பக்கம், பிரிட்டன், பிரான்ஸ், ஓட்டோமன் பேரரசு, பின்னாளில் சேர்ந்துகொண்ட சார்டினியா-பெடிமோன்ட் மறுபக்கம். போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது.

புளோரன்ஸ் வீட்டில் இருந்தார். போருக்குச் சென்ற எண்ணற்ற பிரிட்டன் வீரர்கள் காயத்தாலும், நோயாலும் இறப்பதை செய்தித்தாளில் வாசித்தார். கான்ஸ்தாந்திநோபுள் (இஸ்தான்புல்) நகருக்கு வெளியே, ஸ்குடாரியில் (Scutari) இருந்த பிரிட்டிஸ் இராணுவ மருத்துவமனையால் சூழலை சமாளிக்க இயலவில்லை. கவனிக்க ஆட்கள் இன்றி வீரர்கள் மணிக்கும் செய்தி அறிந்த மக்கள் பிரிட்டனில் போராடத் தொடங்கினார்கள்.

போர் குறித்து முடிவெடுக்கும் இடத்தில் இருந்த சிட்னி ஹெர்பர்ட்டிடம், “போர்க்களத்துக்குச் சென்று பணியாற்ற தன்னை அனுமதிக்குமாறு” புளோரன்ஸ் கடிதம் எழுதினார். அதுவரையில் இல்லாத வழக்கத்துக்கு, ஆபத்தான வேண்டுகோளுக்கு ஹெர்பர்ட் சம்மதித்தார்.

தன்னார்வத்துடன் பெண்கள் பலர் புளோரன்சிடம் வந்தார்கள். மருத்துவமனை அனுபவமும் துணிவும் நிறைந்த 38 பெண்களை புளோரன்ஸ் தேர்வு செய்தார். அதில், புராட்டெஸ்டான்ட் அருள்சகோதரிகள் 14, ரோமன் கத்தோலிக்க அருள்சகோதரிகள் 10, தொழில்முறை செவிலியர்கள் 10 பேர் இருந்தார்கள்.

தானும், தன்னுடன் வந்த செவிலியர்களும் பயன்படுத்துவதற்காக கிரீமியன் போர் களத்துக்கு புளோரன்ஸ் கொண்டுசென்ற மருந்துப் பெட்டியை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். வயிற்றுக்கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு தொடர்பான மருந்துகளும், மலேரியாவுக்கு எதிரான மருந்துகளும், தண்ணீர் அளக்கும் குடுவை, டானிக் மற்றும் இருமல் மாத்திரைகள் இருந்த இரண்டு போத்தல்களும் அந்த பெட்டியில் இருந்தன. இவையனைத்தும், புளோரன்ஸ் முன்மதியுடன் செயல்பட்டதன் சான்றுகள்.

மருந்துப் பெட்டி
மருந்துப் பெட்டி

இரத்தம் குடித்த காற்று

புளோரன்ஸ் தலைமையிலான செவிலியர்கள் ஸ்குடாரி சென்றனர். காயமுற்றவர்களாலும், நோயுற்றவர்களாலும் இராணுவ மருத்துவமனைகள் இரண்டும் நிரம்பி வழிந்தன. வெகுதூரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வீரர்கள் பட்டினியோடு இருந்தார்கள். உடலெல்லாம் அழுக்கு. உறைந்த இரத்தம். அழுகிய சதை. கிழிந்து தொங்கிய உறுப்புகள். குமட்டுகிற நாற்றம். வேறோர் உலகத்துக்குள் தாங்கள் வந்துள்ளதை செவிலியர்கள் உணர்ந்தார்கள். உணவு, கட்டில், போர்வை உள்ளிட்ட எல்லாவற்றுக்குமே பற்றாக்குறை நிலவியது.

துவைத்தல், சமைத்தல், தைத்தல் என பல மணி நேரம் கடினமாக உழைத்தார்கள். அனுபவமிக்க செவிலியர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வீரர்களின் காயங்களைச் சுத்தப்படுத்தி கட்டுப்போட்டார்கள். மிகவும் களைத்தார்கள். புது இடமும், நோய் சூழலும் புளோரன்சையும் நோயாளியாக்கியது (Crimean Fever).  விரைவிலேயே குணமானாலும், கடைசிவரை முழு சுகம் கிடைக்காமலேயே பணியாற்றினார்.

செவிலியர்களை ஏற்காத ஆண் மருத்துவர்கள்

ஆண் மருத்துவர்களால் பெண் செவிலியர்களை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒத்துழைக்க மறுத்தார்கள். கோபமுற்றார்கள். ஆனாலும், மருத்துவர்கள் சொல்வதைச் சரியாகப் புரிந்து, அவைகளை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் புளோரன்ஸ் மிகவும் கவனமாக இருந்தார்.

இராணுவ மருத்துவமனைகள் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என புளோரன்ஸ் உணர்ந்தார். ஓய்வின்றி உழைத்து, வீரர்களின் ஆடைகளையும் விரிப்புகளையும் துவைப்பதற்கு செவிலியர்களையும், வீரர்களின் மனைவிகளையும் ஒருங்கிணைத்தார். மனிதக் கழிவுகளை அள்ளிச் சுத்தப்படுத்த ஆண்களை ஒருங்கிணைத்தார்.  

போதுமான பொருட்கள் இல்லையென ஹெர்பர்ட்டுக்கு நிறைய கடிதங்கள் எழுதினார். தன் சொந்த பணத்தையும், டைம்ஸ் நாளிதழ் வழியாக மக்கள் அனுப்பிய பணத்தையும் வைத்து போர்வைகள், மலத்தட்டுகள், அறுவை சிகிச்சை செய்யத் தேவையான மேசைகள் உள்ளிட்டவற்றை வாங்கினார்.

குரூரமான இந்த வேலைக்குத் தயாராகாத பெண்கள், சூழல் குறித்தும், வசதி குறைவான தங்கள் சீருடைகள் குறித்தும் புளோரன்ஸ் மீது குற்றம் சுமத்தினார்கள். புளோரன்சின் மிகவும் மதிப்புக்குரிய செவிலியரான, ரெபேக்கா லாஃபீல்டு, “என்னதான் நான் மிகவும் விரும்பி இந்த இடத்துக்கு வந்திருந்தாலும், இப்படி இருக்கும் என எனக்கு முன்னமே தெரிந்திருந்தால், நிச்சயம் வந்திருக்க மாட்டேன்” என்றார்.

புளோரன்ஸ் எழுதிய குறிப்புகள்
புளோரன்ஸ் எழுதிய குறிப்புகள்

ஆவண சாட்சியம்

அருங்காட்சியகம் முழுவதும் ஆவணங்களால் நிறைந்திருக்கின்றன. பொருள் வைப்பறையின் பாதுகாவலர் என தன்னைப் பற்றி நகைச்சுவையாகச் சொன்ன புளோரன்ஸ், வீரர்களுக்கு கொடுத்த அனைத்துப் பொருட்களையும் கவனமாக குறித்து வைத்த நோட்டுகள்; பிரிட்டன் இராணுவ நிர்வாகம் குறித்தும், மருத்துவர்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள் குறித்தும் எழுதிய கடிதம்; ‘கொடூர மனநிலை கொண்ட நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு மத்தியில் புளோரன்ஸ் பணியாற்றுவதாக’, இராணுவ வீரர் ஜான் சுவைன்ஸ் தம் மனைவி மார்த்தாவுக்கு எழுதிய கடிதம்; புளோரன்ஸ் மற்றும் மற்ற செவிலியர்கள் குறித்து பெருமையாக வீரர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு எழுதிய கடிதங்கள்; செவிலியர்களுடனான பணி ஒப்பந்தம் மற்றும் அவர்களது ஊதியம் குறித்த பதிவேடு; பூச்சி கடியிலிருந்து தன்னைப் பாதுகாக்க புளோரன்ஸ் பயன்படுத்திய எண்ணெய் போத்தல் அனைத்தையும் பார்த்து வியந்தேன்.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in