சிறகை விரி உலகை அறி - 84: சாபங்களும் காணிக்கைகளும்

கோவிலும் முற்றமும்- கற்பனை ஓவியம்
கோவிலும் முற்றமும்- கற்பனை ஓவியம்

மதம் ஒரு மந்திரச் சாவி! சாவிக்காரனின் எண்ணப்படி மக்களை இணைக்கும் அல்லது மனங்களைப் பிரிக்கும்; தனி நபர்களைத் தூதர்களாக்கும் அல்லது தடம் தெரியாமல் அழிக்கும்; உண்மையைப் புனைவாக்கும் அல்லது கற்பனையைக் கடவுளாக்கும்.

பேத் நகரத்தில் சமாதானம் முகிழ்க்கவும் சகோதரத்துவம் தளைக்கவும் சுலிஸ் பெண் கடவுளுக்கு குளியல் வளாகத்துடன் ரோமானியர்கள் கோவில் கட்டினார்கள். அக்கோவிலை அகழாய்வு மீட்டுக் கொடுத்தது. அகழாய்வில் கிடைத்தவை அருங்காட்சியகத்தில் உள்ளன. 

இரண்டு தேவதைகள் ஒன்றானார்கள்

கி.பி. 1727-ஆம் ஆண்டு கழிவுநீர் வாய்க்கால் வெட்டியபோது கல்லாலான தலை ஒன்று கிடைத்தது. உடல் பகுதி கிடைக்கவில்லை. உள்ளூர் தெய்வம் சுலிஸ் இருக்கும் இடத்தினருகில் இந்தச் சிலை எப்படி வந்தது? பேத் நகரத்துக்கு தொடர்பில்லாத உருவமாக இருக்கிறதே? ஆய்வாளர்கள் யோசித்தார்கள். ஆய்வு செய்தார்கள். சுலிஸ் மினர்வா (Minerva) சிலையின் தலை என்று கண்டுபிடித்தார்கள்.

சுலிஸ் மினர்வா தலை
சுலிஸ் மினர்வா தலை

மினர்வா, ரோமையரின் பெண் கடவுள். குணமளிக்கும் வல்லமை, ஞானம் மற்றும் போர்க்கள நுண்ணறிவு மிகுந்த சுலிஸ் போலவே மினர்வாவும் இருந்ததால் இருவரையும் ஒரே கடவுளாக்கி, சுலிஸ் மினர்வா என ரோமையர்கள் அழைத்தார்கள். புனித வெந்நீர் ஊற்றுக்கு அருகில் கிடைத்த பாத்திரங்களில், ’பெண் கடவுள் சுலிஸ் மினர்வாவுக்கு’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரண்டு பலிபீட கற்களிலும் ‘சுலிஸ் மினர்வா’ என்றுதான் உள்ளது. வெண்கல முலாம் பூசப்பட்ட சுலிஸ் மினர்வாவின் தலையை அருங்காட்சியகத்தில் பார்த்தேன்.

கோவில் வளாகம்
கோவில் வளாகம்

கோவில் கலைநுட்பம்

கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்ல 15 மீட்டர் உயரத்துக்கு படிகள் இருந்தன. படிகளைக் கடந்ததும், உயரமான கொரிந்தியன் தூண்கள் 4 நின்றன. கோவிலின் முகப்பு முக்கோண வடிவத்தில் இருந்தது. தொடக்கத்தில், வர்ணம் பூசப்பட்டிருக்கலாம். தூணுக்குப் பின்னே இருந்த சிறிய அறையில் சுலிஸ் மினர்வா ஆளுயர சிலை இருந்தது. அருகில் விளக்கு ஒன்று அணையாமல் எரிந்தது. குருக்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை.

கோவிலுக்கு முன் இருந்த முற்றத்தில் மக்கள் காத்திருந்தார்கள். முற்றத்தின் நடுவே பலி பீடம் இருந்தது. ரோமை மத வழிபாட்டுச் சடங்குகள் பொதுவாக கோவிலுக்கு வெளியே பீடத்தைச் சுற்றியேதான் நடந்திருக்கின்றன. கடவுளுக்கு பலி கொடுக்க மக்கள் விலங்குகளைக் கொண்டு வந்தார்கள். அவற்றில் வடு அல்லது குறை இருக்கிறதா என்று குரு பரிசோதித்தார். அதை அடிப்படையாக வைத்து, கொண்டு வந்தவருக்கு குறி சொன்னார். தகுதியான விலங்குகளை பீடத்தில் பலியிட்டார்.

1790-ஆம் ஆண்டு அகழாய்வில் கிடைத்த முக்கோண வடிவ முகப்பு மற்றும் கொரிந்தியன் தூண்களின் சிதிலங்களை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், கிடைத்ததைத் தகுந்த இடைவெளியுடன் சுவரில் பொருத்தி வைத்திருக்கிறார்கள். எதிர் திசையில் படம் ஒளிபரப்பும் கருவி இருக்கிறது. அதிலிருந்து வரும் காட்சிகள் இடைவெளியை இட்டு நிரப்புகின்றன. அருகில் நின்று, கோவிலின் முகப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை முழுமையாகப் பார்த்தேன். 

முடிவு தெரியாத முகம்

முக்கோண முகப்பின் நடுவில் கேடயம்போல வட்ட வடிவ முகம் ஒன்று உள்ளது. அச்சமூட்டும் பார்வையுள்ள அதன் தலை முடிகள் வெறியேறி பறக்கின்றன. இறக்கையுள்ள தேவதைகள் இருவர் கேடயத்தின் ஓரத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். கேடயத்துக்குக் கீழே தலைக் கவசங்கள் இரண்டு உள்ளன. ஒரு தலைக்கவசத்தின் மீது ஆந்தை நிற்கிறது. இவை அனைத்தையும் ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பலரும் பல்வேறு பதில்களைத் தந்துள்ளார்கள்.

ஒளிக்காட்சியுடன் முக்கோண முகப்பு
ஒளிக்காட்சியுடன் முக்கோண முகப்பு

1. தலைக்கவசமும் ஆந்தையும் முறையே, இராணுவ பலம் மற்றும் ஞானத்தின் அடையாளங்களாகும். வேறு சில இடங்களிலும் கேடயத்துடன் மினர்வா சிலை இருப்பதால் இது மினர்வாவின் தலை.

2. கிரேக்க புராணத்தில் ஸ்டெனோ (Stheno), உரியால் (Euryale), மெதுசா (Medusa) ஆகிய 3 சகோதரிகளையும் கோர்கன் (Gorgon) என அழைப்பர். மூவருக்கும் பாம்புகள் தலைமுடிகளாக இருந்தன. அவர்களைப் பார்க்கும் யாவரையும் கல்லாக மாற்றிவிடும் ஆற்றல் மூவருக்கும் இருந்தது. இருப்பினும், பெர்செஸ் என்பவரால் மெதுசா கொல்லப்பட்டார். இதன் பின்னணியில், நடுவில் உள்ளது கோர்கன் முகம்.

3. முடி பறப்பதாலும், இறக்கைகள் இருப்பதாலும், ஒசியானஸ் அல்லது நெப்டியூன் (Oceanus or Neptune) எனும் கடல் தெய்வம்.

4. பறக்கின்ற முடிகள், எரி தழல் போல் இருப்பதாலும், தலைக்கு மேலே நட்சத்திரம் ஒன்று இருப்பதாலும், சோல் (Sol) எனும் சூரிய கடவுள்.

ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன.

கல்லறை நினைவு தூண்
கல்லறை நினைவு தூண்

அடுத்ததாக, தூண் ஒன்றை பார்த்தேன். அதன் அருகில், ‘சுலிஸ் மினர்வா கோவிலின் குருவாக இருந்த கல்புர்னிஸ் ரிசப்டஸ் (G.Calpurnius Receptus) என்பவரின் நினைவாக அவரின் கல்லறையில் நிறுவப்பட்ட தூண்’ என்று எழுதியிருந்தது.

கடவுளுக்கு காணிக்கை

இயற்கையையும், இயற்கைக்கு அப்பாற்பட்டதையும் மனிதர் வணங்க ஆரம்பித்த காலந்தொட்டே காணிக்கை கொடுக்கும் வழக்கமும் உருவாகியிருக்க வேண்டும். தன்னிடம் இருப்பதில் மிகச் சிறந்தவைகளை கடவுளுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றளவும் மக்களிடம் உள்ளது. பேத் நகர மக்களும், திருப்பயணிகளும், கொப்பளிக்கும் வெந்நீரினுள் நாணயங்கள், நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் கோப்பைகளை, ‘சுலிஸ் மினர்வாவுக்கு’ என பொறித்து காணிக்கையாகப் போட்டிருக்கிறார்கள்.

நாணயங்கள் கிடைத்த பை
நாணயங்கள் கிடைத்த பை

தங்கள் வேண்டுதல் கடவுளுக்குத் தெரிய வேண்டும் என்பதால் தகடுகளில் வேண்டுதல்களைப் பொறித்துள்ளார்கள். அகழாய்வில் கிடைத்த தகடுகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலும் சாபங்களே அதில் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டார்கள். தவறு செய்தவர்களை, உதாரணமாக, குளிக்கும்போது ஆடையைத் திருடியவர்கள் அல்லது பணத்தைத் திருடியவர்களைத் தண்டிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னார்தான் திருடியது என்று தெரியாதபோது, யார் மீதெல்லாம் சந்தேகம் வந்ததோ அவர்கள் அனைவரின் பெயர்களையும் எழுதி திருடரைக் கண்டுபிடிக்கும் வேலையை கடவுளுக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஓடும் புனித நீரில் குளிப்பது சுகமளிக்கும் என்று நம்பியதுபோலவே, கோவிலில் அமர்ந்திருந்தால், தூங்கினால் நலம் கிடைக்கும் எனவும் நம்பினார்கள். தூங்குவதற்கென்றே தனி இடம் இருந்தது. காலையில் எழுந்ததும், அவர்களின் கனவுகளுக்கு நலமளிக்கும் ரோமை கடவுளின் (Aesculapius) குருக்கள் விளக்கம் சொன்னார்கள். காட்சியில் கண்டது நடந்துவிட்டால் அதற்கும் தனியாக காணிக்கை கொடுத்தார்கள். தன் சார்பாகவும் தன் குடும்பத்தினர் சார்பாகவும் நொவந்தியுஸ் என்பவர் கொடுத்த  கல்வெட்டை அருங்காட்சியகத்தில் பார்த்தேன். 

நன்றி கல்வெட்டு
நன்றி கல்வெட்டு

குளியல் வளாகத்திலிருந்து 150 மீட்டர் தூரத்தில் 8 தோல் பைகளில் 17,577 ரோமை வெள்ளி நாணயங்கள் அகழாய்வில் கிடைத்தன. நாணயங்களின் காலகட்டம் கி.மு.32 – கி.பி. 275. நாணங்கள் கிடைத்த 4-வது பையின் மாதிரியை அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள்.

சிதைந்த குளமும் கோவிலும்

திருவிழாபோல எப்போதும் செழிப்பாகவும் கொண்டாட்டமாகவும் இருந்த இப்பகுதி, ஐரோப்பாவில் இருந்தும் அயர்லாந்தில் இருந்தும் வந்த தொடர் தாக்குதல்களால் சிதையத் தொடங்கியது. வீடுகளும் கட்டிடங்களும் தீக்கிரையாகின. பாதுகாப்பு தேடி மக்கள் குளியல் வளாகத்துக்குள் தஞ்சமடைந்தார்கள். பாதுகாப்பற்ற நகரத்துக்கு வருவதை பயணிகள் குறைத்தார்கள். காலப்போக்கில், முக்கியத்துவம் இழந்த புனித இடம், கேட்பாரற்று போனது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

மறுபடியும் நலம் நல்கும் நீர்

ஏறக்குறைய 1000 ஆண்டுகள் கடந்தன. சிதிலமடைந்த பகுதியில் 12-ஆம் நூற்றாண்டில் அரசருக்கு நீச்சல் குளம் கட்டப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரோமானிய குளங்கள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நீரேற்று நிலையம் கட்டினார்கள். குணமளிக்கும் நீரைக் குடிக்கும் வழக்கம் உருவானது.

தண்ணீர் குடிக்கும் இடம்
தண்ணீர் குடிக்கும் இடம்

ஒவ்வோர் இடமாக பார்த்துவிட்டு, தண்ணீர் குடிக்கும் இடத்துக்குச் சென்றேன். அருகிலேயே காகித குவளைகள் இருக்கின்றன. வழக்கமாக அடிப்பகுதி சமமாக இருக்குமல்லவா! இங்கே கூம்பு வடிவத்தில் பெரிய குழாய்க்குள் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.  கீழாக ஒரு குவளையை உருவி, தண்ணீர் பிடித்து குடித்தேன். இதற்கு முன் இங்கு தண்ணீர் குடித்த முக்கியமான சிலர் எழுதிய குறிப்புகள் சுவரில் இருந்தன.

எபிஸ்டுலே அத் லுசிலியும் (Epistulae ad Lucilium) கி.பி. 60 : “வெந்நீர் ஊற்றுகளை தெய்வமாக நாங்கள் வணங்குகிறோம். ஆபத்து நிறைந்த அல்லது அளவிட முடியாத ஆழம் உடைய சில குளங்களை நாங்கள் கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்.”

மருத்துவர் வில்லியம் ஆலிவர், கி.பி.1707. தனது நேரடி அனுபவத்தில் எழுதிய ஆய்வு: “இந்த குளத்து நீரைக் குடித்து ஒருவர் குணமாகவில்லை என்றால், வேறு எங்கேயுமே அவரால் சுகம் பெற இயலாது”

ஜே. ஜி. டக்லஸ் கீர் (J.G. Douglas Keer) 1891: “வெந்நீர் ஊற்றில் உள்ள நீர் மிகவும் வீரியம் மிக்கது. மிகவும் கவனமாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சிறிதுகூட பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளக்கூடாது.”

எச். எம். பேட்மேன் (H.M.Bateman)1939: “இதற்கு அதிகம் எதிர்ப்பு வரும் என அஞ்சுகிறேன். ஒன்றுமே இல்லை! கொஞ்சம் வெதுவெதுப்பாகவும், லேசாக சுவையாகவும் இருக்கிறது. அவ்வளவுதான்”

அனைத்தையும் வாசித்தபிறகு, அங்குள்ள கடைக்குச் சென்றேன். The essential Roman Baths புத்தகம் வாங்கினேன். வெளியில் வந்தபோது நகரத்தை இருள் முழுமையாகத் தழுவியிருந்தது. இருளின் சிணுங்கல் காதுக்குள் மோதியது. காதை அடைத்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன். லண்டனை நோக்கிய எங்கள் பயணத்தில் இருளை மோதி விரைந்தது பேருந்து.

(பாதை விரியும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in