சிறகை விரி உலகை அறி - 82: ஸ்டோன்ஹெஞ் - மூதாதையர்களின் சாதனை!

சிறகை விரி உலகை அறி - 82: ஸ்டோன்ஹெஞ் -  மூதாதையர்களின் சாதனை!

கடல்வெளியில் பசுந்தீவுகளை, வான்வெளியில் விண்மீன்களை ரசித்திருக்கும் நான் சமவெளியில் காலப் பெட்டகம் பார்க்க குழுவினரோடு புறப்பட்டேன். சாலிஸ்பரி பகுதிக்கு வாகனம் கிளம்பியதும் கண்களைக் கவர்ந்த மரங்களின் அணிவகுப்பு மெல்ல குறைந்தது. நிலமற்ற கடல்போல மரங்களற்ற புல்வெளி கண்ணுக்கெட்டும் தூரம்வரை படர்ந்திருந்தது. வரலாற்றுத் தகவல் தந்து ஆர்வத்தை அதிகரித்தார் வழிகாட்டி.

கற்கால நினைவுத் தூண்கள்

“ஹெஞ் (Henge) என்றால் கோவில். ஸ்டோன்ஹெஞ் (Stonehenge) எனப்படும் கற்கோவிலுக்கு நாம் போகிறோம். கடைசி பனியுகம் முடிந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வேட்டையாடி மக்கள் நடந்தே பிரிட்டனுக்குள் வந்தார்கள். பல்வேறு பகுதிகளில் தங்கினார்கள். அதில் முக்கியமானது, இங்கிலாந்தின் தெற்கே உள்ள சாலிஸ்பரி பகுதி. இங்குள்ள அவோன் ஆற்று நீரும், நீந்தும் மீனும், உலாவிய சிவப்பு மானும் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தன.

இவர்களைப் பற்றிய முக்கிய ஆதாரம், 1996-ஆம் ஆண்டு ஸ்டோன்ஹெஞ் அருகே, வடமேற்கே முதன் முதலாக பேருந்து நிலையம் கட்டத் தொடங்கியபோது கிடைத்தது. ஆமாம்! ஆய்வாளர்கள் 3 பெரிய குழிகளை அங்கே பார்த்தார்கள். நான்காவது குழி 1989-இல் கண்டுபிடிக்கப்பட்டது. குழிகளில் 75 சென்டிமீட்டர் விட்டமுள்ள பெரிய கம்பம் இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். குழியின் அடியில் கிடைத்த பொருட்களை ரேடியோகார்பன் மூலமாக ஆய்வு செய்து, கற்காலத்தைச் சேர்ந்தது எனவும், கி.மு.8500 – கி.மு.7000 ஆண்டுகளுக்கு உட்பட்டது எனவும் கண்டறிந்தார்கள்” என்றார் வழிகாட்டி.

பேருந்து நிறுத்தம் வந்தது. “கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதற்காக, ஸ்டோன்ஹெஞ் அருகே சுற்றுலா பேருந்துக்கு அனுமதி இல்லை. இடைவழிப் பேருந்துக்கு (shuttle bus) மாற வேண்டும்” என்று அவர் வழி நடத்த ஆரம்பித்தார். சூரியக் கதிர்களை மறைத்திருந்த மேகங்கள் நீர்த் தூறல் போட்டன. சிலர் குடை பிடித்தார்கள். நான் மழையிலும் அணியும் குளிராடை அணிந்திருந்ததால் அப்படியே இறங்கினேன். சில நொடிகளில் நீரும் குளிரும் என் உடலைத் தேடின. ஆடையோடு வழிந்தோடின.

முதல் ஸ்டோன்ஹெஞ்

இடைவழிப் பேருந்து புறப்பட்டது. வியப்பும் ஆர்வமும் அதிகரித்தது. “தற்போது ஸ்டோன்ஹெஞ் உள்ள இடத்தில், கல் இல்லாத முதல் ஸ்டோன்ஹெஞ் இருந்தது” என்றார் வழிகாட்டி. எல்லாரும் அவரைப் பார்த்தோம். “ஆமாம்! தொடக்கத்தில், 110 மீட்டர் விட்டத்தில், 2 மீட்டர் ஆழமுடைய மிகப்பெரிய வட்டக் குழி வெட்டியுள்ளார்கள். அதுவும், வட்டக்குழிக்கு உள்ளே நடுவில் சரிவான வட்ட மேடு இருப்பதுபோல் வெட்டப்பட்டது. வாசல்கள் இருந்த இரண்டு இடங்களில் மட்டும் குழி வெட்டவில்லை. வெட்டுவதற்கு, சிவப்பு மான்களின் கொம்புகளை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

பெரிய வட்டக்குழி
பெரிய வட்டக்குழி

கொம்புகளை ரேடியோகார்பன் மூலம் ஆய்வு செய்த ஆய்வாளர்கள், முதல் ஸ்டோன்ஹெஞ் கி.மு.3000 – கி.மு. 2920 ஆண்டுகளில் உருவானதாக கண்டறிந்தார்கள். குழிக்கு உள்ளே இருந்த கால்நடைகளின் எலும்புகள், தாடைகள், மற்றும் மண்டை ஓடுகளை ஆய்வு செய்தபோது, இவை இன்னும் 300 ஆண்டுகள் பழமையானவை என்பது தெரிய வந்தது. இதனால், ஏற்கெனவே இந்த இடத்தில் சடங்குகள் நடத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெரிய வட்டக்குழியைத் தாண்டி உள்ளே சென்றால், குழியை ஒட்டியே சீரான இடைவெளியில் சுற்றிலும் 56 குழிகள் வெட்டியிருக்கிறார்கள். அவை, ஸ்டோன்ஹெஞ்சை முதன் முதலில் முறையாக ஆய்வு செய்தவர்களுள் ஒருவரான ஜான் ஆப்ரி ( John Aubrey, 1626-1697) நினைவாக, ஆப்ரி குழிகள் என அழைக்கப்படுகின்றன. வட்டக் குழியும் ஆப்ரி குழிகளும் ஒரே நேரத்தில் வெட்டப்பட்டுள்ளன.

தங்களுக்கென குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக்கொண்டு பல்வேறு குடும்பங்கள், இனக் குழுக்கள், மற்றும் தனி நபர்கள் இணைந்து இதை வெட்டியுள்ளார்கள். எரியூட்டப்பட்ட எலும்புகள், எரிமேடை சாம்பல் மற்றும் கரி உள்ளிட்டவற்றை ஆய்வின்போது குழிகளிலிருந்து எடுத்தார்கள். உடல்கள் அழிந்து எலும்பாகும்வரை இறந்தவர்களை இந்த இடத்தில் கிடத்தியிருக்கலாம், மற்றும் அரணாகவும், மக்கள் கூடி கொண்டாடும் இடமாகவும் இப்பகுதி இருந்திருக்கலாம் என்கிறார்கள்.”

இரண்டாவது ஸ்டோன்ஹெஞ்

இடைவெளிப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். குளிர் காற்றை எதிர்த்து நடந்தோம். கன மழையும், கடுங் குளிரும் என் ஆர்வத்தைத் தடுக்கவில்லை. வாய் திறந்து மழை நீரை வாயில் வாங்குவதும் துப்புவதுமாக கொண்டாட்ட மனநிலையில் ஏறக்குறைய 100 மீட்டர் நடந்தேன். கூட்டத்துக்கு முன்பாக வெட்கப்பட்டு நிற்கும் குழந்தைபோல நிற்கிறது, கி.மு. 2500-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்டோன்ஹெஞ். புருவம் உயர்த்திப் பார்த்தேன். கைகளை இறுக கட்டியிருந்தாலும், குளிரில் தோள்கள் குதித்தன. பற்களுக்கு இடையே காற்று நடுங்கி வெளியேறியது.

எங்களோடு வந்த, ஹாங்காங் தம்பதியரைப் பார்த்து, “உங்கள் இருவரையும் வைத்து படம் எடுக்கவா?” என்று கேட்டேன். மகிழ்ச்சியோடு நின்றார்கள். அவர்களது திறன்பேசியில் படமெடுத்தேன். “உங்களுக்கு எடுக்கவா?” என்று கணவர் கேட்டார். “நிச்சயமாக!” என்று சொன்னேன். வேகமாக குளிராடையைக் கழற்றினேன். “என்னிடம் தாருங்கள்” என்று அவரது மனைவி கிளாரன்ஸ் லியுங் கேட்டார். கொடுத்தேன். காத்திருந்த காற்றும் மழைத்துளியும் என் உற்சாகத்தை இரட்டிப்பாக்கின. குளிரை நெஞ்சோடு அணைத்து ஒரு படம், கைகள் இரண்டையும் விரித்து காற்றின் அணைப்பை ரசித்து ஒரு படம். “சீக்கிரம் குளிராடையை அணியுங்கள். குளிரில் செத்துவிடப் போகிறீர்கள்” என்று சொல்லி ஆடையைக் கொடுத்தார் லியுங். குளிரை வெதுவெதுப்பாக்கியது எங்கள் புன்னகை.

Heel stone மற்றும் ஸ்டோன்ஹெஞ் முகப்பு
Heel stone மற்றும் ஸ்டோன்ஹெஞ் முகப்பு

வழிகாட்டி வடகிழக்கே எங்களை அழைத்துச் சென்றார். அதுதான், ஸ்டோன்ஹெஞ் நுழைவாயில். அங்கே, 40 டன் எடையுள்ள, சார்சென் (Sarsen) வகை கல் தனியாக நிற்கிறது. அதற்கு, ஹீல் ஸ்டோன் (Heel stone) என்று பெயர். இந்தக் கல்லுக்கு இணையாக வேறு ஒரு கல் நின்றதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. இக்கல்லைக் கடந்து சென்றால், (வேலி போட்டிருப்பதால் போக இயலாது) தூர்ந்துபோன வட்டக்குழியை ஓரளவு காண முடியும். அதற்கு முன்னே ஆப்ரி குழிகள்; அதிலிருந்து நேரே தூரத்தில் வட்ட வடிவ ஸ்டோன்ஹெஞ் அமைக்கப்பட்டது.

ஏலியன்கள் கட்டவில்லை

சார்சென் மற்றும் புளூஸ்டோன் எனும் இரண்டு கற்களை இங்கே பயன்படுத்தியுள்ளார்கள். பெரிய கற்கள் அனைத்தும் சார்சென் எனப்படும் வலுவான மணற் கற்களே! சில கற்கள் 35 டன் எடை கொண்டது. ஸ்டோன்ஹெஞ்சின் வடக்கே, மார்ல்போரோ டவுன்ஸ் என்னும் இடத்திலிருந்து 75 கற்களைக் கொண்டுவந்து, சீர்செய்து, நிறுவியுள்ளார்கள். எப்படி கொண்டுவந்திருப்பார்கள்? வேற்றுக்கிரகவாசிகள் கொண்டுவந்ததாக சிலர் கதை விடுகிறார்கள். ஆனால், சிறிய வண்டியில் 200 பேர் சேர்ந்து ஒரு கல்லை 12 நாட்கள் இழுத்து வந்து சேர்த்திருக்கலாம் என்கிறது ஆய்வு.

புளூஸ்டோன் என்பது, ஸ்டோன்ஹெஞ்சில் உள்ள சிறிய கற்களாகும். தொடக்கத்தில் ஏறக்குறைய 80 கற்கள் இருந்துள்ளன. இதில் பல வகையான கற்கள் இருந்தாலும் அனைத்துமே 240 கிலோமீட்டர் தூரத்தில் வேல்ஸ் நாட்டில் பிரசெலி மலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. சில கற்கள் 3 டன் எடை கொண்டவை. தரை வழியாகவும், அருகில் ஓடும் அவோன் ஆற்று வழியாகவும் கொண்டு வந்திருக்கலாம் என்கின்றன ஆய்வுகள். கொண்டுவரப்பட்டபோது இதைவிட அதிக எடையுடன் இருந்த கற்களை கற்கருவிகளால் சீர் செய்துள்ளனர்.

ஸ்டோன்ஹெஞ் ஓவியம்
ஸ்டோன்ஹெஞ் ஓவியம்

இயற்கையின்  ஒழுங்கில் ஸ்டோன்ஹெஞ்

கோடை காலத்தில், ஆண்டின் நீண்ட பகல் நாளில் (Summer solstice), ஏறக்குறைய ஜுன் 21 அன்று, உதிக்கும் சூரியனின் முதல் கதிர், வடகிழக்கே உள்ள ஹீல் ஸ்டோன் வழியாக ஸ்டோன்ஹெஞ் உள்ளே நுழைந்து மேழெழுந்து செல்லும். அதேபோல, குளிர்காலத்தில், ஆண்டின் குறைவான பகல் நாளில் (Winter solstice), ஏறக்குறைய டிசம்பர் 21 அன்று மிகச் சரியாக அதற்கு எதிர் திசையில் சூரியனின் கடைசி கதிர் விழுந்து மறையும். ட்ரைலிதோன் தூண்கள் இணைந்து நின்ற காலத்தில், கற்களின் இடுக்கில் ஒளி புகுந்த காட்சி எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கும்! அண்மைக்காலங்களில், குறிப்பிட்ட நாளில் இக்காட்சியை நேரிலும் நேரலையிலும் லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்கிறார்கள். நானும் நேரலையில் ஒருமுறை பார்த்துள்ளேன்.

ஸ்டோன்ஹெஞ் விளக்கம்

ஸ்டோன்ஹெஞ்சின் முதல் வட்டத்தில் 1.5 மீட்டர் இடைவெளியில் ஏறக்குறைய 35 டன் எடையுள்ள 30 கல் தூண்கள் ஊன்றப்பட்டுள்ளன. இரண்டிரண்டு தூண்களை, உச்சியில் மிகப்பெரிய 30 செவ்வக கற்கள் வைத்து இணைத்திருக்கிறார்கள். இருப்பினும், 11-ஆம் எண் கல், வட்ட வடிவத்தில் சரியாக நின்றாலும் உயரம் குறைவாக இருக்கிறது. இதனால், வேலை முழுமையாக முடிவில்லை என்றும், அல்லது பின்னால் உள்ள பகுதி மக்களின் பார்வைக்கு படாது என்பதால் அப்படியே விட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

ட்ரைலிதான்
ட்ரைலிதான்

உள் வட்டத்தில் புளுஸ்டோன் கற்களை நிறுவியுள்ளார்கள். ஆனால், அழகுபடுத்தும் வேலைகள் ஏதும் இல்லை. அதற்கு உள்ளே ட்ரைலிதோன் (Trilithon) உள்ளது. அதாவது, உயரமான இரண்டு தூண்களை மிக நெருக்கமாக நிற்க வைத்து அதன் மேலே செவ்வக வடிவத்தில் கற்களைப் பொருத்தியுள்ளார்கள். இப்போதும், 3 ட்ரைலிதோன் தூண்கள் நிற்கின்றன.

அதற்கும் உள்ளே புளூஸ்டோன் ஹார்ஸ்ஷு (Bluestone Horseshoe) இருக்கிறது. இங்கே அமைக்கப்பட்ட 19 கற்களை தொடக்கத்தில் நீள் வட்டத்தில் வைத்து, பிறகு, தற்போது இருப்பதுபோல நிற்கும் வடிவத்துக்கு மாற்றியிருக்க வேண்டும் என்கிறார்கள். ஸ்டோன்ஹெஞ் மையத்தில், பீடக்கல் இருந்திருக்கிறது. சார்சென் அல்லாத கற்களில் இதுதான் பெரிய கல். அது, படுக்கை வசமாக இருந்ததா அல்லது நின்றதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

10,000 ஆண்டு பயணத்தில், வியப்போடு வாகனத்துக்குத் திரும்பினேன்.

(பாதை விரியும்)            

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in